இரு கோவில்களை புறக்கணிப்பதால் தோஷம்
இரு கோவில்களை புறக்கணிப்பதால் தோஷம்
இரு கோவில்களை புறக்கணிப்பதால் தோஷம்
UPDATED : ஆக 17, 2011 01:24 AM
ADDED : ஆக 16, 2011 11:47 PM

திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோவிலைச் சுற்றியுள்ள, அனந்தன்காடு கோவில் மற்றும் வில்வமங்கல சாமியார் கிருஷ்ணன் கோவில் ஆகியவற்றை புறக்கணிப்பதால், சுவாமிக்கு அதிருப்தி ஏற்பட்டு தோஷம் இருப்பதாக தேவபிரசன்ன நிகழ்ச்சியில் தெரியவந்துள்ளது.கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்திப் பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில், பாதாள அறைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் நியமித்த ஐந்து பேர் கொண்ட குழு, கோவிலில் பாதுகாக்கப்பட்டு வரும் பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய இங்கு வந்துள்ளது.
மதிப்பீடு செய்யும் பணி துவங்குவதற்கு முன், தேவ பிரசன்னம் (சுவாமியின் கருத்து கேட்டல்) நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மூன்று நாட்கள் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், பல்வேறு தோஷங்கள் இருப்பதும், அதற்கு பரிகாரம் செய்வதற்கான நீண்ட பட்டியலையும், தேவ பிரசன்னம் நடத்தியவர்கள் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரிடம் அளித்துள்ளனர்.இதையடுத்து, தோஷங்களை களைய பரிகார பூஜைகள் துவங்கப்பட்டு, இரு பூஜைகள் (பகவதி சேவா மற்றும் மிருத்யுங்ஜெய ஹோமம்) ஆகியவை நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில், இக்கோவிலின் வடக்கு வாசல் அருகே பழமை வாய்ந்த, அனந்தன்காடு கோவில் உள்ளது. நாகராஜரை (அனந்தன்) மூலவராக கொண்டுள்ள இக்கோவில், பத்மநாபசுவாமி கோவிலின் ஆரம்பம் என்பதும், இங்கு தான் வில்வமங்கல சாமியார் இறைவனை கண்ட அனந்தன்காடு இருந்ததாகவும் ஐதீகம்.
துவக்கத்தில் இக்கோவில், பத்மநாபசுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. ஆனால், தற்போது கோர்ட் நியமித்தவரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், போதுமான ஆசார அனுஷ்டானங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. கோவிலின் மேற்கு வாசல் அருகே வில்வமங்கல சாமியார் கிருஷ்ணன் கோவில் உள்ளது.இங்கு தான் அவரது சமாதியும் இருப்பதாக கூறப்படுகிறது. இக்கோவிலுக்கு நித்யபூஜை மற்றும் நைவேத்தியத்திற்கான அரிசி, பால், சர்க்கரை போன்ற பல்வேறு பொருட்களை, பத்மநாபசுவாமி கோவில் நிர்வாகம் தான் அளித்து வருகிறது. ஆனால், அப்பொருட்கள் ஒரு வாரத்திற்கு கூட போதுமானதாக இல்லை.இருப்பினும், நித்யபூஜைகள் தவறாமல் செய்து வருவதாகவும், பக்தர்கள் வந்தால் பூஜை செய்ய அர்ச்சகர்கள் (கீழ்சாந்தி) இல்லை என புஷ்பாஞ்சலி சாமியார் நீலகண்ட பாரதிகள் தெரிவித்துள்ளார்.
இவ்விரு கோவில்களையும் போதிய அளவில் பராமரிக்கவில்லை என, அஷ்டமங்கல தேவ பிரசன்னத்தில் கண்டறியப்பட்டுள்ளது.இவ்வகையிலான அலட்சியம், மூலவருக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளதாகவும், இது மிகப் பெரிய தோஷங்களை உருவாக்கும் என்றும், அதற்குரிய பரிகாரங்கள் குறித்தும் அதில் கண்டறியப்பட்டுள்ளது.