Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ எகிறிய மின்கட்டணம்!

எகிறிய மின்கட்டணம்!

எகிறிய மின்கட்டணம்!

எகிறிய மின்கட்டணம்!

PUBLISHED ON : ஜூன் 02, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வரும் மின் கட்டணத்தைப் பார்க்கும் போது தலை சுற்றுகிறது. தி.மு.க., ஆட்சிக்கு முன் இருந்த கட்டணத்தை விட இப்போது, ஏறத்தாழ இரு மடங்காகி விட்டது.

வெயில் காலத்தில் மட்டும், 'ஏசி'யை உபயோகிப்பது அதிகமாக இருக்கும். எங்கள் வீட்டில், இரண்டு, 'ஏசி' கருவிகள் உள்ளன. இப்போதைய பயன்பாடு தான், நான்கு ஆண்டுகளுக்கு முன்பும்!

முன்பெல்லாம், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என்ற வீதத்தில் கட்டணம், 4,500 ரூபாயாக இருந்தது. இப்போது அதே அளவு பயன்பாட்டுக்கு, 8,000 ரூபாய் மின் கட்டணம் வருகிறது.

அரிசி, பருப்பு என்பது போல, மின்சாரமும் வீட்டிற்கு தேவையான ஒன்றாகி விட்டது. இந்த கட்டண உயர்வால், எல்லா மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மின்சார பயன்பாட்டின் அளவை கணக்கெடுக்க வருபவர்கள் கூட, சில மாதங்கள் எடுக்காமல், தோராயமாக போட்டுக் கொள்கின்றனர். கேட்டால், 'இது அடுத்த மாதம் எடுக்கப்படும் மின் பயன்பாடு அளவில் சரி செய்யப்படும்' என்று கூறுகின்றனர்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தன் சாதனைப் பட்டியல் என எதை எதையோ சேர்க்கிறது. இதையும் சேர்க்கலாம்!



வரலாறு மாறாது!


ஜெயராமன் கல்யாண சுந்தரம், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஹிந்துத்வா தலைவர்' என, பா.ஜ., அண்ணாமலை சொன்னதற்கு, அ.தி.மு.க.,வினர் பொங்க ஆரம்பித்து விட்டனர்.

ராமர் கோவில், கரசேவை, பொது சிவில் சட்டம், ஆடு, மாடு பலியிடத் தடை என, ஜெயலலிதாவின் நடவடிக்கைகளில், அப்பட்டமாக ஹிந்துத்வாவின் சாயல் வெளிப்பட்டது. அதை எல்லாம் மறந்துவிட்டு, அண்ணாமலை சொன்னதற்காக, அவர்கள் திடீர் எதிர்ப்பாளர்களாக மாற வேண்டியதில்லை.

'அண்ணாமலை அ.தி.மு.க.,வில் சேர்ந்து, அம்மாவை பற்றி புகழட்டும்' என்கிறார் ஆர்.பி.உதயகுமார்.

உண்மையிலேயே என்ன மாதிரி எதிர்வினை வந்திருக்க வேண்டும் என்றால், 'ஜெயலலிதா ஹிந்து மக்களுக்கானவர் மட்டும் அல்ல; அனைவருக்குமான தலைவராக இருந்தார்' என, அவர் தோழி சசிகலா சொல்லி இருக்க வேண்டும்.

வரலாற்றை சற்று பின்னோக்கி பார்த்தோமானால், 1991 - 1996 ஜெயலலிதா ஆட்சியின் போதே, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் ரகசிய உறவில்தான் இருந்தன.

கடந்த, 1993 மார்ச்சில், சென்னையில் பா.ஜ.,வினரின், அத்வானி தலைமையிலான பேரணி பொதுக் கூட்டத்திற்கு எதிர்ப்பு வந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா, அதற்கு ஆதரவு அளித்து அனுமதி கொடுத்தார்.

'பா.ஜ.,வுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை' என, நெடுஞ்செழியன்அன்று சொன்னதை மறந்து, இன்று எதிர்ப்பு குரல் கொடுக்கும் ஆர்.பி.உதயகுமார், ஜெயகுமார் போன்றவர்கள், முன்னாட்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஹிந்து மத கலாசாரம் மற்றும் கொள்கைகளை, வழிகாட்டுதல்களை, பா.ஜ., தலைவர்களை விட, மிக தீவிரமாகக் கடைபிடித்தவர் ஜெயலலிதா.

இது குறித்து தி.மு.க., வினர் விமர்சித்தபோது கூட, 'ஆமாம்... நான் அப்படி தான்' என வெளிப்படையாக, தைரியமாக பதில் சொன்னவர் ஜெயலலிதா. அண்ணாமலைக்கு இந்த, 'லீட்' எடுக்கத் தெரியவில்லை; உதயகுமாரும் சொதப்புகிறார்.

