Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சிறுமலையில் வனப்பகுதிகளை ஆக்கிரமித்து மரங்கள் அழிப்பு

சிறுமலையில் வனப்பகுதிகளை ஆக்கிரமித்து மரங்கள் அழிப்பு

சிறுமலையில் வனப்பகுதிகளை ஆக்கிரமித்து மரங்கள் அழிப்பு

சிறுமலையில் வனப்பகுதிகளை ஆக்கிரமித்து மரங்கள் அழிப்பு

ADDED : ஆக 28, 2011 01:03 AM


Google News

மதுரை:திண்டுக்கல் மாவட்டத்தில் துவங்கி மதுரை மாவட்டம் வரை பரவியுள்ள சிறுமலையில் வனப்பகுதிகளை ஆக்கிரமித்து, சமூக விரோதிகள் அரிய மரங்களை வெட்டியும், தீ வைத்தும் அழிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலையுள்ளது.

இதை தடுத்து, வனத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.



திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு அடுத்ததாக உள்ளது சிறுமலை சுற்றுலா தலம். இம்மலையில் வேங்கை, தோதகத்தி, ஆலமரம், அரசமரம், சந்தனமரம், ரோஸ்வுட், நாகவள்ளி, சிலவாகை உட்பட ஏராளமான மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. நார்த்தை, நெல்லி, எலுமிச்சை, கருவேப்பிலை மற்றும் மூலிகை செடிகள் மண்டி கிடக்கின்றன. பல ஆயிரம் ஏக்கர் பரப்பிலுள்ள இந்த மரங்களால், சிறுமலை பசுமையாக திகழ்கிறது. பட்டா நிலங்களில், வாழை, பாக்கு, காப்பி மற்றும் பண பயிர்கள் பயிரிடப்படுகின்றன. சிறுமலையில் இருந்து பலா, வாழை, இலைகட்டுகள் மற்றும் காய்கறிகள் தினமும் லாரிகளில் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.



மலையிலுள்ள அடர்ந்த காடுகள் திண்டுக்கல், மதுரை மாவட்ட வனச்சரகத்திற்கு உட்பட்டவை. சருகுமான், கடமான், முள்ளம்பன்றி, நரி, முயல், காட்டெருமை, செந்நாய், காட்டு பன்றி காடுகளில் அதிகளவில் உள்ளன. சில மரங்கள் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. நோய்களை குணப்படுத்தும் அரிய மூலிகைகள் உள்ளன.

சிறுமலையின் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் சிலர், வனப்பகுதியை சில மாதங்களாக ஆக்கிரமித்து வருகின்றனர். மரங்களை வெட்டி சுற்றி வேலி போட்டு நிலங்களை வளைத்துள்ளனர். வெட்ட முடியாத மரங்களுக்கு தீ வைத்து அழித்துள்ளனர். மதுரை மாவட்ட வனச்சரகத்திற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த சிலர் இதில் ஈடுபட்டுள்ளனர். நொண்டிப்பண்ணையில், இரு மாதங்களுக்கு முன் கண்ணாடிப்பாறை எதிரில் வனப்பகுதியை தீ வைத்து அழித்துள்ளனர்.



தற்போது அந்த இடங்களில் எலுமிச்சை, வாழை போன்றவைகளை பயிரிட்டுள்ளனர். ரோந்து செல்லும் வன ஊழியர்களை கவனித்து விடுவதால் அவர்களும் கண்டுகொள்வதில்லை. பட்டா வைத்துள்ளவர்கள் தட்டி கேட்கும் போது, அவர்களையும் இவர்கள் தாக்குகின்றனர். இதனால், அவர்களும் கண்டுகொள்வதில்லை. இந்நிலை தொடர்ந்தால் வனப்பகுதிகள் அழியும் நிலை ஏற்படும். இப்பகுதிகளை இயற்கை ஆர்வலர்கள் ஐ கீரின் இயக்குனர் பிரான்சிஸ் சேவியர், சம நீதி இயக்குனர் அழகுமணி, சட்ட ஆலோசகர்கள் ஜின்னா, ஆறுமுகம் பார்வையிட்டனர்.



வனப்பகுதியில் எலுமிச்சை பயிரிட்டுள்ள மணி, ''ஏற்கனவே இடம் வேறு ஒருவரிடம் இருந்தது. அவரிடம் கூலி வேலை செய்தேன். தற்போது இடத்தை பராமரிக்கிறேன். மரங்களுக்கு தீ வைத்ததற்காக வனத்துறையினர் 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். நிலங்களுக்கு யாரிடமும் பட்டா இல்லை. பல ஆண்டுகளாக தங்கி வாழை, எலுமிச்சை பயிரிடுகிறோம்,'' என்றார்.



சம நீதி நிறுவன இயக்குனர் அழகுமணி, ''சிறுமலை வனப்பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து விளைநிலங்களாக மாற்ற முயற்சிக்கின்றனர். மரங்களை வெட்டி தீ வைப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். வன விலங்குகள் நடமாட்டம் குறைகிறது. இதுகுறித்து விரைவில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.

மதுரை மாவட்ட வன அதிகாரி ராகேஷ் குமார் ஜெகனியா,''மதுரை வன எல்லைக்கு உட்பட்ட சிறுமலை பகுதியில் முட்புதர்கள், மரங்களை வெட்டி அப்புறப்படுத்த முயன்றதாக ஏற்கனவே மணி, செல்வம், சுப்ரமணி, முருகனிடமிருந்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விவசாயம் செய்ய இருந்ததும் தடுக்கப்பட்டது. வனப்பகுதியில் தற்போது ஆக்கிரமிப்புகள் இல்லை,'' என்றார்.



திண்டுக்கல் மாவட்ட வன அதிகாரி தங்கராஜ், ''திண்டுக்கல் வன எல்லை பகுதியில் வனங்களை ஆக்கிரமித்தது குறித்து ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதில் வனத்துறைக்கு சாதகமாக உத்தரவு வெளியானது. அந்த பகுதிகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வனங்களை ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us