Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/750 ரயில் நிலையங்களில் எலக்ட்ரானிக் சிக்னல் : சாம் பிட்ரோடா தகவல்

750 ரயில் நிலையங்களில் எலக்ட்ரானிக் சிக்னல் : சாம் பிட்ரோடா தகவல்

750 ரயில் நிலையங்களில் எலக்ட்ரானிக் சிக்னல் : சாம் பிட்ரோடா தகவல்

750 ரயில் நிலையங்களில் எலக்ட்ரானிக் சிக்னல் : சாம் பிட்ரோடா தகவல்

ADDED : செப் 21, 2011 11:35 PM


Google News
Latest Tamil News
'வெளிநாடுகளைப் போலவே இந்திய ரயில்வே துறையிலும் எலக்ட்ரானிக் சிக்னல் முறை பெரிய அளவில் கொண்டு வரப்படும். நாட்டில் உள்ள 500 முதல் 750 ரயில் நிலையங்களை தனியாருடன் இணைந்து நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே துறையை சீரமைத்து நவீனமயமாக்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட குழுவின் தலைவர் சாம் பிட்ரோடா நேற்று டில்லியில் கூறியதாவது: நாடு முழுவதும் 80 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு ரயில் பாதைகள் உள்ளன. வேறெங்கும் இது போன்ற அளவுக்கு ரயில் பாதைகள் இல்லை. ஆனாலும், மிகவும் மோசமான முறையில் சரியான பராமரிப்பு இல்லாமல் ரயில் பாதைகள் உள்ளன. ரயில்வே துறையின் பிற வசதிகளும் போதுமான அளவில் திருப்திகரமாக இல்லை. இவற்றை மேம்படுத்தியாக வேண்டிய அவசியம் உள்ளது. ரயில்வே துறையில் புரட்சியை கொண்டு வரும் நோக்கத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் என்னவெல்லாம் எடுத்திட முடியும் என்பது குறித்து, எங்களது குழு முழுமையாக ஆராயும். அரசுக்கும், மக்களுக்கும் மிகப்பெரிய பயனை அளித்திடும் வகையில் அமைந்த மிக முக்கியமான பரிந்துரைகளை, எங்கள் குழு வழங்கும். இந்திய ரயில்வே துறையைப் பொறுத்தவரை சிக்னல்கள் தான் பெரிய பிரச்னை. அதிலும் எலக்ட்ரானிக் சிக்னல் வசதிகள் இந்தியாவில் மிகவும் குறைவு. பத்து சதவீத அளவுக்கே எலக்ட்ரானிக் சிக்னல் வசதிகள் உள்ளன. வளர்ந்த நாடுகளில், 60 முதல் 70 சதவீதம் வரை எலக்ட்ரானிக் சிக்னல் வசதிகள் உள்ளன. இந்திய ரயில்வே துறை முழுவதும் எலக்ட்ரானிக் வசதியை கொண்டு வர வேண்டும். தண்டவாளங்களின் உறுதி மற்றும் பராமரிப்பு ஆகியவையும் நவீனப்படுத்தப்பட வேண்டும். இதற்காக வெளிநாட்டு தொழில் நுட்பங்களை இந்தியாவில் புகுத்த வேண்டும். தவிர, இந்தியாவிலேயே புதிய தொழில்நுட்ப உத்திகளை தயாரிக்க வேண்டும். ரயில் பெட்டிகளின் உறுதி, அதில் பயணிகளுக்கு என உருவாக்கப்படும் வசதிகள் என எல்லாமே தற்போது திருப்திகரமாக இல்லை. நாடு முழுவதும் 7,000 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில் முதற்கட்டமாக 500 முதல் 750 ரயில் நிலையங்கள் மட்டும் எடுத்துக் கொள்ளப்படும். இந்நிலையங்களை தனியாருடன் இணைந்து அதிநவீன ரயில் நிலையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சாம் பிட்ரோடா கூறினார்.

