Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/புதுக்கோட்டையில் பிரசவ இறப்புகள் குறைந்துள்ளது

புதுக்கோட்டையில் பிரசவ இறப்புகள் குறைந்துள்ளது

புதுக்கோட்டையில் பிரசவ இறப்புகள் குறைந்துள்ளது

புதுக்கோட்டையில் பிரசவ இறப்புகள் குறைந்துள்ளது

ADDED : ஜூலை 12, 2011 12:06 AM


Google News
புதுக்கோட்டை: ''புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான பிரசவம் மருத்துவமனைகளில் நடப்பதால் மகப்பேறு இறப்புகள் குறைந்துள்ளது,'' என்று தமிழக மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் சூர்யகலா தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் உலக மக்கள் தொகை நாள் இருவார துவக்கவிழாவை முன்னிட்டு, சுகாதாரத் துறையின் மாவட்ட குடும்பநல செயலகம் சார்பில் பேரணி மற்றும் கருத்தரங்கு நடந்தது. பொது அலுவலக வளாகத்தில் பேரணியை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி துவக்கிவைத்தார். மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் ராமநாதன், இணை இயக்குனர் சூர்யகலா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர்கள் கிருஷ்ணலீலா, சந்திரமோகன் உட்பட சுகாதாரத்துறையினர், தொண்டு நிறுவனத்தினர், பள்ளி, கல்லூரி மாணவிகள் பலர் பங்கேற்றனர். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக டி.எஸ்.எம்.எஸ்., வளாகத்தை அடைந்தது. தொடர்ந்து, மக்கள் தொகை விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இதில், தமிழக மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் சூரியகலா கூறியதாவது: மக்கள் தொகையை எடுத்துக்கொண்டால் உலக நாடுகள் வரிசையில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த வழிமுறைகள் மற்றும் இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி) 16 லட்சத்து 18 ஆயிரத்து 725 ஆகும். இவர்களில் ஆண்கள் எட்டு லட்சத்து மூவாயிரத்து 337, பெண்கள் எட்டு லட்சத்து 15 ஆயிரத்து 388 பேர் ஆவர். ஆண்களை விட பெண்கள் 12 ஆயிரம் பேர் அதிகம். பிறப்பு விகிதம் என்பது 16.4 ஆகவும், இறப்பு விகிதம் 4.8 ஆகவும் உள்ளது. மாவட்டத்தில் தற்போது வீடுகளில் பிரசவம் நடப்பது வெகுவாக குறைந்துள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் பிரசவத்துக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்ப்பதால் மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிரசவத்துக்கு பின்னரும் தாய், சேய் நலம் மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்காணிக்கப்படுவதால் சிசு மரண விகிதமும் வெகுவாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கருத்தரங்கில் மகளிர் திட்ட அலுவலர் திருவரங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயராணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட இயக்குனர் கவுசல்யா, மாவட்ட தாய்,சேய் நல அலுவலர் சுஜாதா உட்பட பலர் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட குடும்பநல விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us