PUBLISHED ON : ஆக 05, 2011 12:00 AM

சி.பி.ஐ., ஆவேசம்... ஏட்டயாவுக்கு எலும்பு முறிவு!
''மாணவர் காங்கிரசுல கோஷ்டிப்பூசல் தலைவிரிச்சு ஆடுது பா...!'' என, முதல் ஆளாக பேச ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''அந்தக் கட்சிக்கு இது ஒன்னும் பெரிய விஷயம் கிடையாதேங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''விஷயத்தை கேளு பா... சென்னை, திருவள்ளூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் பயிற்சி முகாமை, சத்தியமூர்த்திபவன்ல நடத்தணும்னு, ஒரு தலைவரின் கோஷ்டி விருப்பம் தெரிவிச்சிருக்கு... ஆனா, இன்னொரு தலைவருடைய கோஷ்டி, வட சென்னையில தான் நடத்தணும்னு அடம் பிடிச்சிருக்கு...
''ரெண்டு கோஷ்டிகளும் ஆளுக்கொரு இடத்துல நடத்தணும்னு தகராறு செஞ்சிட்டு இருக்கற தகவல், டில்லிக்கு போயிருக்கு பா... உடனே, 'ரெண்டு இடத்துலேயும் பயிற்சி முகாம் நடத்த வேணாம்... ரெண்டு கோஷ்டிக்கும் பொதுவா, திருவள்ளூர் மாவட்டத்துல நடத்துங்க'ன்னு உத்தரவிட்டுருக்கு... அதன்படி, சமீபத்துல ஊத்துக்கோட்டையில பயிற்சி முகாமை நடத்திருக்காங்க...
''ஆனா, சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஒட்டு மொத்தமா பயிற்சி முகாம்ல கலந்துக்காம புறக்கணிச்சிட்டங்க பா...'' என, நடந்த சம்பவத்தை விளக்கினார் அன்வர்பாய்.
''மதுரையில அடக்கி வாசிச்சிருக்கா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
''புரியற மாதிரி தெளிவா சொல்லும் வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
''திருவாரூர்ல ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, எல்லா மாவட்டங்களிலும் தி.மு.க.,காரா போராட்டம் நடத்தினா ஓய்... ஆனா, தென் மாவட்டங்கள்ல மட்டும் கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கா... அதிலும், மதுரையில போராட்டத்துக்கான அறிகுறியே தெரியாம இருந்திருக்கு...
''ஏற்கனவே நகர செயலர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள், நில மோசடி வழக்குல கைதாகி ஜெயில்ல இருக்காங்க... இந்நிலையில, போராட்டம் நடத்தினா மிச்சம் மீதி இருக்கறவா எல்லாம் ஜெயிலுக்கு போகற நிலை வந்துடும்னு பயந்துண்டு, அமைதியா இருந்துட்டா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''சி.பி.ஐ., விசாரணைக்குப் போன ஏட்டய்யாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருச்சாம்ங்க...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் அந்தோணிசாமி.
''வழுக்கி விழுந்துட்டாரா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''கிண்டல் பண்ணாதீங்க... ஐகோர்ட் வக்கீல் சங்கரசுப்பு மகன் சதீஷ் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்குது... சதீஷ் உடலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துட்டுப் போன ஏட்டை அழைச்சு, சி.பி.ஐ., விசாரிச்சிருக்குங்க... சதீஷ் உடல்ல காயம் ஏற்பட்டதுக்கு, குளத்துல இருந்த மீன்கள் கடிச்சது தான் காரணம்னு, லோக்கல் போலீசார் ஏற்கனவே சொல்லிருக்காங்க...
''ஏட்டுகிட்ட சி.பி.ஐ., அதிகாரிகள் கேள்விமேல கேள்வி கேட்டுருக்காங்க... ஆனா, மனுஷன் வாயை திறக்கலை... ஒரு அதிகாரி ரொம்ப சூடாகி, கம்பை கையில எடுத்து வெளுத்து வாங்கிட்டாராம்ங்க... ஏட்டுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுருக்கு... அதை வெளியில சொல்ல முடியாம ஏட்டு புலம்பிட்டு இருக்காருங்க...'' எனக் கூறிவிட்டு, அந்தோணிசாமி கிளம்பினார்; பெஞ்சில் அமைதி திரும்பியது.