ரயில்வே துறையை நவீனப்படுத்த பிட்ரோடா தலைமையில் குழு - மத்திய அரசு :

ரயில்வே துறையை மேம்படுத்தும் நோக்கில் தீவிர நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதற்காக முக்கிய திட்டங்களில் தனியாருடன் கைகோர்த்து, பல ரயில் திட்டங்களை நிறைவேற்றிடவும், அதன் மூலம் வரும் வருமானத்தைப் பெருக்கவும் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக அமைக்கப்பட்ட தலைசிறந்த வல்லுனர்கள் குழுவை, தகவல் தொழில்நுட்பத் தலைவராக பிட்ரோடா இருந்து வழி நடத்துவார். இந்திய தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியையும், புரட்சிகரமான மாறுதல்களையும் கொண்டு வந்தவர் சாம் பிட்ரோடா. இவரை தற்போது ரயில்வே துறைக்கும் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு முடிவெடுத்து, அவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதை நேற்று டில்லியில் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இது குறித்து திரிவேதி மேலும் கூறியதாவது: பன்னிரண்டாவது ஐந்தாண்டு திட்டம் துவங்கப்படவுள்ளதை முன்னிட்டு, நாட்டில் எந்தெந்த துறைகளில் கவனம் செலுத்துவது என்பது குறித்தும், எத்தகைய திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது குறித்தும் மத்திய அரசும், திட்டக் கமிஷனும் விரிவாக ஆராய்ந்து வருகின்றன. இதற்காக பல்வேறு இலக்குகளை நிர்ணயம் செய்து, அதன் அடிப்படையில் செயலாற்றப்படும் . அந்த வகையில் ஒட்டு மொத்த வளர்ச்சி என்பது அவ்வளவு தூரம் இருக்க வேண்டுமெனில், ரயில்வே துறையில் 11 சதவீத வளர்ச்சி இருந்தாக வேண்டும். ரயில்வே துறையை தள்ளி வைத்துவிட்டு, ஒட்டு மொத்த வளர்ச்சியை எட்டிவிட முடியாது. இதற்கு ரயில்வே துறையை சீரமைப்பதும், புரட்சிகரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அவசியம். அதற்காக சாம் பிட்ரோடா தலைமையில் ஐந்து நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பேராசிரியர்கள், பொறியாளர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் அங்கம் வகிப்பர்.

அதிநவீன வசதிகளை கொண்டு வருவதும், வளர்ந்த நாடுகளில் இருப்பது போன்ற வியத்தகு அம்சங்களையும் இந்திய ரயில்வே துறையில் கொண்டு வருவது குறித்தும் இந்த குழு ஆராய்ந்து அறிக்கை அளிக்கும். தனது இடைக்கால அறிக்கையை இந்த ஆண்டு இறுதியில் ரயில்வே அமைச்சகத்திடம் இந்த குழு அளிக்கும். ரயில்வே துறையைப் பொறுத்தவரை நிதி தான் பெரிய பிரச்னை. திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் இருப்பது நிதிப் பற்றாக்குறையால் தான். பல முக்கிய திட்டங்கள் மந்த கதியில் நடந்து கொண்டிருக்கின்றன. இதை கருத்திற்கொண்டு, தனியாருடன் இணைந்து திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில், ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதில் பெரும் பிரச்னை உள்ளது. நாகாலாந்து மாநிலத்தில் வெறும் ஏழு கி.மீ., தூரத்திற்கே ரயில் பாதை உள்ளது. சிக்கிமில் ரயில் பாதை இல்லை. அங்கு ரயில் பாதை இணைப்பு இருந்திருந்தால், சமீபத்திய பூகம்பத்தின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவில் சென்றடைந்திருக்க முடியும்; நிவாரணப் பொருட்களையும் எளிதில் மக்களுக்கு கொண்டு சென்றிருக்க முடியும்.

எனவே, ஒரு சில திட்டங்களுக்கு வருவாயை மட்டுமே குறிக்கோளாக பார்க்காமல், அத்தகைய திட்டங்களை நிறைவேற்ற ஒப்புதல் அளிப்பது குறித்து, திட்டக் கமிஷன் பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் திரிவேதி கூறினார்.

ரயில்வே துறையை சீரமைப்பதற்காக சாம் பிட்ரோடா தலைமையில் மத்திய அரசு அமைத்துள்ள குழுவில் இடம் பெற்றுள்ள ஐந்து பேர்களின் விவரம்: எச்.டி.எப்.சி., வங்கியின் தலைவர் தீபக் பரேக், ஸ்டேட் பாங்க் ஆப் இண்டியாவின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.வர்மா, ஆமதாபாத் இந்திய மேலாண்மை ஆய்வு மையத்தின் பேராசிரியர் ரகுராம், ஐ.எப்.டி.சி.,யின் மேலாண்மை இயக்குனர் ராஜிவ் லால், பீட்பேக் இன்பராஸ்டரக்சர் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவர் வினாயக் சட்டர்ஜி ஆகியோர்.

-நமது டில்லி நிருபர்-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us