இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு 'பி-8ஐ' விமானம்; ரூ.35,000 கோடியில் அமெரிக்காவிடம் வாங்க முடிவு
இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு 'பி-8ஐ' விமானம்; ரூ.35,000 கோடியில் அமெரிக்காவிடம் வாங்க முடிவு
இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு 'பி-8ஐ' விமானம்; ரூ.35,000 கோடியில் அமெரிக்காவிடம் வாங்க முடிவு

புதுடில்லி: இந்திய பெருங்கடலில் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் நடமாட்டத்தை கண்டறியும் வகையில், 35,000 கோடி ரூபாய் மதிப்பில், அமெரிக்காவிடம் இருந்து, 'பி-8ஐ' ரகத்தைச் சேர்ந்த ஆறு கண்காணிப்பு விமானங்களை இந்தியா வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தத்தை இறுதிசெய்ய, அமெரிக்க பிரதிநிதிகள் குழு இன்று டில்லி வருகிறது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்படி அறிவுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், இதற்காக இந்திய இறக்குமதி பொருட்கள் மீது 50 சதவீத வரியை விதித்தார். இதனால், இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது.
எனவே, அமெரிக்காவிடம் இருந்து ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தங்களை இந்தியா ரத்து செய்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் இந்தியாவுடன் மீண்டும் சுமூக உறவை மேம்படுத்த அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அதை உறுதிபடுத்தும் விதமாக, பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்த ஆவலாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து ஆறு 'பி-8ஐ' ரக கண்காணிப்பு விமானங்கள் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பேச்சு நடத்த அமெரிக்க குழு இன்று டில்லி வருகிறது. 'பி-8ஐ' விமானங்களை தயாரிக்கும் போயிங் நிறுவன பிரதிநிதிகள், அமெரிக்க ராணுவ அதிகாரிகள் அடங்கிய இக்குழு இந்திய அதிகாரிகளை சந்தித்து 35,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை இறுதி செய்யவுள்ளது.
தற்போது இந்தியாவிடம், 'பி-8ஐ' ரக விமானங்கள் 12 இருக்கின்றன.
அதில் முதல் எட்டு விமானங்கள் கடந்த 2009ல் வாங்கப்பட்டு, இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டன. அடுத்த நான்கு விமானங்கள் 2016ல் வாங்கப்பட்டன.
இந்திய பெருங்கடல் கண்காணிப்பு பணிக்கு மேலும் 10 விமானங்கள் தேவைப்படுவதாக, மத்திய அரசிடம் கடற்படை கேட்டிருந்தது. அதன்படி, கடந்த 2019ல் ஆறு விமானங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பின்னர், 2021 மே மாதம், இந்தியாவுக்கு பி8 - ஐ ரக விமானத்தை விற்க அமெரிக்க அரசு அனுமதிஅளித்தது. அதன் அடிப்படையில் ஒப்பந்தத்தை இறுதி செய்ய அமெரிக்க பிரதிநிதிகள் குழு இன்று டில்லி வருகிறது.