/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/"ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்துக்கு வட்டியில்லா கடனுதவி :திருப்பூர் தொழில் துறையினர் மகிழ்ச்சி"ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்துக்கு வட்டியில்லா கடனுதவி :திருப்பூர் தொழில் துறையினர் மகிழ்ச்சி
"ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்துக்கு வட்டியில்லா கடனுதவி :திருப்பூர் தொழில் துறையினர் மகிழ்ச்சி
"ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்துக்கு வட்டியில்லா கடனுதவி :திருப்பூர் தொழில் துறையினர் மகிழ்ச்சி
"ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்துக்கு வட்டியில்லா கடனுதவி :திருப்பூர் தொழில் துறையினர் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 29, 2011 11:48 PM
சாயக்கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காண, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு வசதியாக, சரியான நேரத்தில் தமிழக அரசு வட்டியில்லா கடனுதவி செய்திருப்பதாக, திருப்பூர் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் சாயப்பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை மேம்படுத்த வசதியாக, வட்டியில்லா கடன் உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. தமிழக அரசின் இத்தகைய அறிவிப்பை, அனைத்து தொழில் அமைப்புகளும்வரவேற்றுள்ளன.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல்: தமிழக அரசு, பொருளாதார ரீதியாக உதவிகள் செய்திருப்பதை வரவேற்கிறோம். இதன் மூலமாக, சாயத்தொழில் பிரச்னைக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கோடை கால ஆர்டர் விசாரணை நடந்து வரும் இந்நேரத்தில், தமிழக முதல்வரின் அறிவிப்பு, வெளிநாட்டு பையர்கள் மத்தியிலும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஏற்றுமதி பிரிவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.'சைமா' தலைவர் ஈஸ்வரன்: சாயக்கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காண, நவீன தொழில்நுட்பத்தை கடைபிடிக்க 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடனை ஒதுக்கியுள்ளது. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றியுள்ளது, தமிழக அரசு. 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி: போதுமான நிதி ஆதாரம் இல்லாமல், சாய ஆலை உரிமையாளர்கள் தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய முடியாமல் தத்தளித்தனர். நிலையை உணர்ந்த முதல்வர், மானியம் கொடுக்க தாமதம் ஏற்படும் என்பதால், வட்டியில்லா கடனை கொடுத்து மகிழ்வித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணம் 18 கோடி ரூபாயையும் அரசே வழங்கும் என்றும் அறிவித்துள்ளார். தொழில்நுட்ப மேம்பாட்டின் போதும், அரசு தேவையான உதவிகளை செய்யும் என்றும் உத்தரவாதம் கொடுத்துள்ளார். இதனால், அனைத்து தொழில் துறையினரும் நிம்மதி அடைந்துள்ளனர். தகுதிவாய்ந்த தனியார் சுத்திகரிப்பு ஆலைகளையும், சலவை ஆலைகளையும் விரைவில் திறக்க அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தமிழக அரசு விரைவில் அத்தகைய நடவடிக்கையை எடுக்கும் என்று அனைவரும் நம்புகிறோம். திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் (டீமா) சங்க தலைவர் முத்துரத்தினம்: தற்போதைய பொருளாதார பிரச்னையை அரசு தீர்த்துள்ளது; 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை விரைவில் செயல்படுத்தும்போது, 320 கோடி ரூபாய் மானியத்தையும் வழங்கி விடும். சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். எதிர்காலம் கேள்விக்குறியாகி இருந்த நேரத்தில், தமிழக முதல்வர், தொழிலுக்கு வழிகாட்டி உதவியிருப்பது வரவேற்புக்குரியது. சாய ஆலை உரிமையாளர்களும் ஒரே நிலைப்பாட்டுடன் இருந்து, தொழிலை சிறப்பாக நடத்த வேண்டும்.'டிப்' சங்க தலைவர் மணி: நீண்ட நாட்களுக்கு பின், விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிவாரணத்தை அரசே வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், விரைவில் பொது மற்றும் தனியார் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு உட்பட்ட அனைத்து சாய ஆலைகளையும் திறக்க வழிகாட்ட வேண்டும். 'ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிப்புக்கு கடிதம் கொடுத்துள்ள தனியார் சுத்திகரிப்பு நிலையங்களையும், அனைத்து சலவை ஆலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.'