அவச்சொல்லுக்கு ஆளாகலாமா பழனிசாமி?
அவச்சொல்லுக்கு ஆளாகலாமா பழனிசாமி?
அவச்சொல்லுக்கு ஆளாகலாமா பழனிசாமி?
PUBLISHED ON : ஜூன் 07, 2024 12:00 AM

என். வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் படுதோல்வியை தழுவியது. 'தேர்தல் முடிவுகள் அதிகார பலம், பணபலம், பொய் பிரசார பலம், சூழ்ச்சி பலம் மிகுந்த வர்களுக்கு சாதகமாக வந்துள்ளது' என, அரசியல்வாதிகள் வழக்கமாக பாடும் பல்லவியை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் பாடியுள்ளார்.
'வரும், சட்டசபை தேர்தலில் அமோகமாக வெற்றி பெறுவோம்' என்கிறார் பழனிசாமி. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதையாக இருக்கிறது பழனிசாமி தேர்தல் தோல்வியை மறைக்க சொல்லும் சமாதானம்.
இவர், அ.தி.மு.க., கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர் நடந்த சட்டசபை தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., தோல்வியை மட்டும் தான் சந்தித்துள்ளது.
'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்; அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்' என்று எம்.ஜி.ஆர்., போல இவர் வெற்றிக் களிப்பில் மிதக்க முடியவில்லையே.
சில தொகுதிகளில், நாம் தமிழர் என்ற கட்சியை விட கீழான இடத்துக்கு தானே அ.தி.மு.க., தள்ளப்பட்டு உள்ளது. அதேபோல், சில தொகுதிகளில் டிபாசிட்டைப் கூட பறி கொடுத்துள்ளது.
பன்னீரை பகைத்துக்கொண்ட காரணத்தால் தானே அ.தி.மு.க., இந்த அளவுக்கு மோசமான தோல்வி.
பா.ஜ., இந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் சில தொகுதிகளில் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம் அடைந்ததன் வாயிலாக, அந்த கட்சி மக்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
இதை எல்லாம் மனதில் கொண்டு, வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., -- பா.ம.க., -- த.மா.கா., போன்ற கட்சிகளையும் அ.தி.மு.க., கூட்டணியில் சேர்த்து தேர்தலைச் சந்திக்க பழனிசாமி முடிவு எடுக்க வேண்டும்.
அப்படி முடிவு எடுக்கத் தவறினால்தி.மு.க., கூட்டணி, வரும் சட்டசபை தேர்தலிலும் 234 தொகுதிகள் வெற்றி பெற்றால் கூட ஆச்சரியம் இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டிக் காத்த அ.தி.மு.க., இயக்கம், பழனிசாமியின் தவறான முடிவுகளால் காணாமல் போனது என்ற அவச்சொல்லுக்கு ஆளாகாமல், பழனிசாமி புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.
நேர்மை திறனற்றோர் பேச்சை புறந்தள்ளுவோம்!
கே.முத்துக்கிருஷ்ணன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் சென்னை
உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 'பிறர் சாப்பிட்ட
இலையில் சில பக்தர்கள் புரளுகின்றனர். இந்த பழக்கம் தடை செய்யப்பட
வேண்டும்' என்பதே அது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதியரசர்,
'இந்தப் பழக்கத்தை கடை பிடிக்கும் பக்தர்கள், தாங்களாகவே தங்கள் சுய
விருப்பத்தில் அவ்வாறு செய்கின்றனர். அவர்களை யாரும் நிர்பந்திப்பதுபோல்
தெரியாத காரணத்தாலும், மேலும் இது தொன்று தொட்டு நடந்து வரும் ஒரு
குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த பழக்கம் என்பதாலும்மேற்படி வழக்கு தள்ளுபடி
செய்யப்படுகிறது' என்று தீர்ப்பளித்துள்ளார்.
இதேபோல், சென்னை உயர்
நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, 'சில
பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்துக் கொள்கின்றனர். இதையும் தடை
செய்யவேண்டும்' என்பதே அந்த வழக்கு.
இந்த வழக்கில் தீர்ப்பு
வழங்கிய வேறொரு நீதியரசர் இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்போது, 'இந்த
சடங்கினால் மனுதாரர் எந்த வகையில் பாதிக்கப்படுகிறார் என்று அவருடைய
மனுவில் குறிப்பிடவில்லை. மேலும் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை இந்த
வகையில் நிறைவேற்றிக் கொள்வதில் ஆத்ம திருப்தி கொள்கிறார்கள். மனுதாரர்
அவர் தலையை இதில் நுழைக்காமல் இருந்தாலே போதுமானது' எனும் கருத்துபட
தீர்ப்பளித்து மேற்படி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.
