வீட்டு வசதி வாரியம் மூலம் ஆறு மாவட்டங்களில் 1,122 புதிய மனைகள் : அமைச்சர் அறிவிப்பு
வீட்டு வசதி வாரியம் மூலம் ஆறு மாவட்டங்களில் 1,122 புதிய மனைகள் : அமைச்சர் அறிவிப்பு
வீட்டு வசதி வாரியம் மூலம் ஆறு மாவட்டங்களில் 1,122 புதிய மனைகள் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை : ''தமிழகத்தில், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், 1,122 புதிய மனைகள் நடப்பாண்டில் உருவாக்கப்படும்'' என, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் தெரிவித்தார்.
இத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து, சட்டசபையில் அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்: மக்களின் வீட்டு வசதித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சென்னையில் 723 அடுக்குமாடி குடியிருப்புகளும், சேலத்தில் 16 அடுக்குமாடி குடியிருப்புகளும் இந்த ஆண்டு கட்டப்படும்.
காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு, சேலம், கோவை, தருமபுரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், 566 வீடுகள் கட்டப்படும்.
*காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், விருதுநகர், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில், 1,122 மனைகள் இந்த ஆண்டு உருவாக்கப்படும்.
* சென்னை மந்தைவெளிப்பாக்கத்தில், 1963ம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட, 27 வாடகைக் குடியிருப்புகளை இடித்துவிட்டு, தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்ட 44 புதிய குடியிருப்புகள், 11.80 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
* சென்னை நந்தனத்தில், 1959ம் ஆண்டு நகர மேம்பாட்டு அறக்கட்டளையால் (சி.ஐ.டி.,) கட்டப்பட்டு, தற்போது மிகவும் பழுதடைந்த நிலையிலுள்ள, 119 குடியிருப்புகளை இடித்துவிட்டு, தரைத்தளம் மற்றும் நான்கு மாடிகளுடன் கூடிய, 474 குடியிருப்புகள் 77.70 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
* தஞ்சாவூரில் வீட்டுவசதி வாரியத்தால், புதிதாக 100 வீடுகள் 20.85 கோடி ரூபாய் செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
* சென்னை ஜி.என்.டி., சாலை மற்றும் உள்வட்ட சாலையில் நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களுக்காக, சி.எம்.டி.ஏ., மூலம், மஞ்சப்பாக்கத்தில் 12 ஏக்கர் நிலத்தில், 20 கோடி ரூபாய் செலவில் சரக்கு வாகன நிறுத்தம் கட்டப்படும். நடப்பாண்டில், இந்தப் பணி துவங்கப்பட்டு, 18 மாதங்களில் முடிக்கப்படும்.
* கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்காக, வேளச்சேரியில் 12 ஏக்கர் பரப்பிலும், மாதவரத்தில் எட்டு ஏக்கர் பரப்பிலும் துணை பஸ் நிலையங்கள் கட்டப்படும்.
* புராதன நகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும், அதிகபட்ச மானியத்தொகையை, நகரங்களின் தன்மையைப் பொறுத்து, 50 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்த, உத்தேசிக்கப்பட்டுள்ளது.
*பூங்கா மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஒரு பூங்காவுக்கு வழங்கப்படும் மானியத் தொகை, 2.25 லட்சத்தில் இருந்து பத்து லட்ச ரூபாயாக அதிகரிக்க, உத்தேசிக்கப்பட்டுள்ளது.


