
புதுடில்லி : ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவாக, டில்லியில் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.
இந்தியா கேட்டில் துவங்கிய இந்த பேரணி, திலக் மார்க் வழியாகச் சென்று, உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் ராம்லீலா மைதானத்தில் முடிவடைந்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, உணர்ச்சிமயமாக கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். ஹசாரே ஆதரவாளர்களான சுவாமி அக்னிவேஷ், அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி உள்ளிட்டோர், இந்த பேரணிக்கு தலைமை வகித்துச் சென்றனர். 'பேஸ்புக், கூகுள் பிளஸ்' ஆகிய சமூக இணையதளங்கள் மூலமும், இந்த பேரணியில் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டால், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். நேற்று விடுமுறை நாள் என்பதால், மாணவர்கள், அலுவலகம் செல்வோர் ஆகியோரும், ஆர்வத்துடன் இந்த பேரணியில் பங்கேற்றனர். இந்த பிரமாண்ட பேரணியால், டில்லி நகரம் நேற்று குலுங்கியது.
பிரதமர் வீடு முன் போராட்டம்: பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங் வீடு அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலையில், ஏராளமானோர் நேற்று போராட்டம் நடத்தினர். ஜன் லோக்பால் மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய வலியுறுத்தி, கோஷம் எழுப்பியபடி, பிரதமர் வீட்டுக்கு செல்ல முயன்றனர். போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, கைது செய்தனர். 80 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.