ஆகஸ்ட் 1 முதல் வேலை நிறுத்த போராட்டம் : தெலுங்கான நடவடிக்கை குழு அறிவிப்பு
ஆகஸ்ட் 1 முதல் வேலை நிறுத்த போராட்டம் : தெலுங்கான நடவடிக்கை குழு அறிவிப்பு
ஆகஸ்ட் 1 முதல் வேலை நிறுத்த போராட்டம் : தெலுங்கான நடவடிக்கை குழு அறிவிப்பு
ஐதராபாத் : 'தனித் தெலுங்கானா உருவாக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்காவிடில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சமூகத்தின் அனைத்துத் பிரிவினரும் பங்கேற்கும் வேலை நிறுத்தம் நடக்கும்' என, தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழு (ஜே.ஏ.சி.,)மிரட்டல் விடுத்துள்ளது.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பா.ஜ., மற்றும் பல்வேறு மக்கள் அமைப்புகள் அடங்கிய தெலுங்கான கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவர்கள் நேற்று, ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியை சந்தித்துப் பேசினர்.
முதல்வரைச் சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய ஜே.ஏ.சி., அமைப்பாளர் பேரா.எம்.கோதண்டராம், ''தெலுங்கானா கோரிக்கையை தான் ஆதரிக்கவோ, எதிர்க்கவோ இல்லை எனக் கூறிய முதல்வர், இதில் தான் முடிவெடுப்பதற்கு எதுவும் இல்லை என்றும், எங்களிடம் கூறினார். எங்களின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் எங்களின் போராட்டத்தில் பங்கேற்பர்,'' என்றார்.
தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர் சங்கங்கள் அனைத்தும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் முழு வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக ஏற்கனவே அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தனி தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்களும், 15 எம்.பி.,க்களும் ஏற்கனவே தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் ரயில் மறியல் போராட்டமும் நடந்தது.