புதுக்கோடையில் திருச்சி ரவுடி துரைசாமி சுட்டுக்கொலை
புதுக்கோடையில் திருச்சி ரவுடி துரைசாமி சுட்டுக்கொலை
புதுக்கோடையில் திருச்சி ரவுடி துரைசாமி சுட்டுக்கொலை
UPDATED : ஜூலை 11, 2024 07:41 PM
ADDED : ஜூலை 11, 2024 06:21 PM

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் போலீசாரை தாக்கிய திருச்சியைச் சேர்ந்த ரவுடி துரை சாமி என்பவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்தது.
திருச்சி, வண்ணாரப்பேட்டை அருகே, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் துரை என்ற துரைசாமி, 42; இவர், புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று, ரவுடியை பிடிக்க முயன்ற போது, போலீஸாருக்கும் ரவுடிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ரவுடி துரை போலீசாரை தாக்கி விட்டு, தப்ப முயன்றார். உடனே, போலீசார் பாதுகாப்பு கருதி துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த துரை, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இறந்தார்.
திருச்சி, புதுக்கோட்டை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி துரை மீது நான்கு கொலை வழக்குகள், கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு, பிப். 20ம் தேதி, திருட்டு வழக்கில் துரை மற்றும் அவரது தம்பி சோமசுந்தரம் ஆகியோரை திருச்சி போலீசார் கைது செய்தனர். அதன் பின், நகைகளை மீட்பதற்காக, அவர்ளை ஜீப்பில் அழைத்துச் சென்ற போது, புத்துார் குழுமாயி அம்மன் கோவில் அருகே, போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றனர். அப்போது, போலீசார் துரை மற்றும் சோமசுந்தரம் ஆகியோரது முழங்காலுக்கு கீழ் சுட்டு பிடித்தனர், என்பது குறிப்பிடத்தக்கது.