ரூ.500 கோடி நிலம் சுருட்டல்? : போலீசில் 2,457 பேர் புகார் : "மாஜி'க்கள் பலர் தொடர்பு
ரூ.500 கோடி நிலம் சுருட்டல்? : போலீசில் 2,457 பேர் புகார் : "மாஜி'க்கள் பலர் தொடர்பு
ரூ.500 கோடி நிலம் சுருட்டல்? : போலீசில் 2,457 பேர் புகார் : "மாஜி'க்கள் பலர் தொடர்பு
கோவை : எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய, தமிழக மேற்கு மண்டல போலீஸ் எல்லைக்குள் மட்டும், 500 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை, அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள் அபகரித்திருப்பதாக, 2,457 புகார்கள் குவிந்துள்ளன.
மாவட்டம் தோறும், ஏ.டி.எஸ்.பி.,யின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் இப்பிரிவுகளில், நேற்று வரை, 2,457 பேர் புகார் மனு அளித்துள்ளனர்; இவர்கள் பறிகொடுத்ததாகக் கூறப்படும் நிலம், சொத்துகளின் மதிப்பு, 512 கோடி ரூபாய் என, போலீசாரால் மதிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரிடம் இருந்து பெறப்பட்ட புகார் மனுக்கள் அனைத்தையும், சட்ட ரீதியான பரிசீலனைக்கு உட்படுத்திய போலீசார், முதற்கட்டமாக, 114 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். நில அபகரிப்பு நடந்த விதம், சம்பந்தப்பட்டுள்ள நபர்கள், ஆவணங்கள் அடிப்படையில், துரித விசாரணை நடத்தி, மொத்தம், 67 பேரை கைது செய்துள்ளனர்; 38 பேர் அரசியல் கட்சி பிரமுகர்கள்.
இவர்களில் சென்னை, சேப்பாக்கம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன், ஓமலூர் தொகுதி பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசன், சேலம் மாநகராட்சி, 9வது வார்டு தி.மு.க., கவுன்சிலர், 'ஆட்டோ' மாணிக்கம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கைது செய்யப்பட்ட நபர்கள் மீது துரிதமாக விசாரணை நடத்தி குற்றச்சாட்டு அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய, எஸ்.பி.,க்களுக்கு ஐ.ஜி., அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணை நிலையில் இருக்கும் புகார் மனுக்களின் மீதும் உடனடியாக விசாரணை நடத்தி, சட்ட ரீதியான தகுதிகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வழக்குகளின் முன்னேற்றம் குறித்து தினமும் போலீஸ் உயரதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்க வேண்டியுள்ளதால், அந்தந்த மாவட்ட எஸ்.பி.,க்கள் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நில அபகரிப்பு தொடர்பாக தினமும் எண்ணற்ற புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. புகார்களை பெற்றதும், நில அபகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பான சொத்து ஆவணங்களை தீவிரமாக ஆராய்கிறோம். குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் பட்சத்தில், உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்குகிறோம்; சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்கிறோம். குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர் அரசியல்வாதியா, எந்த கட்சியைச் சேர்ந்தவர், அவர் என்ன பதவியில் இருக்கிறார் என்பதை பற்றியெல்லாம் பார்ப்பதில்லை. குற்றம் புரிந்ததற்கான ஆதார ஆவணங்களின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைக்கிறோம். அதே வேளையில், புகார் மனுவில் குற்றச்சாட்டு குறித்து, போதிய ஆதார ஆவணங்கள் இல்லாதபட்சத்தில், விசாரணை நிலையிலேயே மனுக்களை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு, மேற்கு மண்டலத்தில் மட்டும், 600 புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அவற்றின் மீதான மேல்நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.
தீவிர விசாரணை
நிலம் அபகரிப்பு தொடர்பாக, மேட்டுப்பாளையம் தொகுதி, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார், முன்னாள் அமைச்சர் பழனிச்சாமி, அவரது மகன் பைந்தமிழ் பாரி, பொங்கலூர் தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மணி, ஈரோட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜா, ஊட்டியைச் சேர்ந்த முபாரக், திருப்பூரைச் சேர்ந்த தி.மு.க., பிரதிநிதி சுப்ரமணி உள்ளிட்டோர் மீதும் புகார் வந்திருப்பதாகவும், வழக்கு பதிவு செய்வது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், நில அபகரிப்புக்கு எதிரான விசாரணைப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.