PUBLISHED ON : ஜூன் 03, 2024 12:00 AM

'எதிர்க்கட்சியினர் பதில் சொல்வதற்கு பதிலாக, இவர்கள் எதற்கு பதில் சொல்கின்றனர்...' என, கேரள மாநில ஆட்சியாளர்களின் நடவடிக்கை குறித்து ஆச்சரியப்படுகிறார், கர்நாடகா துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிவகுமார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, துணை முதல்வராக உள்ள சிவகுமார், சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார்...
அதில், 'எனக்கு எதிராகவும், முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும், கர்நாடகாவில் உள்ள சில அரசியல்வாதிகள், கேரளாவில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று, விலங்குகளை பலியிட்டு, எதிரிகளை அழிக்கும் யாகம் நடத்தி உள்ளனர்...' என, தெரிவித்துஇருந்தார்.
கர்நாடகாவில் உள்ள, பா.ஜ., மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சியினரை குறிவைத்து தான், அவர் இவ்வாறு பேசியிருந்தார். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து இது குறித்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கட்சி ஆட்சி நடக்கும் கேரளாவிலிருந்து, இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. கேரள சமூக நீதித்துறை அமைச்சர் பிந்து, தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
'கேரளா, கடவுளின் தேசம். இங்கு மாந்திரீக வேலை எதுவும் நடப்பது இல்லை...' என, அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதை கேட்ட சிவகுமார், 'நான் இவர்களை பற்றி எதுவும் கூறவில்லையே; எதற்கு பதற்றப்படுகின்றனர்...' என, ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.