
தி.மு.க.,வுக்கு தேவை சுயபரிசோதனை :எம்.முரளி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'மறைந்த பிரதமர் இந்திராவினாலேயே தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியவில்லை.
'ஏழை கட்சி...' நல்ல ஜோக்!அ.சேகர், சிதம்பரத்திலிருந்து எழுதுகிறார்: சமீபத்தில், சென்னையில் நடந்த தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 'தி.மு.க., ஏழை கட்சி' என , முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்; இது நல்ல ஜோக்!'ஏழைகளின் சிரிப்பில், இறைவனைக் காண்போம்' என, 1970களில், தி.மு.க., கூறியது, உண்மையே. ஆனால், ஏழைகளுக்குப் பதிலாக, தி.மு.க., எம்.எல். ஏ.,க்கள், எம்.பி.,க்கள் மாவட்ட செயலர்கள், ஒன்றிய செயலர்கள், நகர செயலர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் முதல், அடிமட்ட கட்சியின் தலைவர்கள் வரை, இன்று கோடீஸ்வரர்களாக வலம் வருகின்றனர்.அவர்கள் மட்டும் அல்லாமல், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், வீட்டு வேலைக்காரர்கள் வரை, தொழில் அதிபர்களாகவும், கல்வி வள்ளல்களாகவும் உருவாகிவிட்டனர். இன்று, சிறைக்குள் சென்றுள்ளவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்கள் தான். அவர்கள் நினைத்தால், டில்லியில் கொடி கட்டி பறக்கும் ராம்ஜெத் மலானியை கனிமொழிக்காக வாதாட செய்ததை போல், தங்கள் வழக்குகளையும் எதிர்கொள்ள முடியும்.அதைத்தான் இன்று சிறையில் இருக்கும் வீரபாண்டி ஆறுமுகம், ராஜா, பொன்முடி மற்றும் நேருவும் விரும்புவர். அப்படி இருக்கையில், 'சென்ற தேர்தலில் தோற்று, ஏழையாக இருக்கும் கட்சி தி.மு.க., அதனால், வழக்கறிஞர்கள் ஊதியம் வாங்காமல் வழக்கை சந்தியுங்கள்' என சொல்லியுள்ளதை, தி.மு.க., வழக்கறிஞர்கள் பின்பற்றுவரா என்பது போக, போகத்தான் தெரியும்.முன்னாள் முதல்வர், எப்படி கனிமொழிக்காக, கிரிமினல் வழக்கறிஞர் ராம்ஜெத் மலானிக்கு, பல லட்சங்களை ஊதியமாக கொடுத்து, வழக்கு நடத்தினாரோ, அப்படி, தி.மு.க., வழக்கறிஞர்களுக்கும், கட்சி யே ஊதியம் கொடுத்து, இந்த வழக்குகளை எடுத்து நடத்தச் சொன்னால், மிகுந்த மகிழ்ச்சியாக நடத்துவர்.
'மதுரையா...ஐயையோ...' : வைகை வளவன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: தமிழக மாவட்டங்களில், மதுரையும், ராமநாதபுரமும் கலவரபூமியாக இருக்கும் இரண்டு மாவட்டங்கள். வைகை ஆறில் தண்ணீர் ஓடாவிட்டாலும், ரத்த ஆறு மட்டும் தாராளமாக ஓடும் பெருமை பெற்றது, இந்த இரண்டு மாவட்டங்கள். இந்த கம்ப்யூட்டர் யுகத்திலும், பண்பாட்டிலும், நாகரிகத்திலும் மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள், இவை என்பது வேதனை தரும் விஷயம்!இப்பகுதி மக்கள் வாயால் பேசுவதை விட, அரிவாள், கத்தி, கம்பு, துப்பாக்கியால் பேசுவது தான் அதிகம். மோசமான ஜாதகம் உள்ளவர்கள் தான், இந்த மாவட்டங்களுக்கு கலெக்டராகவும், போலீஸ் அதிகாரிகளாகவும் வருவர்.'ஆன்மிகச் செம்மல்' முத்துராமலிங்கத்தேவர், விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அனுப்பி, இந்து மதத்தின் சிறப்பை உலகறியச் செய்த, பாஸ்கர சேதுபதி, மருது சகோதரர்கள் வாழ்ந்த இந்தப் பகுதி, இப்போது ரத்த பூமியாகிவிட்டது, கொடுமையிலும் கொடுமை. ஜாதி வெறியே கூடாது என, முத்துராமலிங்கத்தேவரின் நினைவுநாளைக் கொண்டாடுவது, இன்று சிம்ம சொப்பனம் போல ஆகிவிட்டது. தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த இமானுவேலின் நினைவு நாளில், ரத்த அபிஷேகம் தான் தாராளமாக நடக்கிறது.அண்மையில், பரமக்குடியில் நடந்த கலவரத்தில், அநியாயமாக ஏழு பேர் இறந்து போனது, நம் நெஞ்சை நெகிழ வைக்கிறது. வேதம்புதிது, கிழக்குச்சீமையிலே, பசும்பொன், விருமாண்டி போன்ற திரைப்படங்கள், இப்பகுதி மக்களின் மனநிலையை நமக்குப் படம் பிடித்துக்காட்டுகின்றன. கமுதி,முதுகுளத்தூர் போன்ற ஊர்களின் பெயரைக் கேட்டாலே உள்ளம் நடுங்குகிறது.இனியாவது, வன்முறையைக் கைவிட்டு, அரிவாள் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, இப்பகுதி மக்கள் மனம் திருந்தவேண்டும்.
கவனிப்பாராஜெ.,:நா.மு.நாச்சியப்பன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: 'ஆசிரியர் நியமனத்தில், அரசு அக்கறை காட்டவில்லை' என, கருணாநிதி கூறியிருக்கிறார். ஆறாவது ஊதியக்குழு அடிப்படையில், மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தங்களுக்கும் கிடைக்கும் என, இடைநிலை ஆசிரியர்கள் ஏமாந்தது, இவருக்கு தெரிந்தே நடந்தது.இடைநிலை ஆசிரியர்களின் இயக்கங்கள், இன்றளவும் தங்களுக்கு நேர்ந்த பாதிப்புகளை எண்ணி, கண்ணீர் வடிக்கின்றன. எதிர்காலத்திலும், இதே பாதிப்பு தொடர்ந்து விடுமே என கலங்குகின்றன. ஆடு நனைகிறதே என, ஓநாய் வருத்தப்படுவது போல, இப்போது கருணாநிதி கவலைப்படுகிறார். முதல்வர் பொறுப்பில் உள்ளவர்களே, நம்ப வைத்து கழுத்தை அறுத்தால், என்ன செய்ய முடியும். கருணாநிதி, இடைநிலை ஆசிரியர்களுக்கு அதைத்தானே செய்தார். மறக்க முடியுமா? எல்லா வகையிலும் தவறுகளுக்கு உடந்தையாக இருந்த, கடந்த ஆட்சி, தற்போது நியாயம் பேசுவது வேதனையாக உள்ளது.