புதையல் இருப்பதாகக் கூறி 106 சவரன் நகை மோசடி :3 கிலோ நகை பறிமுதல்; மந்திரவாதி கைது
புதையல் இருப்பதாகக் கூறி 106 சவரன் நகை மோசடி :3 கிலோ நகை பறிமுதல்; மந்திரவாதி கைது
புதையல் இருப்பதாகக் கூறி 106 சவரன் நகை மோசடி :3 கிலோ நகை பறிமுதல்; மந்திரவாதி கைது

ஓசூர் : ஓசூரில், புதையல் இருப்பதாகக் கூறி, நள்ளிரவில் வீட்டில் பூஜை செய்து, 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 106 சவரன் தங்க நகைகளை மோசடி செய்த மந்திரவாதியை, போலீசார் கைது செய்தனர்.
நரசிம்மனுக்கு, அவரது நண்பர் சிவா என்பவர் மூலம் அப்துல்லாவுடன், சில மாதத்துக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. நரசிம்மன், என்.ஜி.ஜி.ஓ., காலனியில் உள்ள தனக்குச் சொந்தமான காலி மனையில், புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டில் புதையல் நகைகள் இருப்பதாக, மந்திரவாதி அப்துல்லா, நரசிம்மன் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இன்ப அதிர்ச்சியடைந்த நரசிம்மன் குடும்பத்தினர்,'அந்த புதையல் எந்த இடத்தில் உள்ளது; எப்படி எடுக்க வேண்டும்?' என, ஆர்வத்துடன் கேட்டனர். அதற்கு அப்துல்லா, ''கட்டட வேலை நடக்கும் புதிய வீட்டில், நள்ளிரவு பூஜை செய்வதோடு, வீட்டில் உள்ள நகைகளை பானையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். அமாவாசை, பவுர்ணமி வரும் வரை அந்த பானையை திறக்காமல் இருந்தால், புதையல் கிடைக்கும்,'' என கூறியுள்ளார்.
பேராசையால், நரசிம்மன் குடும்பத்தினர், அப்துல்லா கூறியபடி, 25ம் தேதி நள்ளிரவு, என்.ஜி.ஜி.ஓ., காலனியில் உள்ள வீட்டில், பூஜைக்கு ஏற்பாடு செய்தனர். அன்று இரவு, 106 சவரன் நகையை, ஒரு பானையில் வைத்து, கறுப்புத் துணியால் மூடி எலுமிச்சம்பழம், சந்தனம், மஞ்சள், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருட்களை வைத்து, அப்துல்லா பூஜை செய்தார். அமாவாசை தினத்தில் (கடந்த 1ம் தேதி) வந்து வீட்டில் உள்ள புதையலை எடுத்துத் தருவதாகவும், அதுவரை நகை வைத்துள்ள பானையை திறந்து பார்க்கக் கூடாது எனவும், எச்சரித்துச் சென்றார்.
அப்துல்லா கூறியபடி, நரசிம்மன் குடும்பத்தினர், அந்த பானையை திறக்காமல் வீட்டை கண்காணித்து வந்தனர்.கடந்த 1ம் தேதி, அப்துல்லாவை வரவழைத்து புதையல் எடுக்க, அவருக்கு நரசிம்மன் போன் செய்தார். அவரது மொபைல்போன், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது; அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சந்தேகமடைந்த நரசிம்மன் மற்றும் குடும்பத்தினர், பானையை திறந்து பார்த்தனர். பானையில் வெறும் செங்கல் மட்டும் இருந்தது. 106 சவரன் நகைகளையும் காணவில்லை. அதிர்ச்சியடைந்த நரசிம்மன் குடும்பத்தினர், ஹட்கோ போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஆனைக்கல் பகுதியில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது, சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த அப்துல்லாவை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் மந்திரவாதி என்பதும், ஓசூர் நரசிம்மனிடம் மட்டுமில்லாது ஆனைக்கல், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு உள்ளிட்ட பல இடங்களில், 3 கிலோ தங்க நகைகளை மோசடி செய்ததும், அந்த நகைகளை தேன்கனிக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அடமானம் வைத்து, பணம் பெற்றதும் தெரிந்தது. போலீசார், அந்த தனியார் வங்கியில் இருந்த, 3 கிலோ தங்க நகையை பறிமுதல் செய்து, அப்துல்லாவை கைது செய்தனர். அமைதி காத்த நரசிம்மன்: புதையல் ஆசையில் நகைகளை பறிகொடுத்த நரசிம்மன், டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருவதோடு, ஆர்.டி.ஓ., ஆபீசில் புரோக்கராகவும் செயல்படுகிறார். இதனால், அவர் ஏராளமான சொத்து, பணம் மற்றும் நகைகள் வாங்கி வைத்துள்ளார்.
இதை அறிந்த அப்துல்லா, அவரது பணத்தாசையை சாதகமாக பயன்படுத்தி, புதையல் இருப்பதாக நாடகமாடி, 106 சவரன் நகைகளை மோசடி செய்தார். நகையை பறிகொடுத்த நரசிம்மன், போலீசில் புகார் செய்தால், வருமான வரி பிரச்னையாகிவிடும் என, பல நாள் அமைதி காத்தார். ஆனைக்கல் போலீசில் கைதான அப்துல்லாவுடன், நகைகளும் மீட்கப்பட்டதை அறிந்த நரசிம்மன், அதன் பின்னர் தான், போலீசில் புகார் செய்தார்.