வெறி நாய்க்கடி தடுப்பூசி செலுத்தினாலும் 'ரேபிஸ்' நோயால் உயிரிழப்பு ஏற்படுவது ஏன்?
வெறி நாய்க்கடி தடுப்பூசி செலுத்தினாலும் 'ரேபிஸ்' நோயால் உயிரிழப்பு ஏற்படுவது ஏன்?
வெறி நாய்க்கடி தடுப்பூசி செலுத்தினாலும் 'ரேபிஸ்' நோயால் உயிரிழப்பு ஏற்படுவது ஏன்?
ADDED : செப் 20, 2025 02:32 AM

நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர், தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், உயிரிழந்ததற்கான காரணம் குறித்து, பொது சுகாதாரத் துறை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், 20 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. ஆண்டுதோறும் நாய்கள் இனப்பெருக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனால், நாய்க்கடியால் ஆண்டுக்கு சராசரியாக, 4.80 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில், 40 பேர் வரை, 'ரேபிஸ்' தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர்.
உத்தரவு இந்தாண்டில் இதுவரை, 3.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 22 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளனர்.
இந்த 22 பேரும், வெறி நாய்க்கடிக்கான தடுப்பூசியை முறையாக செலுத்திக் கொண்டவர்கள்; அப்படி இருந்தாலும், அவர்கள் உயிரிழந்து இருப்பதாக அக்குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்கள் முறையாக தடுப்பூசி செலுத்தியுள்ளனரா; நாய்கள் கடித்து எத்தனை மணி நேரத்தில் தடுப்பூசி செலுத்தினர்; அதற்கு முன் தடுப்பு சிகிச்சை எடுத்தனரா போன்றவற்றை ஆய்வு செய்ய, பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுஉள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறியதாவது:
தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் ரேபிஸ் நோய் வந்ததற்கு, தடுப்பூசி வேலை செய்யவில்லை என்று கூற முடியாது. தமிழகத்தில், 3.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகவில்லை.
கடினம்
தற்போது வரை, 22 பேர் தான் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நாய் கடித்தால் உடனடியாக தாமதமின்றி சிகிச்சை பெற வேண்டும். முறையாக தடுப்பூசி செலுத்தாமல் விட்டால், ரேபிஸ் வந்தால் காப்பாற்றுவது கடினம்.
இந்தாண்டு உயிரிழந்துள்ள, 22 பேரும் முறையாக தடுப்பூசி மற்றும் சிகிச்சை முறையை பின்பற்றி உள்ளனரா என ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நாய் கடித்தால் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? நாய், பூனை போன்ற எந்த பிராணி கடித்திருந்தாலும், உடனடியாக சோப்பு, கிருமி நாசினி கொண்டு குறைந்தது, 10 முறையாவது, அந்த இடத்தை கழுவ வேண்டும். பின், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். குறிப்பாக, நாய் கடித்த இடம் மிக ஆழமாக இருந்தால், ரேபிஸ் தடுப்பூசி யுடன், 'இம்யூனோகுளோபளின்' மருந்தையும் சேர்த்து செலுத்த வேண்டும். ஏனென்றால், தடுப்பூசி செலுத்தினால், ஏழு நாட்களுக்கு பின், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதேபோல், நாய் கடித்தால், 10 நாட்களுக்கு பின் தான் ரேபிஸ் பாதிப்பை ஏற்படுத்தும். இடையில் இருக்கும் மூன்று நாட்கள் தான் முக்கியமானது. நாய் கடித்தவுடன் தடுப்பூசி செலுத்தியிருந்தால், ரேபிஸ் தாக்குவதற்கு முன், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அப்பாதிப்பை கட்டுப்படுத்தும். அந்நோய் வந்து விட்டால், கட்டுப்படுத்த எந்த மருந்தும் இல்லை; உயிரிழப்பையும் தடுக்க முடியாது. நாய் கடித்தால் தாமதிக்காமல் சிகிச்சை பெறுவதுடன், நான்கு தவணை தடுப்பூசியையும் முறையாக செலுத்த வேண்டும். - டாக்டர் குழந்தைசாமி பொது சுகாதாரத்துறை நிபுணர்
- நமது நிருபர் -