PUBLISHED ON : ஜூலை 12, 2011 12:00 AM

ஒளியேற்றுவாரா ஜெயலலிதா?
வி.மோகன், கடலூரிலிருந்து எழுதுகிறார்: கடந்த தி.மு.க., ஆட்சியால் ஏற்பட்டுள்ள சீர்கேட்டை, தற்போதைய அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வர் ஜெயலலிதா களைந்து வருகிறார். நில அபகரிப்பு மோசடி புகார், சினிமாத் துறையினர் கொடுக்கும் புகார் என, அனைத்தையும் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், கடந்த தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்துத் துறையில், தமிழகம் முழுவதும் பணியமர்த்தப்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் என, 6,400க்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில், ஒழுங்கீனமானோர் மட்டுமின்றி, ஒழுக்கமானவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பணியாளர்கள் அனைவரும், அன்றாடம் காய்ச்சிகள். ஒவ்வொருவரும், ஒன்றரை லட்சம் முதல், இரண்டு லட்ச ரூபாய் வரை பணம் கொடுத்து, இப்பணியைப் பெற்றவர்கள். அதைவிட கொடுமை, தனியார் நிறுவனங்களில் பணியில் இருந்தவர்கள், அரசு உத்தியோகம் கிடைத்தால் போதும் என, அந்த வேலையை உதறிவிட்டு, இப்பணியில் சேர்ந்துள்ளனர். இப்படி கஷ்டப்பட்டு பணியில் சேர்ந்தவர்களை வெளியே அனுப்பினால், அவர்களின் நிலை என்னவாகும். இந்த பணி நீக்கத்தால், பெரும்பாலான பணிமனைகளில், பஸ்களை இயக்க ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முதல்வர் ஜெயலலிதா, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள கண்டக்டர், டிரைவர்கள் பற்றியும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஒழுங்கீனமானோரை களையெடுத்து, மற்றவர்களை பணியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து, அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.
குஷ்புவுக்கு படிப்பினை!
என்.கந்தசாமி, மதுரையிலிருந்து எழுதுகிறார்: 'வெற்றி பெறும்போது, தி.மு.க., வினர் பிரிந்து விடுகின்றனர்; தோல்வி ஏற்படும் போது, ஒற்றுமையோடு இருக்கின்றனர். எனவே, வெற்றி, தி.மு.க.,வுக்குப் பிளவைத் தருகிறது.
தோல்வியே, தி.மு.க.,வுக்கு இணைப்பைத் தருகிறது' என, புது வியாக்கியானம் அளித்து, நம்மை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார் அன்பழகன். அவர் பேச்சைக் கேட்கும்போது, தி.மு.க.,வுக்கு நிரந்தரத் தோல்வி தான் அவசியம் தேவைப்படும் எனத் தெரிகிறது. தோல்விக்கு மேல் தோல்வியைச் சந்திக்கும்போது, தி.மு.க.,வின் கட்டுக்கோப்பு, உடும்புப்பிடி போல இறுகும் அல்லவா? தமிழக மக்கள் புத்திசாலிகள். அதனால்தான், தி.மு.க.,வை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், கருணாநிதிக்கு நிரந்தர ஓய்வு அளித்து, தி.மு.க.,வுக்கு படுதோல்வியை பரிசாக அளித்திருக்கின்றனர். இது தெரியாமல் நடிகை குஷ்பு, தமிழக மக்களை கோபித்துக் கொண்டார். அன்பழகன் அளித்திருக்கும் இந்த விளக்கம், குஷ்புவுக்கு நல்ல படிப்பினையைத் தந்திருக்கும். தோல்விக்கு மேல் தோல்வியைச் சந்தித்து, பலம் பொருந்திய கட்சியாக தி.மு.க., மாறிவிட்டால், அது அ.தி.மு.க.,வுக்குப் பாதகமாக முடியுமே? அதற்காகவாவது, அ.தி.மு.க., ஒருமுறை தோற்க வேண்டும் என, ஜெயலலிதா எண்ண மாட்டாரா? ஜெயலலிதாவையும், கருணாநிதியையும், தோல்வியை விரும்பும் நிலைக்கு, அன்பழகன் கொண்டு வந்துவிட்டாரே!
கருணாநிதிக்கும் பொருந்துமே!
