/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்: போலீசார் மீது குற்றம் சாட்டியதால் பரபரப்புதிருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்: போலீசார் மீது குற்றம் சாட்டியதால் பரபரப்பு
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்: போலீசார் மீது குற்றம் சாட்டியதால் பரபரப்பு
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்: போலீசார் மீது குற்றம் சாட்டியதால் பரபரப்பு
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்: போலீசார் மீது குற்றம் சாட்டியதால் பரபரப்பு
ADDED : செப் 09, 2011 12:16 AM
புதுச்சேரி : திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள், போலீசார் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளைக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, முதலியார்பேட்டை போலீசார் கடந்த மாதம் 23ம் தேதி ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்தின்பேரில் சிதம்பரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், லட்சுமணன், தில்லைராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் பல்வேறு இடங்களில் நடந்த திருட்டில் தொடர்புடையவர்கள் என தெரிந்தது. மூவரிடமும் விசாரணை நடத்தி பல வழக்குகளில் திருடு போன 50 சவரன் நகைகளை மீட்டனர். இந்த வழக்குகளில் தொடர்புடைய புதுச்சேரி உப்பளத்தை சேர்ந்த ஜனா, பாஸ்கரன், தினேஷ் ஆகியோரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை போலீசார் முழுமையாக கணக்கு காண்பிக்கவில்லை என்றும், குறிப்பிட்ட நகைகள் மற்றும் பணத்தை போலீசார் சிலர் எடுத்துக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரை கடந்த சில நாட்களுக்கு முன், கோர்ட் அனுமதியுடன் 5 நாள் காவலில் எடுத்து சி.ஐ.டி.,எஸ்.பி., ரவீந்திரன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். வடக்கு மற்றும் தெற்கு பகுதி போலீசாருக்கு மத்தியில் நிலவும் உட்பூசல் காரணமாக, போலீசார் சிலரே குற்றவாளிகளை தூண்டிவிட்டு வேறு சில போலீசார் மீது குற்றச்சாட்டுகளைக் கூறியது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட 6 பேரையும், முதலியார்பேட்டை போலீசார் கோர்ட் உத்தரவை பெற்று ஒரு நாள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு நேற்று மாலை 6 பேரையும் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் தாமோதரன் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட 6 பேரும், முதலியார்பேட்டை போலீசார் குறித்து வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். இதற்கு மாஜிஸ்திரேட், முதன்மை குற்றவியல் நீதிபதியிடம் முறையாக உத்தரவு பெற்று வரவேண்டுமென்று கூறினார்.
பின், 6 பேரையும் சிறையில் அடைக்க கோர்ட்டை விட்டு போலீசார் வெளியே அழைத்து வந்தனர். அப்போது குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும், 'தாங்கள் அதிக அளவு நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்தாகவும், ஆனால் போலீசார் நகைகளைக் குறைத்து கணக்கு காண்பிப்பதாகவும் கோஷம் எழுப்பினர். இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீசார் அவசர அவசரமாகவும், வலுக் கட்டாயமாகவும் அழைத்துக் கொண்டு வேகமாக இடத்தை காலி செய்தனர்.