Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/தரக்கட்டுப்பாடு வாபஸ்: ஆதரவும், அபாயமும்!

தரக்கட்டுப்பாடு வாபஸ்: ஆதரவும், அபாயமும்!

தரக்கட்டுப்பாடு வாபஸ்: ஆதரவும், அபாயமும்!

தரக்கட்டுப்பாடு வாபஸ்: ஆதரவும், அபாயமும்!

UPDATED : டிச 01, 2025 01:10 PMADDED : டிச 01, 2025 12:45 AM


Google News
Latest Tamil News
பல துறைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தரக் கட்டுப்பாடு உத்தரவுகளை, அண்மையில் மத்திய அரசு விலக்கிக் கொண்டது. பொருட்களின் தரத்தை முறைப்படுத்தும் நடைமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இது. எதனால், தரக்கட்டுப்பாடு விதிகள் ரத்தாகின என்பதில், நாட்டின் தயாரிப்பு துறை வளர்ச்சி சம்பந்தப்பட்டுள்ளது.

ரசாயனங்கள், சிந்தட்டிக் இழைகள், உலோகங்கள் உள்ளிட்ட பல மூலப்பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களால் பொருட்களாக தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் தரக்கட்டுப்பாடு உத்தரவுகளால், உதிரிபாக விலை உயர்வு, பற்றாக்குறை, தயாரிப்பு மந்தநிலை ஆகியவற்றை எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் எதிர்கொண்டன.

நாட்டின் சிறுதொழில் தயாரிப்புகள் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய இறக்குமதி தரக் கட்டுப்பாடுகள் கடந்த 12ம் தேதி விலக்கி கொள்ளப்பட்டன. அமைச்சரவை முன்னாள் செயலர் ராஜிவ் கவுபா தலைமையிலான உயர்நிலை கமிட்டியின் பரிந்துரையை ஏற்று இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



விமர்சனம்

குறைந்த தரத்திலான இறக்குமதியை தடுக்கவும், உள்நாட்டு தயாரிப்புகளின் தரநிலையை உயர்த்தவும் தரக் கட்டுப்பாடு உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. 2014ல் 106 பொருட்களுக்கு, 14 தரக் கட்டுப்பாடு உத்தரவு இருந்தது. அது, 769 பொருட்களுக்கு 187 உத்தரவுகள் என அதிகரித்தது. இது, இறக்குமதி மற்றும் இயக்கச் செலவு அதிகரிப்பு, விதிகளை நிறைவு செய்வதில் தாமதம் ஆகியவற்றை ஏற்படுத்துவதாக விமர்சனம் எழுந்தது.

இதற்கு தீர்வு காண, கவுபா தலைமையில் கமிட்டியை கடந்த ஆக., 25ல் அரசு அமைத்தது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பயன்படுத்தும் மூலப்பொருட்களுக்கான தரக் கட்டுப்பாடு உத்தரவை அகற்ற கமிட்டி பரிந்துரைத்தது. தயாரிப்பின் தரத்தை அதிகரிக்க இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், மூலப்பொருட்கள் கொள்முதலில் இவை சவாலை ஏற்படுத்துவதால் தேவையில்லை என கமிட்டி தெரிவித்தது.

தரக் கட்டுப்பாடு

உத்தரவுக்கு உட்பட்ட பல மூலப்பொருட்கள் உள்நாட்டில் தேவையான அளவு தயாரிக்கப்படுவதில்லை. ஆனால், கட்டுப்பாடு காரணமாக இறக்குமதி பற்றாக்குறை, தாமதம், கண்டபடி விலை நிர்ணயம் ஆகியவற்றுக்கு உள்ளாகின்றன. ஏற்றுமதி தொடர்புடைய ஜவுளி, காலணி, எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை இதனால் பாதிக்கப்பட்டு, சர்வதேச போட்டித் திறனை இழப்பது தெரிய வந்தது.

பரிசோதனை, உரிமம் மற்றும் ஆய்வுகளுக்கான செலவும், இவற்றை வழங்கும் ஆய்வகங்கள் குறைவு என்பதால் காத்திருப்பும் சிறுதொழில் துறையை பாதித்தது. எனவே, பிளாஸ்டிக், பாலிமர்ஸ், பேஸ் மெட்டல், ஸ்டீல், எலக்ட்ரானிக், காலணி ஆகியவற்றின் மூலப்பொருட்களுக்கு தரக் கட்டுப்பாடு உத்தரவை நீக்க, கவுபா கமிட்டி வலியுறுத்தியது.

