Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா; பால்குடம் எடுத்துச்செல்ல போலீஸ் தடை

திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா; பால்குடம் எடுத்துச்செல்ல போலீஸ் தடை

திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா; பால்குடம் எடுத்துச்செல்ல போலீஸ் தடை

திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா; பால்குடம் எடுத்துச்செல்ல போலீஸ் தடை

ADDED : அக் 18, 2025 10:59 AM


Google News
Latest Tamil News
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா நேற்று நடந்தது. நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுப்பிரமணிய சுவாமி தனது கரத்தில் உள்ள வேல் மூலம் குன்றத்து மலை மீதுள்ள பாறையில் கீறி கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை சுனையில் உருவாக்கிய நிகழ்ச் சியை நினைவு கூரும் வகையிலும், மழை வேண்டியும் கோயில் மூலவர் கரத்தில் உள்ள தங்கவேல் மலை மேல் கொண்டு செல்லும் விழா நடந்தது.

நேற்று காலை வேலுக்கு கிராமத்தினர் சார்பில் சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் மலை மேல் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள சுப்ரமணியர் கரத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தங்கவேலை சுனை தீர்த்தத்திற்குள் எடுத்துச் சென்று 16 வகை அபிஷேகங்கள் செய்தனர். கிராமத்தினர் சார்பில் 120 படி அரிசியிலான கதம்ப சாதம், பாயாசம் பிரசாதம் வழங்கப்பட்டது. வழக்கமாக 105 படியில் பிரசாதம் வழங்கப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கூடுதலாக பிரசாதம் வழங்கப்பட்டது.

மாலையில் வேல் புறப்பாடாகி மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழநி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, இரவு வேல் மற்றும் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்பு பூப்பல்லக்கில் வேல் வீதி உலா சென்று மூலவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டது.

அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, கோயில் கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சத்தியசீலன், சுமதி, தி.மு.க., தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி பங்கேற்றனர். வேல் மலைமேல் செல்லும் விழாவிற்காக கோயிலில் கருப்பண சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியானது.

பால்குடம் சுமந்து செல்ல தடை நேற்று காலை அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம் பால்குடம் சுமந்து மலை மீது செல்வதற்காக கோயில் கருப்பசாமியை வழிபட்டு புறப்பட்டார். கோயிலுக்குள் அவரை போலீசார் தடுத்து, 'மலைமேல் பால்குடம் கொண்டு செல்லும் புதிய பழக்கத்தை உருவாக்காதீர்கள். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால்குடத்தை செலுத்துங்கள்' என்றனர்.

அதற்கு ராமலிங்கம், 'மலையின் அடிவாரத்தில் மூலவர் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அபிஷேகம் அனைத்தும் அவரது கரத்திலுள்ள தங்கவேலுக்கு தான் நடக்கிறது. அந்த வேல் மலை மேல் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சுனை தீர்த்தத்தில் பாலாபிஷேகம் நடக்கிறது. அதற்காகத்தான் நான் 48 நாள் விரதம் மேற்கொண்டு பால் குடம் எடுத்து செல்கிறேன்' என்றார்.

போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் மதுரை வீரன், 'நீதிமன்றத்தில் அனுமதி பெற்று செல்லுங்கள். பால்குடம் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது. அதை பையில் வைத்து கொண்டு செல்லுங்கள்' என்றனர். அதன்படியே ராமலிங்கம் மலை மேல் கொண்டு சென்று நேர்த்தி கடன் செலுத்தினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us