கர்நாடக பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு
கர்நாடக பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு
கர்நாடக பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு

பெங்களூரு: பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா மீது, மேலும் ஒரு பலாத்கார வழக்கு பதிவாகி உள்ளது. 'தன் முகத்தில் சிறுநீர் கழித்தார்' என்று பாதிக்கப்பட்ட பெண் புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, 64. இவர் மீது, 40 வயது பெண் கடந்த ஆண்டு அளித்த பலாத்கார புகாரில் கைதாகி, ஜாமினில் வந்தார்.
இந்நிலையில், பெங்களூரு பீன்யாவில் வசிக்கும் பா.ஜ., தொண்டரான, 40 வயது பெண் நேற்று முன்தினம் ஆர்.எம்.சி., யார்டு போலீஸ் நிலையத்தில் அளித்த புகார்:
விபசார வழக்கு
என் முதல் கணவர், 15 ஆண்டுகளுக்கு முன் என்னை பிரிந்து சென்றார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். எங்கள் கட்சி எம்.எல்.ஏ., என்பதால், முனிரத்னாவுடன் எனக்கு அறிமுகம் இருந்தது.
கடந்த 2023ம் ஆண்டு துவக்கத்தில், என்னை விபசார வழக்கில் போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வந்தபின், பொய்யான கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டேன். இந்த இரு வழக்குகளிலும் முனிரத்னா தான் என்னை சிக்க வைத்தார்.
கடந்த 2023 ஜூன் 11 இரவு 7:00 மணிக்கு முனிரத்னாவின் ஆதரவாளர்கள் வசந்த், சென்னகேசவா, கமல் ஆகியோர் என் வீட்டிற்கு வந்து, 'எம்.எல்.ஏ.,விடம் வந்து பேசினால், உன் பிரச்னை தீர்ந்து விடும்' என்று கூறினர்.
இதனால், முனிரத்னா எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு சென்றேன். அங்கு சென்றதும் முனிரத்னா, வசந்த், சென்னகேசவா, கமல் என்னை சரமாரியாக தாக்கினர்; என் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கினர். முனிரத்னா கூறியதால் வசந்த், சென்னகேசவா என்னை பலாத்காரம் செய்தனர்.
முனிரத்னா ஒருவரிடம் மொபைல் போனில் பேசி, ஒரு அட்டைப்பெட்டியை எடுத்துவரச் செய்தார். அந்த பெட்டிக்குள் இருந்த ஊசியை எடுத்து என் மீது செலுத்தினார். என் வாயில் சிறுநீர் கழிக்க முயன்றார். நான் முகத்தை மூடிக் கொண்டதால், என் உடல் மீது சிறுநீர் கழித்தார்.
'இதுபற்றி வெளியே கூறினால், உன் மகனை கொன்று விடுவோம்; வாழ்நாள் முழுதும் கஷ்டம் அனுபவிக்க வேண்டும்' என்று மிரட்டினர்.
சில மாதங்களுக்கு முன், எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, குணப்படுத்த முடியாத வைரஸ் பாதிப்பு என தெரிந்தது. முனிரத்னா போட்ட ஊசியால் தான், அந்த பாதிப்பு என்பதை தெரிந்து நொந்து போனேன்.
வாய்ப்பு
துாக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றேன். என்னை குடும்பத்தினர் காப்பாற்றினர். என் வாழ்க்கையை சீரழித்த முனிரத்னா உட்பட நான்கு பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறி இருந்தார்.
புகாரின்படி, முனிரத்னா உட்பட நால்வர் மீதும் கூட்டு பலாத்காரம் உட்பட எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் எந்த நேரத்திலும் முனிரத்னா கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.