PUBLISHED ON : செப் 22, 2011 12:00 AM

பழமையும் புதுமையும் கலந்தது கன்னிமரா! கன்னிமரா நூலகத்தின் நூலகர் பார்வதி: கன்னிமராவில், கிட்டத்தட்ட ஆறு லட்சம் புத்தகங்கள் உள்ளன.
அதில், 'புத்தகக் காப்புப் பிரிவு' பகுதியில் மட்டும் ஒரு லட்சம் புத்தகங்கள் பராமரிக்கப்படுகின்றன. பல மொழிகளில், இந்தியா முழுவதும் வெளிவரும் நாளிதழ்கள் இங்கு கிடைக்கும். பெரும்பாலான வாசகர்கள், பழைய தமிழ், ஆங்கில நாளிதழ்களைத் தேடி வருகின்றனர் என்பதால், ஐந்து ஆண்டுகள் வரையான நாளிதழ்களை, மாத வாரியாகப் பிரித்து வைத்து பாதுகாக்கிறோம். தொடக்கத்திலிருந்து இன்று வரை, தமிழக சட்டசபை, பார்லிமென்ட் விவாதங்களின் தொகுப்புகள் உள்ளன. இதைத் தவிர, வேறு எங்கும் கிடைக்காத பழமையான நூல்கள் இங்கு உள்ளன. அண்ணாதுரை படித்திராத கன்னிமரா நூல்களே இல்லை. அவர் அன்று அமர்ந்து படித்த இருக்கையை இன்றும் பாதுகாத்து வருகிறோம்; அதேபோல், வி.வி.கிரி, முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் என்று பலர் வந்துள்ளனர்; வந்து கொண்டும் உள்ளனர். இதைத் தவிர அரசியல், சமூகப் பேச்சாளர்களும் தவறாமல் வருகின்றனர். தமிழகம் மட்டும் அல்லாமல், இந்தியாவின் பிற மாநில, வெளிநாட்டு ஆய்வு மாணவர்களும் இங்கு வருகின்றனர். அரிய புத்தகங்களை வீட்டுக்குக் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. இங்கு அமர்ந்து குறிப்பு எடுத்துக் கொள்ளலாம்; தேவையென்றால், இங்கேயே நகல் எடுத்துத் தருவோம். கன்னிமராவில் உள்ள பழைய கட்டடம், இரும்புக் கம்பிகளின்றி பர்மா தேக்கு மரங்களால் கட்டப்பட்டது. ஆங்கிலேயர்களுக்காக, அன்று பல கட்டடங்களை கட்டித் தந்த, நம்பெருமாள் செட்டி குழுமமே, கன்னிமராவையும் கட்டி தந்திருக்கிறது. இங்கு பதிக்கப்பட்டுள்ள கண்ணாடிகள் அனைத்தும், பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை; இப்படி, பல சிறப்புகள் வாய்ந்தது கன்னிமரா நூலகம்!