டெக்மா' தலைவர் கோவிந்தசாமி: தொழிலை காப்பாற்றுங்கள்; சரியான தொழில்நுட்பத்தை வழங்குங்கள் என்று மட்டுமே சாய ஆலையினர் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். திருப்பூர் மக்களின் பொருளாதார நெருக்கடி நிலையை உணர்ந்த, தமிழக முதல்வர், 200 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக வழங்கியுள்ளார்.பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து, நிதியுதவி செய்துள்ளார். மேலும், 'நீங்களே சரியான தொழில்நுட்பத்தை தேர்வு செய்யுங்கள்; மாசுக்கட்டுப்பாடு வாரியம் இசைவு தெரிவித்தால், அதை செயல்படுத்துங்கள்' என்றும் தெரிவித்துள்ளார். தமிழக அரசு செய்த உதவி இமாலய சாதனை போன்றது.'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த்: தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையை வரவேற்கிறோம். தற்போது கோடை கால ஆர்டர்கள் குறித்து விசாரணை நடக்கிறது. சாயத்தொழில் பிரச்னையால், வெளிநாட்டு பையர்கள் திருப்பூருக்கு ஆர்டர் கொடுப்பதில் தயக்கம் காட்டினர். அரசு அறிவிப்பால், வெளிநாட்டு பையர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்; திருப்பூரை நாடி வரத்துவங்கியுள்ளனர். மேலும், தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி, மூடப்பட்டுள்ள அனைத்து சாய சலவை ஆலைகளையும் விரைவில் திறக்க வேண்டும். 'சிஸ்மா' பொது செயலாளர் பாபுஜி: பின்னலாடை தொழில் என்னவாகும் என்று கவலையில் சிக்கியிருந்த தொழில் துறையினருக்கு அரசு உயிரூட்டியுள்ளது. சரியான நேரத்தில் கடன் உதவி செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலமாக, விரைவில் சாய ஆலைகள் திறக்க வாய்ப்புள்ளது. தீபாவளி, ரம்ஜான் போன்ற பண்டிகைகால உள்ளூர் விற்பனை ஆர்டர்களுக்கு, திருப்பூரிலேயே சாயமிட்டுக் கொள்ள முடியும். சலவை ஆலைகளை திறந்தால், உள்நாட்டு பனியன் உற்பத்தி பழைய நிலைக்கு திரும்பும்.தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் (டாஸ்மா) தலைவர் அப்புக்குட்டி: சாயத்தொழிலையும், அதன் மூலமாக பனியன் தொழிலையும் தமிழக அரசு பாதுகாத்துள்ளது. பொது சுத்திகரிப்பு நிலையங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக வட்டியில்லா கடன் வழங்கியிருப்பதால், சுத்திகரிப்பு பிரச்னை தீரும்; திருப்பூரில் பின்னலாடை தொழில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்போது, முடங்கியுள்ள நூற்பாலை தொழிலும் மறுவாழ்வு பெறும்.'சிம்கா' தலைவர் விவேகானந்தன்: சாய சலவை ஆலைகள் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்கிறோம். அரசு திட்டங்கள் மூலமாக, பின்னலாடை தொழில் புத்துயிர் பெறுவதுடன், அழிவுப்பாதையில் சென்ற பனியன் தொழில் பாதுகாக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பங்களை செயல்படுத்துவதற்காக 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடனும், விவசாயிகளுக்கான நிவாரண தொகை 18 கோடி ரூபாயையும் வழங்குவதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலமாக, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. அரசு உதவிகளால் பரம திருப்தி!திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜன் கூறுகையில்,''தமிழக அரசு நடவடிக்கை அனைத்து துறையினருக்கும் பரமதிருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில் நுட்பத்தை செயல்படுத்தவும், புதிய மெஷின்களை பொருத்தவும், நிதி ஆதாரம் தேவையாக இருந்தது. அதற்காக, ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள மானிய தொகையை வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ''நாங்கள் எதிர்பார்க்காத வகையில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, வட்டியில்லா கடனாக 200 கோடி ரூபாயை வழங்குவதாக, தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதன் மூலமாக, பொது சுத்திகரிப்பு நிலையங்களில் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்படும். ஓரிரு மாதங்கள் ஆனாலும், பொது சுத்திகரிப்பு நிலையங்கள், 100 சதவீதம் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் அளவுக்கு தகுதி பெறும். திருப்பூர் சாயத்தொழில் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தும் என்று நம்புகிறோம்,'' என்றார்.
- நமது நிருபர் -