ஜன்லோக்பால் விவகாரம்: நாளை காங். எம்.பி.க்கள் கூட்டம்
ஜன்லோக்பால் விவகாரம்: நாளை காங். எம்.பி.க்கள் கூட்டம்
ஜன்லோக்பால் விவகாரம்: நாளை காங். எம்.பி.க்கள் கூட்டம்
ADDED : ஆக 24, 2011 05:08 AM
புதுடில்லி: எட்டாவது நாளாக தொடரும் காந்தியவாதி அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதப்போராட்டம் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியினை கொடுத்து வருகிறது. இந்நிலையில் பாராளுமன்ற காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டம் நாளை (வியாழன்) நடைபெறலாம் என டில்லி காங்கிரஸ் கட்சியின் நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு தயாரித்துள்ள லோக்பால் மசோதா தற்போது பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. இருந்த போதிலும் பிரதமர் , நீதித்துறையில் உள்ளவர்களையும் லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவரும் வகையில் ஜன்லோக்பால் மசோதா தேவை என்பதை காந்தியவாதி அன்னா ஹசாரே தலைமையிலான சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியாதத், சஞ்சய்நிருபம் உள்ளிட்ட சில காங்கிரஸ் இளம் எம்.பி.க்கள் சிலர் ஜன்லோக்பாலை ஆதரிகின்றனர்.
கடந்த 16-ம் தேதியன்று உண்ணாவிரதம் இருக்க முயன்ற ஹசாரேயை, போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இதனை காங்கிரஸ் கட்சியின் டில்லி முதல்வர் ஷீலாதிட்ஷீத் கண்டித்தார். ஜன்லோக்பால் மசோதா கொண்டுவருவதில் தயக்கம் காட்டிவரும் மத்தியஅரசுக்கு தற்போது காங்கிரஸ் கட்சியினரே மறைமுகமாக அதிருப்தி காட்டுகின்றனர். இந்த சூழ்நிலையில் அன்னாவின் பட்டினி போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. எனவே சமரசத்திற்கு இறங்கி வருவதை தவிர வேறு வழியில்லை என உணர்ந்த மத்திய அரசு சமூக ஆர்வலர்களுடன் ஜன்லோக்பால் குறித்து விவாதிக்கவுள்ளது. இந்த பின்னணயில் நாளை காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற எம்.பி.க்கள் கூட்டம் நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஹசாரே விரும்பிய ஜன்லோக்பால் மசோதாவை உருவாக்க ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.