/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ 'சர்வே' முடிவுகளை பார்த்து அரண்டு போன ஆளுங்கட்சி! 'சர்வே' முடிவுகளை பார்த்து அரண்டு போன ஆளுங்கட்சி!
'சர்வே' முடிவுகளை பார்த்து அரண்டு போன ஆளுங்கட்சி!
'சர்வே' முடிவுகளை பார்த்து அரண்டு போன ஆளுங்கட்சி!
'சர்வே' முடிவுகளை பார்த்து அரண்டு போன ஆளுங்கட்சி!
PUBLISHED ON : ஜூன் 01, 2025 12:00 AM

''முதல்வரின் கனவு திட்டத்துலயே முறைகேடு நடக்கறது ஓய்...'' என்றபடியே, பில்டர் காபியை உறிஞ்சினார் குப்பண்ணா.
''விளக்கமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''கிராமங்கள்ல இருக்கிற துவக்கப்பள்ளிகள்ல, முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்பாட்டுல இருக்கோல்லியோ... ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களை ஒருங்கிணைத்து, இந்த திட்டத்தை செயல்படுத்தறா ஓய்...
''இந்த குழுக்கள்ல இருந்து, கூட்டமைப்பு பொறுப்பாளர் ஒருத்தரை நியமித்து, அவருக்கு சம்பளமும் வழங்கறா... துாத்துக்குடி மாவட்டத்துல சில பள்ளிகள்ல, சம்பளம் வழங்கறது, சமையல் பொருட்கள் வாங்கறதுல நிறைய முறைகேடு நடக்கறதா, கோவில்பட்டி யூனியன், பாண்டவர்மங்கலம் துவக்கப்பள்ளியின் சமையலர் முருகலட்சுமி, முதல்வரின் தனி பிரிவுக்கு புகார் அனுப்பி இருக்காங்க ஓய்...
''அதுல, தமிழ்நாடு வாழ்வாதார இயக்க மேலாளர் துணையோடு, கூட்டமைப்பு பொறுப்பாளர், காலை உணவு திட்ட நிதியில முறைகேடு பண்றதா குறிப்பிட்டிருக்காங்க... 'இதுக்கு தீர்வா, பஞ்சாயத்து கூட்டமைப்பு பொறுப்பாளர்களை, சுழற்சி முறையில் தேர்வு செய்யணும்'னு சமையலர்கள் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சங்கர் இங்கன உட்காரும்... உம்ம தங்கச்சி ஜெயபாரதி சவுக்கியமா வே...'' என, நண்பரிடம் நலம் விசாரித்த பெரியசாமி அண்ணாச்சியே, ''வேளாண் பல்கலைக் கழகம் அமைய விடாம தடுக்காவ வே...'' என்றார்.
''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'மதுரையில வேளாண் பல்கலை அமைக்கப்படும்'னு அறிவிச்சு, நாலு வருஷம் ஓடிட்டு... கோவை வேளாண் பல்கலை அதிகாரிகள் சிலர், 'இன்னொரு பல்கலை வந்தா, நம்ம முக்கியத்துவம் குறைஞ்சிடும்'னு பயப்படுதாவ வே...
''இதனால, 'புதுசா பல்கலை அமைக்கணும்னா, பல நுாறு ஏக்கர் நிலம் வேணும்... வகுப்பறைகள், ஆய்வகங்கள், ஆடிட்டோரியம்னு 400 முதல் 500 கோடி ரூபாய் வரை செலவாகும்'னு அரசை பயமுறுத்துதாவ வே...
''ஆனா, மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 354 ஏக்கர் நிலம் இருக்கு... இங்க ஏற்கனவே கூடுதல் கட்டடங்கள், வகுப்பறை, ஆய்வகங்கள் நிறைய இருக்கு வே...
''தனியா ஒரு அரசாணை போட்டு, மதுரை வேளாண் கல்லுாரியை வேளாண் பல்கலைன்னு பெயர் மாத்தினா போதும்... ஆனாலும், அதிகாரிகள் பேச்சை கேட்டு, அரசு அலட்சியமா இருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
''சர்வேயால அதிர்ச்சியில இருக்காங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''த.வெ.க., தலைவர் விஜய், கோவையில் பூத் ஏஜன்ட்கள் மாநாட்டை நடத்தி, கூட்டத்தை காட்டியது ஆளுங்கட்சிக்கு பதற்றத்தை குடுத்திருக்கு... 2021 சட்டசபை தேர்தல்ல, கோவையில இருக்கிற 10 சட்டசபை தொகுதிகள்ல ஒண்ணுல கூட தி.மு.க., ஜெயிக்கல பா...
''அதே நிலைமை, 2026 தேர்தல்லயும் வந்துடக் கூடாதுன்னு, 'மாஜி' அமைச்சர் செந்தில் பாலாஜியை அங்க தி.மு.க., களம் இறக்கி விட்டிருக்கு... அவரது ஏற்பாட்டுல, கோவை மாவட்டம் முழுக்க தனியார் ஏஜன்சி வாயிலா சமீபத்துல ஒரு சர்வே எடுத்திருக்காங்க பா...
''மகளிருக்கு மாசம் 1,000 ரூபாய் உரிமை தொகை உட்பட பல நலத்திட்டங்களால, அரசுக்கு அமோக ஆதரவு கிடைக்கும்னு ஆவலா காத்திருந்தாங்க... ஆனா சர்வேயில, 'விஜய்க்கு தான் எங்க ஓட்டு'ன்னு பலரும், குறிப்பா பெண்கள் வெளிப்படையா சொன்னதை கேட்டு, ஆளுங்கட்சி வட்டாரம் அரண்டு போயிருக்குது பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் மவுனமானது.