மேற்படி இரண்டு வழக்குகளிலிருந்தும், ஒரு உண்மை புலப்படுகிறது.
அது என்னவென்றால், ஹிந்து மதத்துக்கு எந்த விதத்திலாவது பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதே சிலருக்கு வேலையாக இருக்கிறது.
இதற்கு
முன் ஒருவர், கந்தசஷ்டி கவசத்தை பழித்து கிண்டலடித்தார். ஒரு வேளை மேற்படி
வழக்குகளில் மனுதாரர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருந்தால், இவர்கள்
அடுத்து தீ மிதிப்பது, நாக்கில் வேல் குத்துவது, வாயின் குறுக்கே அலகு
குத்துதல், பறவை காவடி எடுத்தல், இருமுடியை சுமந்து செல்லுதல் போன்ற பழக்க
வழக்கங்களுக்கும் தடை வேண்டி, நீதிமன்றத்தை நாடுவர்.
நல்ல வேளை,
இவர்கள் கனவில் மண் விழுந்தது. ஒரு வேளை இந்த இரண்டு வழக்குகளையும் ஒரே
நீதியரசர் தள்ளுபடி செய்திருந்தால் அதற்கும் ஒரு உள்ளர்த்தத்தை கற்பிக்க
ஒரு கூட்டம் காத்திருக்கிறது என்பதையும், ஹிந்துக்கள் மறந்து விடக்கூடாது.
இவர்களுக்கு உண்மையிலேயே மற்றவர்கள் கஷ்டப்படுகின்றனரே என்ற
நினைப்பு இருக்குமானால், வேறு சில மதங்களில் நடக்கும் சில பழக்க
வழக்கங்களைத் தடுத்து நிறுத்தட்டுமே!
நெஞ்சில் துணிவின்றி, நேர்மைத் திறனின்றி வஞ்சகம் செய்வோர் பேச்சை புறந்தள்ளுவோம்!
குடும்ப கட்சிகளுக்கு எச்சரிக்கை!
எம்.எஸ்.
ரவிசங்கர், ஹைதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: ஒரு குழு அதிகாரத்தில் இருக்கும் போது, மற்றொரு குழு
அதிகாரத்தை கைப்பற்ற முயலும். முதல் குழு அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள
முயலும். இந்த இரண்டு குழுக்களுக்கும் இடையே உள்ள போராட்டம் தான் அரசியல்
என்கிறது அரசியல் விஞ்ஞானம்.
ஆனால், வென்றது ஜனநாயகம் என்பதில்
மிக்க மகிழ்ச்சி. எத்தனை அவதுாறுகள், சந்தேகங்கள் ஓட்டு இயந்திரத்தின் மீது
கிளம்பின. எங்கு அழுத்தினாலும் தாமரைக்கு தான்விழுமாம். மேலும், பெட்டியை
மாற்றி விடுவார்களாம். ஓட்டுச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என்ற
வார்த்தை எங்கே போயிற்று.
மோடியின் வலது கையாக தேர்தல் ஆணையம்
செயல்படுகிறது என்றனர் எதிர்க்கட்சியினர். இப்போதாவது ஓட்டு இயந்திரத்தின்
நம்பகத் தன்மை, தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்வரா இந்த
எதிர்கட்சியினர்.
இரண்டாவது, பா.ஜ.,வின் வெற்றியும் சாதாரணமானது அல்ல, கடின உழைப்பினால் தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்திருக்கிறது.
மூன்றாவதாக,
கார்கே அவர்களின் உழைப்பும் பக்குவமும்தான் காங்கிரஸ் இத்தனை தொகுதிகளில்
வென்றதற்கு காரணம். அதாவது, நேரு குடும்பத்தின் பிடியில் இருந்து காங்கிரஸ்
வெளியே வந்தால் அதற்கு சிறந்த எதிர்காலம் என்பதையும் இந்த தேர்தல்
தெரிவிக்கிறது
நான்காவதாக, தெலுங்கானாவிலும் ஒரிசாவிலும்,
ஜம்மு-காஷ்மீரிலும் குடும்ப கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு
வந்திருக்கிறது. இது மற்ற குடும்பகட்சிகளுக்கு எச்சரிக்கை.
மேலும்,
நகர்ப்புறத்தில் இருப்பவர்கள் படித்த புத்திசாலிகள், கிராமத்தில்
இருப்பவர்கள் படிக்காத முட்டாள் என்ற எண்ணத்தை தகர்த்து தள்ளியது இந்த
தேர்தல்.