Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/2,777 அரசு உயர்நிலைப் பள்ளிகளில்,"லேப்' வசதி எங்கே? : 10ம் வகுப்பிற்கு செய்முறைத் தேர்வு நடத்துவதில்

2,777 அரசு உயர்நிலைப் பள்ளிகளில்,"லேப்' வசதி எங்கே? : 10ம் வகுப்பிற்கு செய்முறைத் தேர்வு நடத்துவதில்

2,777 அரசு உயர்நிலைப் பள்ளிகளில்,"லேப்' வசதி எங்கே? : 10ம் வகுப்பிற்கு செய்முறைத் தேர்வு நடத்துவதில்

2,777 அரசு உயர்நிலைப் பள்ளிகளில்,"லேப்' வசதி எங்கே? : 10ம் வகுப்பிற்கு செய்முறைத் தேர்வு நடத்துவதில்

ADDED : செப் 04, 2011 12:22 AM


Google News
Latest Tamil News
சென்னை: சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், அனைத்துப் பள்ளிகளிலும் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டு முதல் செய்முறைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தனியார் பள்ளிகளில் ஏற்கனவே,'லேப்' வசதிகள் இருக்கின்றன. ஆனால், 2,777 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளில்,'லேப்' வசதிகள் இல்லாததால், மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்திய பள்ளி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பழைய கல்வித் திட்டத்தின் கீழ் செய்முறைத் தேர்வு நடைமுறையில் இருந்தது. தற்போது, சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வந்துவிட்டதால், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே, இரண்டு மாதம் பாடப் புத்தகங்கள் இல்லாத நிலையில், தற்போது தான் பள்ளிகளில் பாடம் நடத்தத் துவங்கியுள்ளனர்.

10ம் வகுப்பில் அறிவியல் பாடத்திற்கான 100 மதிப்பெண்களில், 75 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வுக்கும் (தியரி), 25 மதிப்பெண்கள் செய்முறைத் தேர்வுக்கும் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்காக, முந்தைய அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது. செய்முறைத் தேர்வு, ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறும். இதற்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. தனியார் பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில், அவர்களுக்கு ஏற்கனவே செய்முறைத் தேர்வு நடைமுறையில் இருந்ததால், தனியார் பள்ளிகளில் முழுமையான அளவில், 'லேப்' வசதிகள் உள்ளன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், குறிப்பாக உயர்நிலைப் பள்ளிகளில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, 'லேப்'களும், பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏற்றார்போல் அமைக்கப்பட்டுள்ளன. அந்த, 'லேப்'களை பயன்படுத்தி, 10ம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் செய்முறையை செய்ய முடியாது. எனவே, மேல்நிலைப் பள்ளிகளிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கென தனியாக, 'லேப்' வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, மாநிலத்தில் 4,557 உயர்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், தனியார் பள்ளிகள் 1,780. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 543. அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் 2,234. தனியார் பள்ளிகளை தவிர்த்து, மீதமுள்ள 2,777 உயர்நிலைப் பள்ளிகளில் முழுமையான அளவில், 'லேப்' வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதே போல், 5,560 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், தனியார் பள்ளிகள் 2,128. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 1,044; அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் 2,388. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 3,432 பள்ளிகளில், 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கென தனி, 'லேப்' வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். 'லேப்' அமைப்பதற்கு, இதுவரை பள்ளிக் கல்வித்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில், செய்முறைத் தேர்வுக்கு உரிய பாடங்களை நிர்ணயித்து, பள்ளிகளுக்கு அறிவிக்க வேண்டும். இந்தப் பணிகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதனால், செய்முறைத் தேர்வை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல், மாணவர்கள் தவிக்கின்றனர்.

ஆசிரியர்கள் எச்சரிக்கை : பெயர் வெளியிட விரும்பாத அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறும் போது,'மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், சில ஆய்வக கருவிகளை ஒவ்வொரு பள்ளிக்கும் ஏற்கனவே வழங்கினர். ஆனால், அவற்றை வழங்கி நீண்ட காலமாகிறது. எனவே, அவை தற்போது பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கிறதா என்று கூற முடியாது. முதலில், செய்முறைத் தேர்வுக்குரிய பாடப் பகுதிகளை அறிவித்து, அதற்கேற்ப ஆய்வக கருவிகளை வழங்கி, முழுமையான அளவில், 'லேப்' அமைப்பதற்கு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். எதையுமே செய்யாமல் இருந்தால், கடைசி நேரத்தில் செய்முறைத் தேர்வு நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்படும்' என்றனர்.

நிதி எங்கே? : அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள் 2,777, மேல்நிலைப் பள்ளிகள் 3,432 என மொத்தம் 6,209 பள்ளிகளில் புதிதாக, 'லேப்' வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு பல லட்ச ரூபாய் தேவை. இதற்காக இதுவரை நிதி ஒதுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை விரைந்து செயல்பட வேண்டிய நெருக்கடி எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us