காலம் மாறலாம்; காட்சி மாறலாம்; வரலாறு மாறாது!

---

ஒன்றும் புரியவில்லையே சிபல்?


எஸ்.மணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தேர்தல் நடந்து முடிந்ததும், தேஜஸ்வி யாதவ் சிறைக்கு செல்வார் என பிரதமர் மோடி கூறுகிறார். இதன் வாயிலாக சி.பி.ஐ., போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் தன் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார்' என, புது கரடி ஒன்றை கட்டவிழ்த்து விட்டுள்ளார், முன்னாள் காங்கிரஸ்காரரும் இந்நாள் ராஜ்யசபா சுயேச்சை எம்.பி.,யுமான கபில் சிபல்.

பிரதமர் ஒப்புக் கொள்கிறாரா இல்லையா என்பதை பிறகு பார்க்கலாம்.

தற்போது, சி.பி.ஐ., அமலாக்கத் துறை, அன்னிய செலாவணி துறை ஆகியவை, நாட்டில் உலவும் அரசியல் மற்றும் பொருளாதார குற்றவாளிகள் மீது வழக்கு தொடர்ந்தால், அவர்கள் அனைவருக்கும் ஜாமின் பெற்றுத் தருவதையே தன் பிரதான தொழிலாக கொண்டுள்ளார் கபில் சிபல்.

அவ்வாறு ஜாமின் பெற்று தருவதற்கு தோதாக, உச்ச நீதிமன்றமும், அதில் பணியாற்றும் நீதிமான்கள் அனைவரும் தன் கட்டுப்பாட்டுக்குள் உள்ளனர் எனச் சொல்ல வருகிறாரா? ஒன்றும் புரியவில்லையே?



சராசரி அரசியல்வாதியான கெஜ்ரிவால்!


என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில் சிக்கி சிறைப் பறவையான அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் இருந்த போது தன் அருமை மனைவி ஜான்சி ராணி போல வீராவேசமாக செயலாற்றினார் என்று பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறார்.

யாரை, யாரோடு ஒப்பிட்டுப் பேச வேண்டும் என்ற விவஸ்தை சிறிதும் இல்லாமல், தன் மனைவியை ஓவராகப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்துப் போராட்டம் நடத்தி, இந்திய வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ஜான்சிராணியான லட்சுமி பாய்.

ஊழல்வாதியான தன் கணவருக்கு வக்காலத்து வாங்கும் தன் மனைவியை அஞ்சா நெஞ்சம் படைத்த வீராங்கனையான ஜான்சி ராணியோடு ஒப்பிட்டு கெஜ்ரிவால் பேசுவது சுத்த அபத்தம் இல்லையா?

இவர் பேச்சை நினைக்கும் போது ஒரு திரைப்படத்தில், 'யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே... அட அண்டங்காக்கைக்கும் குயிலுக்கும் பேதம் புரியலே...' என்று கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் தான், நம் நினைவுக்கு வருகிறது.

ஜான்சி ராணி லட்சுமிபாய், சிவகங்கை ராணி வேலு நாச்சியார் போன்ற வீர மங்கைகள் எல்லாம் அநீதி, அக்கிரமத்தை எதிர்த்து தைரியமாக போராடியவர்கள். ஆனால், கெஜ்ரிவாலின் மனைவி தன் கணவரான ஊழல்வாதிக்கு ஆதரவாகத் தானே செயல்படுகிறார்?

இதன் வாயிலாக, கெஜ்ரிவால், தன் கட்சியினருக்கு வேறு ஒரு தகவலையும் உணர்த்தி விட்டார். அதாவது, தன் கட்சியில் அடுத்த அதிகார மையம், வாரிசு எல்லாம் தன் மனைவி தான் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார். வாரிசு அரசியல், ஊழல் அரசியலை எதிர்த்து கட்சி துவங்கிய கெஜ்ரிவாலும்,கடைசியில் அந்த வழிகளில் தடம் மாறாமல் பயணிக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் படத்தில், கிளைமாக்சில் சதி திட்டம் தீட்டி, வில்லன் ரகுவரனை கொல்லும் ஹீரோ அர்ஜுன், 'கடைசியில் என்னையும் அரசியல்வாதியா மாத்திட்டீங்களேடா' என விரக்தியுடன் சொல்வார். அதுபோல தான், கெஜ்ரிவாலை பார்த்தும் நமக்கும் சொல்ல தோன்றுகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us