தேர்தல் கூட்டணியை மறுக்கிறார் சீமான்: தனித்துவத்தை இழந்து விடுவோம் என அச்சம்
தேர்தல் கூட்டணியை மறுக்கிறார் சீமான்: தனித்துவத்தை இழந்து விடுவோம் என அச்சம்
தேர்தல் கூட்டணியை மறுக்கிறார் சீமான்: தனித்துவத்தை இழந்து விடுவோம் என அச்சம்
UPDATED : ஜூலை 14, 2024 04:20 AM
ADDED : ஜூலை 14, 2024 04:19 AM

சென்னை: “ஒருவர் இறந்து விட்டதால் புனிதராகி விட்டார் என கூற முடியாது. கூட்டணி சேர்ந்தால் தனித்துவத்தை இழந்து விடுவோம். என் கருத்தை ஏற்று வருவோருடன் கூட்டணி அமைக்கலாம்,” என, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
இரண்டு நாட்களுக்கு முன், சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். நான் பாடிய பாட்டைதான், அவர் பாடினார். அந்த பாட்டுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த பாட்டை எழுதி, இசை அமைத்து வெளியிட்டது, அ.தி.மு.க., தான். ஜெயலலிதா இருக்கும்போது நுாற்றுக்கணக்கான மேடையில், இந்த பாடல் பாடப்பட்டது.
அப்போது இவர்களுக்கு வருத்தம், கோபம் ஏற்படவில்லை. நாங்கள் பாடும்போது வருத்தம் ஏற்படுகிறது. ஒவ்வொரு தலைவர்கள் குறித்தும், கருணாநிதி பேசியது எல்லாம் அழியாமல் உள்ளது.
இழிவாக பேசுவதற்கென பேச்சாளர்களை வைத்திருந்தனர். நாகரிக அரசியல் குறித்து கற்றுக் கொடுக்க, துளியும் தகுதி இல்லாத கட்சி தி.மு.க., தான். அவர்கள் எங்களை கேவலமாகப் பேசும்போது இனிக்கிறது. நாங்கள் பேசினால் நெஞ்சு புண்ணாகிறது. நான் கருணாநிதி குறித்து பேசினேன்.
கருணாநிதி எழுதியதற்கு ஸ்டாலின் வருந்துவதாகக் கூறினால், நாங்களும் வருந்துகிறோம்.
ஜெயலலிதா இருக்கும்போதே கூட்டணிக்கு அழைத்தார். கூட்டணி என்பது என் கோட்பாடு இல்லை. திராவிட கட்சிகளோடு ஒரு நாளும் கூட்டணியாக இருக்க முடியாது.
ஊழல், லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்றால், அந்த கட்சிகளோடு எப்படி கூட்டணி வைக்க முடியும்? மாற்று என வந்த கட்சிகள் கூட்டணி சேர்ந்ததால், ஓட்டு சதவீதம் சரிந்தது.
கூட்டணி சேர்ந்தால் தனித்துவத்தை இழந்து விடுவோம். என் கருத்தை ஏற்றுக்கொண்டு, ஒத்தக் கருத்துடையோர் எங்களுடன் வந்தால், அவர்களுடன் கூட்டணி அமைக்கலாம். விஜய் களத்திற்கு வரும்போது தான் ஒருமித்த கருத்து உள்ளதா என்பதைக் கூற முடியும்.
சனாதன எதிர்ப்பை தி.மு.க.,விலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். ஒருவர் இறந்து விட்டதால் புனிதராகி விட்டதாக கூற முடியாது. சீமச்சாராய கடையை ஒழித்துவிட்டு, கள்ளுக்கடையை திறப்பது நல்லதுதான்.
இவ்வாறு கூறினார்.