/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ஒன்றிய அதிகாரிகளின் கறார் கமிஷன் பேரம்! ஒன்றிய அதிகாரிகளின் கறார் கமிஷன் பேரம்!
ஒன்றிய அதிகாரிகளின் கறார் கமிஷன் பேரம்!
ஒன்றிய அதிகாரிகளின் கறார் கமிஷன் பேரம்!
ஒன்றிய அதிகாரிகளின் கறார் கமிஷன் பேரம்!
PUBLISHED ON : மார் 12, 2025 12:00 AM

''கூடுதல் பொறுப்பால குமுறுறாங்க...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந் தார், அந்தோணிசாமி.
''எந்த துறையில வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''கோவை மாநகராட்சியில், ஒரு இன்ஜினியர் எந்த வேலையும் செய்யாம அலட்சியமா இருப்பாருங்க... இதனால, அவர் வசம் ஒரு வார்டை மட்டும் ஒதுக்கியிருந்தாங்க...
''மாசம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குற அவரை, 'ஒரு வார்டு; 1 லட்சம்'னே சக அதிகாரிகள் கிண்டல் அடிச்சாங்க... அப்புறமா, ஆளுங்கட்சி புள்ளி சிபாரிசால, அந்த இன்ஜினியருக்கு மத்திய மண்டலத்துல இரண்டு வார்டு, கிழக்கு மண்டலத்துல ஒரு வார்டுன்னு ஒதுக்குனாங்க...
''இப்ப என்னடான்னா, வடக்கு மண்டலத்துல, 20 வார்டுகளை கவனிக்கிற பொறுப்பையும் கூடுதலா ஒதுக்கியிருக்காங்க... இதே மாதிரி, தெற்கு மண்டலத்திலும் ஏற்கனவே மூணு வார்டுகளை கவனிக்கிற ஜூனியர் இன்ஜினியர் ஒருத்தருக்கு, 20 வார்டுகளை கூடுதல் பொறுப்பா குடுத்திருக்காங்க...
''இதனால, 'ஒரே அதிகாரியால, ஒரே நேரத்துல மூனு மண்டலங்கள்ல எப்படி வேலை பார்க்க முடியும்'னு கவுன்சிலர்கள் புலம்புறாங்க...'' என் றார், அந்தோணிசாமி.
''முத்துகுமார், கனகராஜ் வராங்க... சுக்கு காபி குடுங்க நாயரே...'' என்ற அன்வர்பாயே, ''கறாரா பேசி அனுப்பிட்டாரு பா...'' என்றார்.
''யார் ஓய் அது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., சண்முகையா... நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துல, ஒரு விவசாயியை தாக்கியதா, சண்முகையாவின் அண்ணன் முருகேசன் உட்பட எட்டு பேர் மீது, போலீஸ்ல வழக்கு பதிவு செஞ்சிருக்காங்க பா...
''சீக்கிரமே இவங்களை கைது செய்யவும் வாய்ப்பிருக்காம்... இந்த சூழல்ல, சமீபத்துல எஸ்.பி., ஆல்பர்ட் ஜானை எம்.எல்.ஏ., சண்முகையா நேர்ல பார்த்து பேசினாரு பா...
''பொதுவான கோரிக்கை சம்பந்தமா ஒரு மனுவை குடுத்துட்டு, 'என் அண்ணன் மீது பொய் புகார்ல வழக்கு போட்டிருக்காங்க... அதை முடிச்சு வைக்கணும்'னு கேட்டிருக்காரு பா...
''எஸ்.பி.,யோ, 'வழக்கு பதிவாகியிருக்கு... போலீசார் விசாரிக்கிறாங்க... சட்டப்படியே அனைத்து நடவடிக்கையும் இருக்கும்'னு கறாரா சொல்லவே, எம்.எல்.ஏ., முகம் தொங்கிப் போய் திரும்பிட்டாருப்பா...'' என்றார், அன்வர்பாய்.
''அதிகாரிகளின் ஆட்டத்தை கேளுங்க வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியத்துல, கிராம ஊராட்சிகளுக்கான அதிகாரி ஒருத்தர் இருக்காரு... இப்ப, ஒன்றியத்துல அரசியல் தலைவர் பதவிக் காலம் முடிஞ்சுட்டதால, இவர் வச்சதுதான் சட்டமா இருக்கு வே...
''இவரை அனுசரிச்சு போகலன்னா, யாருமே இங்க வேலை பார்க்க முடியாது... தனக்கு சரிப்பட்டு வராத பி.டி.ஓ., ஒருத்தரை, சமீபத்துல வேற இடத்துக்கு மாத்திட்டாரு வே...
''தனக்கு சரிப்பட்டு வர்ற பி.டி.ஓ.,வுக்கு தான், 'போஸ்டிங்க்' போடணும்கிறதால, வேற யாரையும் இந்த இடத்துக்கு வரவிடாம தடுத்துட்டு இருக்காரு... இவரது கூட்டாளியான இன்ஜினியர் ஒருத்தர், 'ஊராட்சிகள்ல நடக்கிற பணிகளுக்குரிய பில்களை பாஸ் பண்ணனும்னா, எனக்கு 5, அதிகாரிக்கு 10 பர்சன்ட் கமிஷன் வெட்டணும்'னு கறாரா கேட்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''குமார், அருள் இப்படி உட்காருங்கோ...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.