ஆண்டிபட்டி அருகே கிராமத்தில் பதட்டம்
ஆண்டிபட்டி அருகே கிராமத்தில் பதட்டம்
ஆண்டிபட்டி அருகே கிராமத்தில் பதட்டம்
ADDED : செப் 06, 2011 12:55 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே இறந்தவரின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலைத்தொடர்ந்து, நேற்று ஒரு பிரிவினர், மற்றொரு பிரிவினர் வசிக்கும் பகுதியில் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் ஆறு பேர் காயம் அடைந்தனர். மோதலை தடுக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. ராசக்காபட்டியில் இறந்த வடிவேல் உடலை அடக்கம் செய்ய மயானம் கொண்டு சென்றனர். வழக்கமான பாதையில் சென்றபோது, ஒரு சமூகத்தை சேர்ந்த சிலர் தடுத்ததால் கைகலப்பு ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச்சேர்ந்த மூன்று பேர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று தெப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் ராசக்காபட்டியை சேர்ந்த இரு தரப்பு மாணவர்கள் மத்தியில் பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பாக டி.எஸ்.பி.,விஜயபாஸ்கர் ராசக்காபட்டி கிராமத்தில் விசாரணை நடத்தினார். அப்போது ஒரு பிரிவைச்சேர்ந்த சிலர் கூட்டமாக சென்று மற்றொரு பிரிவினர் வசிக்கும் பகுதியில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் முருகன்(35), கோபால்(50), வேல்சாமி(35), ரமேஷ்(27), சுப்புராஜ்(40), பிரியா(28) ஆகியோர் காயம் அடைந்தனர். சம்பவம் குறித்து கூடுதல் எஸ்.பி.,செல்வராஜ், தாசில்தார் முருகேஸ்வரி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராமத்தில் மேலும் பிரச்னை ஏற்படுவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திடீர் தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.