Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தண்டவாளத்தில் ஏ.ஐ., தொழில்நுட்பம் 5,260 யானைகள் பாதுகாப்பாக கடந்தன

தண்டவாளத்தில் ஏ.ஐ., தொழில்நுட்பம் 5,260 யானைகள் பாதுகாப்பாக கடந்தன

தண்டவாளத்தில் ஏ.ஐ., தொழில்நுட்பம் 5,260 யானைகள் பாதுகாப்பாக கடந்தன

தண்டவாளத்தில் ஏ.ஐ., தொழில்நுட்பம் 5,260 யானைகள் பாதுகாப்பாக கடந்தன

UPDATED : ஜூன் 29, 2025 02:24 AMADDED : ஜூன் 28, 2025 07:48 PM


Google News
Latest Tamil News
மதுரை:கோவை, மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 2024 பிப்., முதல் 2025 மே வரை, அப்பகுதி ரயில் தண்டவாளத்தை 5,260 யானைகள் பத்திரமாக கடக்க வனத்துறை உதவியுள்ளது.

கோவை, மதுக்கரை வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில், 694 கி.மீ., பரப்பளவில் 200 யானைகள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. 2008 முதல் 2024 வரை இந்த பகுதியில் உள்ள கோவை -- பாலக்காடு வழித்தடத்தில், எட்டிமடை வாழையார் செல்லும் 'ஏ, பி' என்ற இரு தண்டவாளங்களை கடந்து சென்ற 11 யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்தன.

இந்த வழித்தடங்களில் வாரத்திற்கு, 120 ரயில்கள் வந்து செல்கின்றன. யானைகள் இறப்பை தவிர்க்கும் வகையில் மதுக்கரை பகுதியில் ஏ.ஐ., கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு, 7.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.

இரு தண்டவாள வழித்தடங்களில், 7.05 கி.மீ., துாரம் வரை 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, கையால் சுழலும் வகையில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை, குறைந்த பட்சம் 150 மீட்டர் துாரத்திற்குள் தண்டவாளம் அருகே யானைகள் வருவதை அதன் உடல் வெப்பநிலை, நடமாட்டத்தால் கண்டறிந்து, கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கும்.

அங்கிருந்து, ரயில்வே, வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், ரயில்வே லோகோ பைலட்டுகளுக்கு மொபைல் போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தியாக தகவல் தெரிவிக்கப்படும்.

கண்காணிப்பு கோபுரத்தை சுற்றி, 24 மணி நேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறை ஊழியர்கள், தண்டவாளத்திற்கு சென்று ரயில் வரும் நேரத்தில் யானைகள் வந்தால், அவற்றை தற்காலிகமாக திசை திருப்புகின்றனர்.

ரயில் சென்ற பின், அவை தன் பாதை வழியே செல்கின்றன. மேலும் ஆங்காங்கே தடுப்பு காரிடார்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் வழியாக ரயில்வே தண்டவாளத்தின் சுரங்கப்பாதையில் யானைகள் செல்வதை மடைமாற்றுகின்றனர்.

சில நேரங்களில் யானைகள் அருகில் வந்துவிட்டால் ரயில் உடனடியாக நிறுத்தப்படுகிறது. 2024 பிப்., முதல் மே 2025 வரை, கட்டுப்பாட்டு அறைக்கு 1,260 அழைப்புகள் பெறப்பட்டு, தனியாகவோ, கூட்டமாகவோ சென்ற 5,260 யானைகள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. ஏ.ஐ., தொழில்நுட்பத்திற்கு பின், ஒரு யானை கூட ரயிலில் அடிபட்டு இறக்கவில்லை என்கின்றனர் வனத்துறையினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us