உத்தரவு

அது ஏற்கப்பட்டுள்ளதால், தரமற்ற மூலப்பொருட்கள் அதிகளவில் இறக்குமதியாகுமா; அவற்றில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் கேள்விக்குறியாகுமா என்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், நுகர்வோர் கைகளுக்கு தயாரிப்பு பொருட்கள் செல்லும் கடைசி நிலையில், பாதுகாப்பு பரிசோதனைகளை உறுதி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

தரக் கட்டுப்பாடு உத்தரவை ரத்து செய்த அரசின் உத்தரவை, எம்.எஸ்.எம்.இ., துறை வரவேற்றுள்ளது. தரக் கட்டுப்பாடு மட்டுமே பிரச்னையல்ல; வர்த்தக தடையை ஏற்படுத்துவது தான் பிரச்னையாக இருந்தது. இவை இப்போது நீங்குவதால், நிறுவனங்களின் சுயபரிசோதனையில், தரத்தில் எந்த சமரசமும் ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார், இந்தியா எஸ்.எம்.இ., போரம் தலைவர் வினோத் குமார். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கை இது என அவர் வரவேற்றுள்ளார்.

Image 1502367

எவ்வளவு பயன்?

நாட்டின் தரக் கட்டுப்பாடு உத்தரவுகள் இதுவரை கலவையான விளைவுகளைத் தான் உருவாக்கியுள்ளன. மின்சார சாதனங்கள் மற்றும் சில நுகர்வோர் பொருட்கள் போன்ற பரிசோதனை வசதி போதுமான துறைகளில், பொருட்களின் தரத்தை உயர்த்தவும், தரமற்ற இறக்குமதிகளை கட்டுப்படுத்தவும் உதவின.

இந்நிலையில் அவற்றை முழுமையாக வாபஸ் பெறுவது, வளர்ந்து வரும் தர அமைப்பு மேம்பாட்டை தாமதப்படுத்தும் அபாயம் உண்டு என்றும் நிபுணர்கள் சிலர் எச்சரிக்கின்றனர். நுகர்வோர் பாதுகாப்பை நேரடியாக பாதிக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், உணவு பொருட்கள், மின் சாதனங்கள், வாகன உதிரிபாகங்கள், கட்டுமான இரும்பு போன்ற பொருட்களுக்கு முதலில் கட்டாய தரநிலைகள் அமலாக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

மேலும், தரக் கட்டுப்பாட்டை மூன்று பிரிவுகளாக, தொடர வேண்டியவை, இடைநிறுத்தப்பட வேண்டியவை, ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என வகைப்படுத்த வலியுறுத்துகின்றனர். உலகளவில் கொரியாவின் கே.சி.மார்க், அமெரிக்காவின் ஏ.எஸ்.டி.எம்., தரநிலைகள், ஐரோப்பிய ஐ.இ.சி., அல்லது சி.இ., தரநிலைகள் போன்றவை, நம் நாட்டின் ஏற்றுமதி போட்டித்திறனை நேரடியாக பாதிக்கும் வகையில் கடுமையாகியுள்ளன.

இந்நிலையில், தரக் கட்டுப்பாடுகளை அரசு வாபஸ் பெற்றிருப்பது, தொழில் துறையை புரிந்துகொள்ளும் நியாயமான மாற்றத்தை குறிக்கிறது. சர்வதேச தரநிலைகளுக்கும், உள்நாட்டு உற்பத்தி நிபந்தனைகளுக்கும் இடையில் சமநிலை வகிக்கும் திறன் தான், நாட்டின் நீண்டகால போட்டித் திறனை நிர்ணயிக்கும்.

முக்கிய அம்சங்கள்!

இந்தியா எஸ்.எம்.இ., போரம் பரிந்துரைப்படி, அபாய அடிப்படையிலான எம்.எஸ்.எம்.இ.,களுக்கு ஏற்ற மற்றும் சர்வதேச தரத்துக்கு இணையான கட்டுப்பாட்டு முறைக்கு மாற வேண்டும். அதில் முக்கிய அம்சங்கள்:
* உள்நாட்டு உற்பத்தி திறன் குறைவான இடைநிலை மூலப்பொருட்களுக்கு கட்டுப்பாட்டை தவிர்த்தல்.
* பி.ஐ.எஸ்., தரநிலைகளை ஐ.எஸ்.ஓ., தரநிலைகளோடு இணைத்தல்.
* பல கட்டங்களாக தரக்கட்டுப்பாடு அமலாக்கம், விரிவான ஆலோசனை, மாநிலங்களுடன் ஒருங்கிணைப்பு.
* பி.ஐ.எஸ்., பரிசோதனை திறனை பிராந்திய, மொபைல் லேப்களாக விரைவாக விரிவுபடுத்துதல்.
* சிறுதொழில்களுக்கு பரிசோதனை மற்றும் சான்றிதழ் உதவித்தொகை வழங்குதல்.



தர விலக்கு பெற்றவை

எத்தலின் கிளைக்கால், டெரப்தலிக் ஆசிட், பாலியெஸ்டர் ஸ்பன், கிரே மற்றும் ஒயிட் யார்ன், பல்வேறு வகை பாலியஸ்டர் யார்ன், பிரைமரி லீட், நிக்கல், ஜிங்க், காப்பர் மற்றும் டின்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us