இது ஆரோக்கியமான போட்டியா? ஆக்ரோஷமான மோதலா? :"தடம் மாறிய' தடகளத்தால் பார்வையாளர்கள் அதிர்ச்சி
இது ஆரோக்கியமான போட்டியா? ஆக்ரோஷமான மோதலா? :"தடம் மாறிய' தடகளத்தால் பார்வையாளர்கள் அதிர்ச்சி
இது ஆரோக்கியமான போட்டியா? ஆக்ரோஷமான மோதலா? :"தடம் மாறிய' தடகளத்தால் பார்வையாளர்கள் அதிர்ச்சி

கோவை : கோவையில் நேற்று நடந்த மாவட்ட தளகள போட்டியின்போது, இரு விளையாட்டு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
துவக்கத்திலிருந்தே, 'கோவை அத்லடிக் கிளப்' பயிற்சியாளருக்கும், 'சத்ரபதி சிவாஜி தடகள அமைப்பு' பயிற்சியாளருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. இதனால் எங்கு போட்டிகள் நடந்தாலும், எந்த அணி முதலிடம் பிடிப்பது என்பதில் இரு அணி வீரர்கள் இடையே எப்போதும் போட்டி இருந்து கொண்டே இருக்கும். இது ஆரோக்கியமான போட்டியாக இருந்தால் இரு அணிக்குமே நல்லது. ஆனால், போட்டிகள் துவங்கியது முதலே, வீரர்கள் ஒருவரையொருவர் முறைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். மாணவர்களுக்கான 800 மீட்டர் ஓட்டம் நடந்தபோது, கோவை அத்லடிக் கிளப் வீரர் செந்தில்குமார் முதலிடம் பிடித்தார். சத்ரபதி சிவாஜி அமைப்பு வீரர் சூரிய வர்மா இரண்டாம் இடம் பிடித்தார்.
இரண்டாம் இடம் பிடித்த சூரிய வர்மா முதல்நாள் நடந்த 1500 மீட்டர் ஓட்டத்தில் ஏற்கனவே முதலிடம் பிடித்திருந்தார். இதனால், கோவை அத்லடிக் கிளப்பை சேர்ந்த வீரர்கள் இவரை நேற்று இரண்டாம் இடம்பிடித்ததற்காக கிண்டல் செய்துள்ளனர். இதைக் கண்டு கோபம் கொண்ட சத்ரபதி சிவாஜி தடகள அமைப்பின் விளையாட்டு வீரர்கள் அவர்களைத் தாக்க முற்பட்டனர். இரு அணி வீரர்களும் தகாத வார்த்தைகளால் திட்டி, மோதலில் ஈடுபட்டனர். இதைக் கண்டு, மாவட்ட தடகள சங்கத்தின் நடுவர் கண்ணன் அவர்களை சமாதனம் செய்ய முயன்றார். அப்போது அவரை சத்ரபதி சிவாஜி விளையாட்டு அமைப்பினர் மற்றும் பயிற்சியாளர் சிவா தாக்கினர். 'ஷூ'வால் தாக்கப்பட்டதால், அதிலுள்ள ஆணியால் கண்ணன் உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இந்த மோதலால், போட்டி ஒரு மணி நேரம் தடைபட்டது.
கோவை அத்லடிக் கிளப் பயிற்சியாளர் சீனிவாசன் கூறுகையில்,''இது இன்று மட்டும் நடக்கவில்லை. விளையாட்டு அமைப்புகள் இடையே எப்போது போட்டி நடந்தாலும் அவர்கள் இப்படித்தான் செய்கின்றனர். அவர்களின் நடவடிக்கைகள் பற்றி, ஏற்கனவே மாவட்ட அத்லடிக் சங்கத்திடமும், மாவட்ட விளையாட்டு அலுவலரிடமும் புகார் தெரிவித்துள்ளேன். அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
சத்ரபதி சிவாஜி அணியினரின் தாக்குதலுக்குள்ளான நடுவர் கண்ணன் கூறுகையில்,''ஒரு பயிற்சியாளர் என்பவர் யாரையும் கை நீட்டி அடிக்கக் கூடாது. ஆனால், வீரர்களின் சண்டையை சமாதானம் செய்ய சென்ற என்னை, அவர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கினார். கடந்த ஆண்டு நாகர்கோவிலில் நடந்த ஒரு போட்டியிலும், சென்னையில் நடந்த மாநிலத் தடகளப் போட்டியிலும் இதே போன்று என்னைத் தாக்க முயன்றனர். இது குறித்து எங்கள் சங்கத்திடம் புகார் செய்துள்ளேன்,'' என்றார்.
'சத்ரபதி சிவாஜி' விளையாட்டு அமைப்பு பயிற்சியாளர் சிவா கூறுகையில்,''முதலில் கண்ணனை தாக்கியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கூட்டத்தில் என்னையும் தாக்க பலர் முயன்றனர். தற்காப்புக்காக நான் அவ்வாறு நடக்க நேரிட்டது. எங்கள் அணியின் வீராங்கனை ஒருவரை கண்ணன் தாக்க முயன்றதால், நான் அதை தடுக்க அவரைத் தாக்கினேன். மற்றபடி முன்விரோதம் எதுவும் கிடையாது. எதிர்வரும் நாட்களில் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்வோம்,'' என்றார்.
வீரர்களிடையே மோதல் நடக்கும்போது மாவட்ட தடகள சங்கத்தை சார்ந்த எந்த நிர்வாகிகளும் மைதானத்தில் இல்லை. போட்டிகளை நடத்த நியமிக்கப்பட்டிருந்த நடுவர்கள் மட்டுமே, களத்தில் இருந்தனர். சம்பவ இடத்தில் மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் இருந்திருந்தால், மோதலை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம்.எதிர்காலத்தில் இதுபோல மோதல் ஏற்படாமல் தடுக்க மோதலில் ஈடுபடும் வீரர்கள் மீதும், அதற்கு தூண்டுதலாக இருக்கும் பயிற்சியாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
வி.கிருஷ்ணமூர்த்தி