PUBLISHED ON : ஆக 26, 2011 12:00 AM

மனிஷ் திவாரிக்கு கடிவாளம் ப்ளீஸ்!
காங்கிரஸ் கட்சியில், திக்விஜய் சிங்கின் விமர்சனங்களுக்கு, ஒருவழியாக காங்கிரஸ் மேலிடம்
கடிவாளம் போட்டு விட்டது. இப்போது புதிதாக ஒரு விமர்சனப் பேர்வழி உருவெடுத்துள்ளார். கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி தான், அவர். ஊழலுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரேயையும், அவரது குழுவினரையும், கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருகிறார். 'மறைமுக மாவோயிஸ்ட்கள், சர்வாதிகாரிகள், கலகக்காரர்கள்' போன்ற வார்த்தைகள், சமீபத்தில், மனிஷ் திவாரியின் வாயில் இருந்து வந்தவை. இதேபோல் தான், முன்பு, மத்திய தணிக்கை துறையையும் விமர்சித்தார். 'டிவி' க்காரர்கள் மைக்கை நீட்டி விட்டால் போதும், என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல், எக்குத் தப்பாக, வார்த்தைகளில் அனல் கக்குகிறார். இவர் பேசுவதைப் பார்த்து, 'டிவி'க்காரர்களே முகம் சுளிக்கும் அளவுக்கு, தற்போது நிலைமை போய் விட்டது. இதனால், ஹசாரே ஆதரவாளர்களின் பிரதான எதிரிகளின் பட்டியலில், தற்போது மனிஷ் திவாரி தான் முதல் இடத்தை பிடித்துள்ளார். காங்கிரஸ் கட்சியினரோ, 'என்னென்ன வார்த்தைகளை பேச வேண்டும் என்பது குறித்து, தனியாக, 'டியூஷன்' ஏதாவது படிக்கிறாரோ'என, கிண்டலடிக்கத் துவங்கி விட்டனர். எது எப்படியோ, நிலைமை எல்லை மீறிப் போவதற்கு முன், மனிஷ் திவாரியின் வாய்க்கும் சீக்கிரம் ஒரு கடிவாளம் போட்டு
விடுங்கள், சோனியா ஜி...!