PUBLISHED ON : ஜூன் 02, 2024 12:00 AM

'என்னதான் செல்வாக்கு இருந்தாலும், கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறா விட்டால், சிரமம் தான்...' என, உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத் பற்றி கூறுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
நாட்டிலேயே அதிகமான லோக்சபா தொகுதிகள் உள்ள மாநிலம் என்ற பெருமை உத்தர பிரதேசத்துக்கு உண்டு. இங்கு, 80 தொகுதிகள் உள்ளன. இதில், 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி, பெரும்பாலும் மத்தியில் ஆட்சியை பிடித்து விடும்.
கடந்த 2014ல் நடந்த தேர்தலில், 71 தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது. மத்தியிலும் ஆட்சியை பிடித்தது. 2019ல் நடந்த தேர்தலில், 62 தொகுதிகளில் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது.
அதேபோல், இந்த முறையும், 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என, பா.ஜ., மேலிடம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
ராமர் கோவில் கட்டியது, உத்தர பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்கள் ஆகியவை, இந்த இலக்கை எட்ட உதவும் என பா.ஜ., தலைவர்கள் நம்புகின்றனர்.
உ.பி.,யில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவது பா.ஜ.,வின் லட்சியம் என்பது ஒரு பக்கம் இருக்க, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கை நிரூபிக்கும் சோதனைக்களம் என, மற்றொரு பக்கம் பேசப்படுகிறது.
'இந்த முறையும், 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றால், உ.பி.,யில் ஆதித்யநாத்தின் செல்வாக்கை அடுத்த சில ஆண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாது...' என்கின்றனர், உள்ளூர் பா.ஜ.,வினர்.