ADDED : செப் 03, 2011 12:36 AM
சிவகங்கை : டாஸ்மாக் பணியாளர்களை இனி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியிட மாற்றம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தனியாரிடம் இருந்த மதுபானக்கடைகளை மாற்றி, அரசே நேரடி விற்பனை நிலையமான டாஸ்மாக் கடைகளை துவக்கியது.
கிராமம் முதல் நகரங்கள் வரை துவக்கப்பட்ட இந்த கடைகளில் பணியாற்ற இரண்டு விற்பனையாளர்கள், ஒரு கண்காணிப்பாளரை நியமித்தது. கடைகளில் நியமிக்கப்பட்டவர்களிடம் இருந்து அவரவர் பணிக்கு ஏற்ப டெபாசிட் வசூலிக்கப்பட்டது.கிராமப்புறங்களில் உள்ள கடைகளை விட நகர்புறங்களில் உள்ள கடைகளில் கூடுதல் விற்பனை ஆவதால் இவர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை கிடைக்கும். கடந்த தி.மு.க., ஆட்சியில் கிராமப்புற கடைகளில் வேலை பார்த்த பணியாளர்கள் பலர் ஆளும் கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி நகர்புற கடைகளுக்கு மாறுதல் பெற்றனர்.புதிய ஆட்சி வந்ததும் இவர்களை மீண்டும் அந்தந்த இடங்களுக்கே மாற்ற வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் நாள் ஒன்றுக்கு இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மாற்றம் செய்ய வேண்டும் என அரசு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.டாஸ்மாக் அதிகாரி ஓருவர் கூறுகையில், ''கடந்த தி.மு.க., ஆட்சியில் ஆளும் கட்சி தொ.மு.ச., வின் செல்வாக்கை வைத்து நகர்புற கடைகளுக்கு சிலர் மாற்றலாகினர். இதனால் கிராமப்புறங்களில் உள்ள பணியாளர்கள் தங்களுக்கு மட்டும் குறைவான ஊக்கத்தொகை கிடப்பதாக புகார் தெரிவித்தனர். இதனால் அரசு 2 லட்சங்களுக்கு மேல் விற்பனையாகும் கடைகளில் வேலைபார்க்கும் அனைத்து பணியாளர்களையும் இனி சுழற்சி முறையில் மாற்ற உத்தரவிட்டுள்ளது,'' என்றார்