Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/நிஜக்கதை/நான் மறக்கப்பட்ட கல் மண்டபம்...

நான் மறக்கப்பட்ட கல் மண்டபம்...

நான் மறக்கப்பட்ட கல் மண்டபம்...

நான் மறக்கப்பட்ட கல் மண்டபம்...

PUBLISHED ON : செப் 08, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நான் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகிலுள்ள பனமலைப் பகுதியில் உள்ள கல் மண்டபம்.பல்லவ மன்னர்கள் காலத்தில், கருங்கற்களால் கலைநயத்துடன் என்னை எழுப்பினர்.என் அருகே தாளகிரீஸ்வரர் கோவில், சித்ராவதி நதிக்கரையின் அழகு...எல்லாம் எனக்கு சாட்சிகள்.

ஒருகாலத்தில், யாத்திரிகர்கள் வந்து என் நிழலில் ஓய்வெடுத்தனர்.பக்தர்களின் பஜனை ஓசையால் என் கற்கள் அதிர்ந்தன.வழிப்போக்கர்களின் சிரிப்பில் நான் உயிர் பெற்றேன்.

ஆனால் இன்று…நான் பாழடைந்திருக்கிறேன்.என் கற்கள் சிதிலமடைந்தன,என் சுவர்கள் வெறிச்சோடி, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது.

நான் வெறும் கற்களல்ல…உங்கள் வரலாறு, உங்கள் கலாச்சாரம், உங்கள் பாரம்பரியம் நான்.

என்னைக் காப்பாற்றுங்கள்.என்னை மீண்டும் உயிர்ப்பியுங்கள்.என் மீது படிந்திருக்கும் தூசியை நீக்குங்கள்.

ஏனெனில் நான் சிதைந்து மறைய விரும்பவில்லை…என் பல்லவப் பெருமையோடு, உங்கள் வருங்காலத்துக்கும் சாட்சியாக நிற்க விரும்புகிறேன்.

இது ஒரு சிதைந்த மண்டபத்தின் நெஞ்சுருக்கும் குரல் இது.

இந்த சிதைந்த மண்டபம் இன்று மௌன சாட்சியாக நிற்கும் பல கல் மண்டபங்களின் துயரக் குரலை சுமக்கிறது. பல்லவ மன்னர்களின் கரங்களால் செதுக்கப்பட்ட இந்த மண்டபங்கள், கருங்கற்களால் கலைநயத்துடன் எழுப்பப்பட்டன. ஒரு காலத்தில் யாத்திரிகர்கள், வழிப்போக்கர்கள் இளைப்பாறிய இடம் இன்று பாழடைந்த சிதிலங்களாக நம்மை நோக்கி கண்ணீருடன் பேசுகின்றன.Image 1468330ஒருகாலத்தில் பக்தர்களின் சிரிப்பு, பஜனை, தேவபாடல்கள் எனது கற்களுக்குள் அதிர்ந்தன. வழி சென்றோர் இங்கே ஓய்வு பெற்று, என்னை உயிர் பெற்றவனாக்கினர். ஆனால் இன்று, என் கற்கள் சிதிலமடைந்து, என் நிழலில் சமூக விரோதிகளின் நடமாட்டம் மட்டுமே நடக்கிறது. நான் மறக்கப்பட்டேன், பராமரிப்பின்றி சிதைந்து கொண்டிருக்கிறேன்” காது கொடுத்து கேட்டால் இந்த கதறல் சத்தம் கேட்கவே செய்கிறது.

கோசப்பாளையத்தில் உள்ள மண்டபங்கள் கருங்கற்களில் கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் தங்கி ஓய்வெடுக்க வலுவான இடவசதிகள் மட்டுமின்றி, அருகில் காளி சிற்பமும் அமைந்துள்ளது. அந்தக் காலத்து சிற்பிகளின் திறமை, இன்றும் சிதிலங்களின் வழியாக வெளிப்படுகிறது.

மண்டபங்கள் வெறும் கல் கட்டிடங்கள் அல்ல. அவை நமது வரலாறு, கலை, கலாச்சாரம், ஆன்மிகம் ஆகியவற்றின் சின்னங்கள். சிதிலமடைந்து காணப்படும் இந்த மண்டபங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டால், வருங்கால சந்ததியினருக்கு நம் பண்டைய பாரம்பரியத்தைப் பாதுகாத்து அளிக்க முடியும்.

விழுப்புரம் - செஞ்சி - பனமலைப் பகுதிகளில் சிதைந்து கிடக்கும் இந்த மண்டபங்களாகிய கதறல் கேட்கவேண்டியவர்களுக்கு கேட்கட்டும்,இந்த கல் மண்டபங்களை காப்பாற்றுவது வரலாற்றுக்கும், நம் கலாச்சாரத்துக்கும் நாம் செய்ய வேண்டிய புனிதக் கடமையாகும்.

செஞ்சி கோட்டையைப் பார்ப்பதற்காக அடுத்த முறை விழுப்புரம் வரும்போது ,பனமலையையும் மறக்காமல் பாருங்கள். சிதைந்து போன அந்தக் கல் மண்டபங்கள் உங்களை கவர்ந்திழுக்கும். அவற்றின் மௌனம் கூட உங்களிடம் ஒரு கதை பேசும்.

கேட்கலாம் வாருங்கள்.

-எல்.முருகராஜ்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us