ஆர்.சம்பத்குமார், சென்னையிலிருந்து எழுதுகிறார்: மீண்டும் ஊடகங்களைச் சாடியிருக்கிறார் கருணாநிதி. ஊடகம் என்பது, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றைக் குறிப்பிடும் பொதுவான சொல். கருணாநிதி ஒரு பத்திரிகையாளர்; தயாரிப்பாளராகவும், வசனகர்த்தாவாகவும் வெள்ளித்திரையுலகில் கோலோச்சியவர். அவர் பெயரிலேயே ஒரு தொலைக்காட்சி நிறுவனம் உள்ளது. ஆகவே, ஊடகங்களைப் பற்றி அவர் கூறியது, அவருக்கும் பொருந்துமல்லவா? மத்திய புலனாய்வுத்துறை, சுப்ரீம் கோர்ட்டில் அளித்த தகவல்களின் அடிப்படையில் தான், தயாநிதி ராஜினாமா செய்ய நேரிட்டது. அந்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஊடகங்களின் கடமை. இது எப்படி இழிவுபடுத்துவதாகும்? சி.பி.ஐ.,யும், சுப்ரீம் கோர்ட்டும் ஊடகங்கள் அல்ல. 'ராஜா பதவியில் நீடிக்கிறாரே' என, அப்போது வினவிய சுப்ரீம் கோர்ட், தயாநிதி பற்றி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும் பிரதமர், தயாநிதியின் ராஜினாமாவைக் கோரிப் பெற்றார் என்றால், நடந்த மோசடியில், தயாநிதிக்கும் பங்கு உண்டு என்பதற்கு அடிப்படை ஆதாரம் இருக்கிறது என்று தானே அர்த்தம்? நெருப்பில்லாமல் புகையுமா? நல்லவேளை கருணாநிதி, 'பார்ப்பனச் சூழ்ச்சி காரணமாகத்தான் தயாநிதி ராஜினாமா செய்ய நேரிட்டது' என்று சொல்லாமல் விட்டாரே! அது சரி... 'ஊடகம்' எனும் அழகு தமிழ்ச்சொல் இருக்கையில், நம், 'முத்தமிழ் வித்தகர்' அதைக் கையாளாமல், 'மீடியாக்கள்' என, ஆங்கிலத்தில் கூறுவதேன்?
சோனியா பயம் நியாயம்!
கலைநன்மணி மகிழ்நன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதிகளையும் ராகுல் அடைந்துவிட்டார். நாட்டின் சமூக, அரசியல் நிலவரங்கள் அனைத்தும் அவருக்கு விளங்கிவிட்டது' என, திருவாய் மலர்ந்திருக்கிறார் திக்விஜய்சிங். இவருக்குத் தெரிந்தது, சோனியாவுக்குத் தெரியாதா? தெரிந்தும் ஏன், ராகுலுக்கு பிரதமர் பதவி கொடுக்கவில்லை? சூட்சமம் அங்கே தான் இருக்கிறது. ராகுலுக்கு பிரதமர் பதவி கொடுத்த பிறகு, சோனியா சொல்வதற்கெல்லாம் மன்மோகன் சிங் போல, ராகுல் தலையாட்டுவாரா என்பது சந்தேகம் தான்! சோனியா செயல்படுவதற்கெல்லாம், மன்மோகன் சிங் வாங்கிக் கட்டிக் கொண்டு சமாளிக்கிறார். ராகுல் அப்படி சமாளிப்பாரா? ஒரு கட்டத்தில் எதிர்த்துக் கொண்டால் தன் நிலைமை என்ன ஆகும்? சோனியாவின் பயம் நியாயம் தானே!
அமைச்சர் எதற்கு?
க.ஸ்ரீரதன், கல்லிடைக்குறிச்சி, நெல்லையிலிருந்து எழுதுகிறார்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசு, மக்களுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறது? பெட்ரோலிய பொருட்களின் விலையையும், சமையல் காஸ் விலையையும் தினமும் ஏற்றிக் கொண்டே போகிறது. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை, அந்தந்த அமைப்புகளே ஏற்றிக் கொள்ளலாம் என்றால், பின் மத்திய அரசில் அத்துறைக்கு அமைச்சர் எதற்கு? மக்கள் என்ன, பொதி சுமக்கும் கழுதைகளா? கழுதையின் மீது கூட, அதிகமான பளுவை சுமத்தினால், பளுவை போட்டு விட்டு ஓடிவிடும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தான் மத்திய அரசு உள்ளது. ஒரு பக்கம் லஞ்சம், மறுபக்கம், கோடிகோடியாய் ஊழல். இந்தியா எங்கே செல்கிறது? லோக்பால் மசோதாவால் மட்டும், என்ன திருப்பம் ஏற்பட்டுவிடப் போகிறது?