/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/"இந்தியர்களை தட்டி எழுப்பியது விவேகானந்தரின் பேச்சு'"இந்தியர்களை தட்டி எழுப்பியது விவேகானந்தரின் பேச்சு'
"இந்தியர்களை தட்டி எழுப்பியது விவேகானந்தரின் பேச்சு'
"இந்தியர்களை தட்டி எழுப்பியது விவேகானந்தரின் பேச்சு'
"இந்தியர்களை தட்டி எழுப்பியது விவேகானந்தரின் பேச்சு'
ADDED : ஆக 17, 2011 02:03 AM
திருப்பூர் : ''இளைஞர்களிடம் சுதந்திர தாகத்தை ஊட்டியவர் விவேகானந்தர்.
அவரைப்பற்றி தெரிந்துகொண்டால் மட்டுமே இந்தியாவை நாம் அறிய முடியும்,'' என
சொற்பொழிவாளர் கிருஷ்ண ஜெகனாதன் பேசினார்.திருப்பூர் ஷண்முகானந்த சங்கீத
சபா மற்றும் கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் 'எப்போ வருவாரோ' ஆன்மிக
சொற்பொழிவு நடந்தது. சொற்பொழிவாளர் கிருஷ்ண ஜெகனாதன் பேசியதாவது:நாடு
அடிமைப்பட்டு கிடந்தபோது, வீடு, மனைவி, மக்களை துறந்து எத்தனையோ மகான்கள்
சுதந்திரத்துக்காக பாடுபட்டனர். தூங்கிக்கொண்டிருந்த இந்தியர்களை
ஆன்மிகத்தின் மூலம் தட்டி எழுப்பி, சுதந்திர தாகத்தை ஊட்டியவர்
விவேகானந்தர். 39 வயது வரை வாழ்ந்த விவேகானந்தர், தலைமுறை தலைமுறைக்கு
தேவையான கருத்துக்களை அர்ப்பணித்துவிட்டு சென்றவர். இளமை பருவம்; குரு
நாதர் பரமஹம்சருடன் இருந்தவரை; பரமஹம்சர் மறைவுக்கு பின், என மூன்று
நிலைகளில் விவேகானந்தரை பார்க்க வேண்டும்.பிரம்ம சமாஜத்தில் சேர்ந்து,
அருவமே கடவுள் என அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தவர் விவேகானந்தர்.
1881ல் கல்லூரி முதல்வர் பாடம் நடத்தும்போது, 'டிரான்ஸ்' என்ற வார்த்தைக்கு
பரவச நிலை என்று பொருள்; கோல்கட்டாவில் காளி கோவில் பூசாரியை பார்த்தால்
புரியும் என்றார். விவேகானந்தர் மனதில் அப்போது ஆன்மிகம் பற்றிய சிறு பொறி
விழுந்தது.கல்லூரி முதல்வர் கூறிய பூசாரியான பரமஹம்சரை பார்க்கச் சென்றார்
விவேகானந்தர். அவரிடம், கடவுளை நீங்கள் பார்த்தது உண்டா என கேள்வி
எழுப்பினார். பரமஹம்சரோ, கடவுளை பார்ப்பது என்ன, நான் கடவுளுடன்
பேசிக்கொண்டிருக்கிறேன் என்று பதிலளித்தார். தனது காலை எடுத்து
விவேகானந்தரின் நெஞ்சில் வைத்தார். அவர் பாதம் பட்டதும், அண்ட சராசரங்கள்
அனைத்தும் சுழல்வதுபோல் தோன்றியது விவேகானந்தருக்கு, காலை எடுங்கள் என்றார்
விவேகானந்தர்.உலகையே வழிநடத்த பிறந்தவன் நீ; பயப்படக்கூடாது; என்னுடன்
இருந்து விடு; உன் குடும்பத்தை காளி பார்த்துக் கொள்வாள் என்றார்
பரமஹம்சர். அப்போது முதல், பரமஹம்சரை குருவாக ஏற்றுக்கொண்டு, துறவு
மேற்கொண்டார். 1886ல் பரமஹம்சர் சமாதியடைந்த பின், விவேகானந்தர் தனது
யாத்திரையை துவங்கினார்.கன்னியாகுமரியில் தியானத்தில் அமர்ந்தபோது, என்
பிறப்பின் நோக்கம் என்ன; நான் என்ன செய்ய வேண்டும் என பல கேள்விகள் மனதில்
எழுந்தன. மன கண்முன், எமனை வென்ற நச்சுகேதன்; அனுமனுக்கு அவரது வீரத்தை
எடுத்துரைத்த ஜாம்பவான்; போர்களத்தில் அர்ஜூனன் மதி மயக்க காட்சிகள் வந்து
மறைந்தன; விவேகானந்தர் புரிந்து கொண்டார்.பயமும், பலவீனமும் தாய்த்திரு
நாட்டை அடிமைப்படுத்தியுள்ளது; பயத்தை போக்க வேண்டும். இந்தியாவின்
பெருமையை உலகுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். 1892ல்
ஐரோப்பாவில் நடந்த ஆன்மிக சர்வதேச மாநாட்டில் பங்கேற்று, இந்தியாவின்
பெருமையையும், ஆன்மிகத்தையும் பேசினார். அவரதுபேச்சு, அயல் நாட்டினரை
கலங்கடித்தது.
தொண்டும், துறவுமே இந்தியாவின் இரண்டு லட்சியங்கள்; துறவு இருக்கும்
இடத்திலேயே தொண்டு இருக்கும் என்கிறார் விவேகானந்தர். வீரம் செறிந்த அவரது
பேச்சு, தூங்கிக்கொண்டிருந்த இந்தியர்களை தட்டி எழுப்பியது. பாரதியின்
புரட்சிக்கு காரணமே நிவேதிதை. பாரதியின் குரு நிவேதிதை; நிவேதிதையின் குரு
சுவாமி விவேகானந்தர். 'எனது குருவின் குரு கடவுள்' என்று விவேகானந்தரை
கடவுளாக பார்த்தவன் பாரதி. வீரத்துறவியான விவேகானந்தரை பற்றி
அறிந்துகொண்டால் மட்டுமே இந்தியாவை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.இவ்வாறு,
சொற்பொழிவாளர் கிருஷ்ண ஜெகனாதன் பேசினார்.


