/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல்: வேளாண் துறை தகவல்திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல்: வேளாண் துறை தகவல்
திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல்: வேளாண் துறை தகவல்
திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல்: வேளாண் துறை தகவல்
திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல்: வேளாண் துறை தகவல்
ADDED : செப் 05, 2011 11:56 PM
தர்மபுரி: சாதாரண நெல்நடவு முறையைக் விட திருந்திய நெல் சாகுபடி முறையை விவசாயிகள் பின்பற்றினால், 25 சதம் கூடுதல் மகசூல் பெறலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து, தர்மபுரி வேளாண் இணை இயக்குனர் ராஜன் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், நல்ல மழை பெய்துள்ளதால், தோட்டக்கால் மற்றும் நஞ்செய் பாசன பகுதிகளில் சம்பா நெல் நாற்று விடும் பணி துரிதமாக நடக்கிறது. இப்பொழுது, விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறைகளை கையாண்டால், சாதாரண நடவு முறையில் எடுக்கும் மகசூலை விட, 25 சதவிகிதம் கூடுதல் மகசூல் கிடைக்கும். சாதாரணமாக, ஒரு ஏக்கருக்கு நெல் நடவு செய்ய, 20 கிலோ விதை தேவை. திருந்திய நெல் சாகுபடியில் ஏக்கருக்கு, 3 கிலோ நெல் விதை போதுமானது. விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு, 10 கிராம் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் மற்றும் நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் ஒரு பாக்கெட் மற்றும் பாஸ்போபேக்டீரியா ஒரு பாக்கெட் என்ற அளவில் கலந்து, விதை நேர்த்தி செய்து முளைப்பு கட்டி பின் விதைப்பு செய்ய வேண்டும். ஏக்கருக்கு, ஒரு சென்ட் நாற்றங்கால் போதும். ஐந்து சென்டிமீட்டர் பரப்பு கொண்ட எட்டு மேடை பாத்திகள் தயாரித்து, அதில் விதைகளை தூவி தண்ணீர் தெளிக்க வேண்டும். பின், வைக்கோலை நீக்கி விட்டு சாதாரண முறையில் பாசனம் செய்ய வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட நாற்றங்காலில் நாற்றுகள், 14 நாட்களில் தயாராகிவிடும். நாற்று தேவையான வளர்ச்சி பெறவில்லையெனில், நாற்று விட்ட 10ம் நாள் ஒரு லிட்டர் தண்ணீரில், 10 கிராம் யூரியா வீதம் கலந்த கரைசலை தெளிக்க வேண்டும். நன்கு சமப்படுத்தப்பட்ட வயலில், 14 நாட்கள் வயதுடைய இளம் நாற்றுகளை அதிக இடைவெளியில் சதுர முறையில், 22.5 சென்டிமீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு நடவு செய்யும்போது, ஒரு சதுர மீட்டரில், 20 குத்துக்கள் இருக்குமாறு நடவு செய்ய முடியும். இதற்கு, நடவு செய்ய நடவு அடையாளமிடும் கருவி அல்லது அடையாளமிடப்பட்ட கயிறு ஆகியவற்றை பயன்படுத்தலாம். திருந்திய நெல் நடவு செய்த ஐந்தாம் நாள் முதல், 10 நாட்கள் இடைவெளியில் கோனா களைக்கருவி பயன்படுத்த வேண்டும். இலைவண்ண அட்டையை பயன்படுத்தி தழைச்சத்து நிர்வாகம் செய்ய வேண்டும். நெல்பயிருக்கு பரிந்துரைக்கப்படும் மற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் ஆகியவற்றை முறையாக கையாண்டால், நிச்சயமாக சாதாரண நெல் நடவு முறையில் எடுக்கப்படும் மகசூலை விட, 25 சதம் கூடுதல் மகசூல், அதாவது ஒரு ஏக்கருக்கு, 750 கிலோ கூடுதலாக பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.