PUBLISHED ON : ஜூலை 01, 2024 12:00 AM

'காலம் முழுதும் சிறையில் இருந்து விடுவாரோ என நினைத்தோம். நல்ல வேளையாக வெளியில் வந்து விட்டார்...' என, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ேஹமந்த் சோரன் பற்றி கூறுகின்றனர், அவரது கட்சியினர்.
ஜார்க்கண்ட் முதல்வராக இருந்தபோது, நில ஆக்கிரமிப்பில் நடந்த பண மோசடி வழக்கில், கடந்த ஜனவரியில் அமலாக்கத்துறையால் சோரன் கைது செய்யப்பட்டார். கைதாவதற்கு ஒரு நாள் முன்னதாக, தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, கட்சியின் மூத்த நிர்வாகியான சம்பாய் சோரனிடம் ஒப்படைத்தார்.
எப்படியும் ஜாமினில் வெளியில் வந்து விடலாம் என நினைத்தார். உச்ச நீதிமன்றம் வரை சென்றும், பலன் இல்லாமல் போய் விட்டது.
அதற்குள் லோக்சபா தேர்தலும் வந்து விட்டது. பிரசாரம் செய்ய முக்கிய தலைவர் இல்லாமல், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் தவித்தனர். சோரனின் மனைவி கல்பனா, ஓரளவு நிலைமையை சமாளித்தார். ஆனாலும், பெரிய வெற்றி கிடைக்கவில்லை.
சட்டசபை தேர்தல் விரைவில் நெருங்கும் நிலையில், பிரசாரத்துக்கு தலைவர் இல்லாமல், அதிலும் தோல்வியை சந்திக்க நேரிடுமோ என கட்சியினர் பயந்தனர். சமீபத்தில், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் அளித்தது. ஆறு மாதங்களுக்கு பின் சிறையில் இருந்து, தங்கள் தலைவர் வெளியில் வந்துள்ளதால், கட்சி நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
எதிர்க்கட்சியினரோ, 'சோரன் ஜாமினில் தானே வந்துள்ளார். வழக்கில் அவருக்கு தண்டனை கிடைத்தால் நிரந்தரமாக உள்ளே இருக்க வேண்டுமே...' என, கிண்டலடிக்கின்றனர்.