Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சேர்மன், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சேர்மன், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சேர்மன், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சேர்மன், கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ADDED : ஜூலை 26, 2011 01:33 AM


Google News

வள்ளியூர் : வள்ளியூர் யூனியன் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் தகுந்த காரணம் இன்றி நிறுத்தி வைத்த டென்டரை மீண்டும் விடக்கோரி யூனியன் சேர்மன் உட்பட 15 கவுன்சிலர்கள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.வள்ளியூர் யூனியனில் கவுன்சிலர்களுக்கான மாதாந்திர கூட்டம் யூனியன் சேர்மன் ஞானதிரவியம் தலைமையில் நேற்று நடப்பதாக கவுன்சிலர்களுக்கு அஜண்டா வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று காலை 11 மணிக்கு யூனியன் புதிய கட்டடம் திறப்பு விழாவிற்கு பிறகு முதன் முதலில் யூனியன் சேர்மன் அறையில் கவுன்சிலர்கள் கூடினர்.அப்போது மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கூட்டத்தை ரத்து செய்து உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து யூனியன் சேர்மன் ஞானதிரவியம் தலைமையில் துணைத் தலைவர் ஆதிபரமேஷ்வரன், கவுன்சிலர்கள் பரமசிவம், மாணிக்கம், இன்னாசி, இளங்கோ, கலைசிகாமணி, நடராஜன், திரவியம், ராமநாராயண பெருமாள், அசோகன், தங்கம், சிவராசகனி, ஏஜெலின்மெர்ஸி, விஜயலெட்சுமி, பானுமதி ஆகியோர் கூட்ட அரங்கிற்கு சென்று தரையில் உட்கார்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.



இதனால் வள்ளியூர் யூனியன் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.உள்ளிருப்பு போராட்டம் குறித்து விசாரித்தபோது, கடந்த மே மாதம் நடந்த யூனியன் கூட்டத்தில் யூனியன் பொது நிதியிலிருந்து 41.31 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு அடிப்படை வளர்ச்சி பணிகள் செய்ய ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள யூனியன் கான்ட்ராக்டர்களுக்கு டென்டர் கேட்டு கடந்த 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதன்படி கான்ட்ராக்டர்கள் பணிக்கான டென்டர் டெபாசிட் தொகையை கடந்த 21ம் தேதி செலுத்தி மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை யூனியன் அலுவலகத்தில் செலுத்தினர். மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்த புள்ளிகள் 22ம் தேதி மாலை 4.30 மணிக்கு திறக்கப்பட வேண்டிய நேரத்தில் ஒப்பந்தப்புள்ளிகளை திறக்க வேண்டாம் என்று யூனியன் அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாய்மொழி உத்தரவு வந்துள்ளது.



இதனால் யூனியன் அதிகாரிகள் ஒப்பந்தப்புள்ளிகளை திறக்காமல், திறக்கப்படும் மறுதேதி அறிவிக்காமல் ரத்து செய்தனர். இதனால் அதிருப்தியடைந்த யூனியன் சேர்மன் ஞானதிரவியம் கவுன்சிலர்களிடம் கவுன்சில் கூட்டத்தில் முறையாக தீர்மானம் நிறைவேற்றி வளர்ச்சி பணிகளை செய்ய எந்தவித காரணமும் இன்றி மாவட்ட நிர்வாகம் வாய்மொழி உத்தரவாக ஒப்பந்தப்புள்ளிகளை திறக்காமல் நிறுத்தி வைத்திருப்பது கண்டனத்திற்குறியது. ஆகவே கூட்டத்தை ரத்து செய்து மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.இதுகுறித்து யூனியன் பிடிஓக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.



அதன்படி கிராம பஞ்.,களின் உதவி இயக்குனர் வாணி ஈஸ்வரி உள்ளிருப்பு போராட்டம் நடத்திவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் 29ம் தேதிக்குள் டென்டரை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்பின் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.இதுகுறித்து யூனியன் சேர்மன் ஞானதிரவியம் கூறுகையில், ''சுமார் 41 லட்ச ரூபாய் செலவில் மக்கள் பணிக்காக கவுன்சில் கூட்டம் மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கான டென்டர் கடந்த 22ம் தேதி விடப்பட இருந்தது. அப்போது மாவட்ட நிர்வாகம் வாய்மொழி உத்தரவாக அதனை செய்யக் கூடாது என்று கூறியுள்ளது.



இதனால் நாங்கள் மக்கள் நலப்பணிகளை செய்ய முடியாமல் இருந்து கொண்டிருக்கிறோம்.திமுகவை சேர்ந்த யூனியன் சேர்மன் என்பதால் மாவட்ட நிர்வாகம் வேண்டும் என்றே டென்டர் விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கவுன்சிலர்கள் எல்லோரும் உள்ளிருப்பு போராட்டம் செய்தோம். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் வரும் 29ம் தேதிக்குள் டென்டர் விட நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம். ரத்து செய்யப்பட்ட மாதாந்திர யூனியன் கூட்டத்தை வரும் 1ம் தேதி நடத்துவது என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்'' என்றார்.வள்ளியூர் யூனியன் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டி கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டாலும் முழுமையாக வேலை முடியவில்லை. இதனால் யூனியன் கூட்டம் பழைய கட்டடத்தில் இதுவரை நடந்து வந்தது. ஆனால் நேற்று முதன் முதலாக புதிய கட்டடத்தில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் புதிய கட்டடத்தில் நடந்த முதல் கூட்டமே கவுன்சிலர்களால் ரத்து செய்யப்பட்டு உள்ளிருப்பு போராட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us