PUBLISHED ON : ஜூலை 30, 2024 12:00 AM

ஜூலை 30, 1958
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், ராதாகிருஷ்ணன் - சந்திரா தம்பதிக்கு மகனாக, 1958ல் இதே நாளில் பிறந்தவர் பிரபாகர். இவர், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியில் எம்.ஏ., பொருளாதாரம் படித்தார். 1977ல், 'ஆனந்த விகடன்' இதழில் இவர் எழுதிய கதை பெரும் வரவேற்பை பெற்றதால், முழு நேர எழுத்தாளர் ஆனார்.
இவர், 25க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 300க்கும் மேற்பட்ட நாவல்கள், 85க்கும் மேற்பட்ட தொடர் கதைகளை எழுதி உள்ளார். அவற்றில், 200க்கும் மேற்பட்டவை தனி நுால்களாக வெளியாகி உள்ளன; சில, பல்கலைகளில் பாடங்களாகவும் உள்ளன.
இவர் எழுதிய துப்பறியும் கதைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 'உங்கள் ஜூனியர், உல்லாச ஊஞ்சல்' எனும் மாத இதழ்களை நடத்தினார். 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். மேலும், பாலுமகேந்திராவின் கதை நேரம் பகுதியில், இவரது ஏழு சிறுகதைகள் இடம்பெற்றன.
எழுத்தில் பல, 'த்ரில்லர்' கதைகளை சொன்ன, 'தில்'லான எழுத்தாளரின் 65வது பிறந்த தினம் இன்று!