Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கழிவுகளுடன் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி; தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கழிவுகளுடன் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி; தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கழிவுகளுடன் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி; தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கழிவுகளுடன் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி; தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

ADDED : அக் 18, 2025 09:43 AM


Google News
Latest Tamil News
பல்லடம்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உலர் கழிவுகளை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது; திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது. பல்லடம் போலீசார், லாரியை அப்புறப்படுத்துவதற்காக, கிரேன் கொண்டு வந்தனர்.

லாரியில் வைக்கப்பட்டிருந்த கழிவுகள் அனைத்தும் ரோட்டில் கொட்டின. இவற்றை அகற்றினால் தான் லாரியை அப்புறப்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது. வேறு வழியின்றி, பொக்லைன் வரவழைக்கப்பட்டு, அவற்றை ரோட்டோரத்தில் குவிக்கும் பணி நடந்தது.

வழக்கமாகவே, பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து வந்தன. போக்குவரத்து நெரிசல் ஒருபுறம், தொடர்ச்சியாக பெய்து வந்த மழை மறுபுறம் என, இடையூறுகளுக்கு மத்தியில் கழிவுகளை அகற்றும் பணி 'மின்னல்' வேகத்தில் நடந்தது.

தேசிய நெடுஞ்சாலை மட்டுமின்றி, செட்டிபாளையம் ரோடு, பொள்ளாச்சி ரோடு, அவிநாசி, தாராபுரம் ரோடு என, அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலில் திணறின. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கன்டெய்னர் மற்றும் குப்பைகளை அகற்றும் பணி இரண்டு மணி நேரத்துக்கு மேல் நடந்தது.

கன்டெய்னர் லாரி டிரைவரிடம் போலீசார் விசாரித்தபோது, கோவை, போத்தனுாரில் இருந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள சிமென்ட் ஆலைக்கு பிளாஸ்டிக் உள்ளிட்ட உலர் கழிவுகள், தனியார் நிறுவனம் சார்பில் கன்டெய்னர் லாரி மூலம் கொண்டு செல்லும்போது விபத்து நடந்ததாக தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us