Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஐ.டி., பூங்காக்களில் தொழில் துவங்காதநிறுவனங்களின் லைசென்ஸ் ரத்தாகும் மந்திரி உதயக்குமார்

ஐ.டி., பூங்காக்களில் தொழில் துவங்காதநிறுவனங்களின் லைசென்ஸ் ரத்தாகும் மந்திரி உதயக்குமார்

ஐ.டி., பூங்காக்களில் தொழில் துவங்காதநிறுவனங்களின் லைசென்ஸ் ரத்தாகும் மந்திரி உதயக்குமார்

ஐ.டி., பூங்காக்களில் தொழில் துவங்காதநிறுவனங்களின் லைசென்ஸ் ரத்தாகும் மந்திரி உதயக்குமார்

UPDATED : ஜூலை 31, 2011 11:38 PMADDED : ஜூலை 31, 2011 11:06 PM


Google News
Latest Tamil News
மதுரை:''தமிழக ஐ.டி., பூங்காக்களில் தொழில் துவங்க ஆர்வமில்லாத நிறுவனங்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்,'' என, தகவல் தொழில் நுட்ப அமைச்சர் உதயக்குமார் தெரிவித்தார்.மதுரை இலந்தைக்குளம் ஐ.டி., பூங்காவை ஆய்வு செய்த பின், அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் எட்டு தகவல் தொழில் நுட்ப பூங்காக்களை விளம்பரம் தேட, தி.மு.க., அரசு அவசர கோலத்தில் திறந்தது. ஒன்று கூட முழுமையாக செயல்படவில்லை. இடம் ஒதுக்கப்பட்ட நிறுவனங்களும் செயல்படவில்லை. மதுரை இலந்தைக்குளம், வடபழஞ்சியில் ஐ.டி., பூங்காக்கள் திறப்பதாக, முந்தைய தி.மு.க., அரசு அறிவித்தது. இலந்தைக்குளத்தில் மட்டும், 29 ஏக்கரில் பூங்காவை திறந்தது. தி.மு.க.,வினரின் நிலங்களின் மதிப்பு உயரும் வகையில், இப்பூங்கா திறக்கப்பட்டது. சிறுவர் பூங்காவுக்கான தகுதிகூட இங்கு இல்லை. உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை.மதுரையில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி குடும்பத்தினருக்கு சொந்தமான ஐ.டி., காம்ப்ளக்ஸ் இருப்பதால், தனியார் நிறுவனங்கள் இங்கு தொழில் துவங்க ஆர்வம் காட்டவில்லை.

உலகளவில் சாப்ட்வேர் துறையில் போட்டிகளை சமாளிக்க, ஐ.டி., நிறுவனங்களுக்கு முந்தைய தி.மு.க., அரசு ஒத்துழைப்பு தரவில்லை. மக்களை ஏமாற்றவும், இளைஞர்களை முட்டாளாக்கவும் இப்பூங்காக்களை அவசரக் கோலத்தில் திறந்தது. தி.மு.க., ஆட்சியில் ஐ.டி., துறை வேதனையளிப்பதாக இருந்தது. அத்துறை சாதனை படைக்க, முதல்வர் ஜெயலலிதா பல ஆலோசனைகளை கூறியுள்ளார். ஐ.டி., பூங்காக்களில் பன்னாட்டு, தனியார் நிறுவனங்கள் தொழில் துவங்க போதிய ஒத்துழைப்பு கொடுக்க, தற்போதைய அரசு தயாராக உள்ளது.மாணவர்கள் கல்வியறிவு பெற்றதுடன், அவர்களை இத்துறையில் திறன் மிக்கவர்களாக மாற்றவும், முதல்வர் ஜெயலலிதா சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இந்தியாவில், தமிழகம் ஐ.டி., துறையில் முதன்மை மாநிலமாக்கப்படும்.

மதுரை ஐ.டி., பூங்காவில் இரு நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அவர்கள் இதுவரை தொழில் துவங்கவில்லை. இதுபோல ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்டு தொழில் துவங்காத ஐ.டி., நிறுவனங்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொழில் துவங்க ஆர்வமில்லாத நிறுவனங்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். ஆர்வம் காட்டும் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கப்படும்.ஆட்சியாளர்கள் மீதான பயத்தின் காரணமாக ஐ.டி., நிறுவனங்கள் தொழில் துவங்க அச்சப்பட்டன. தற்போது அந்த நிலை மாறி, அந்நிறுவனங்கள் ஐ.டி., பூங்காக்களில் தொழில் துவங்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.வடபழஞ்சி பூங்காவை ஆய்வு செய்த பின், மதுரை - போடி ரயில்வே லைன் குறுக்கிடும் இடத்தில் மேம்பாலம் கட்ட, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தி.மு.க., அரசு பாலம் கட்ட மத்திய அரசை வலியுறுத்தவில்லை.

மேலும், ஐ.டி., நிறுவனங்கள், இங்கு தொழில் துவங்கவும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. முதல்வர் ஜெயலலிதா, இப்பூங்காக்களை ஆய்வு செய்து, ஐ.டி., நிறுவனங்கள் தொழில் துவங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி, உண்மையாக ஆய்வு செய்ய வந்தேன்,'' என்றார்.ஐ.டி., துறை செயலர் சந்தோஷ்பாபு, நிர்வாக இயக்குனர் அதுல் ஆனந்த், எல்காட் பொது மேலாளர் ராஜேந்திரன், கலெக்டர் சகாயம், எம்.எல்.ஏ.க்கள் போஸ், முத்துராமலிங்கம், மற்றும் கட்சியினர் உடன் சென்றனர்.திருச்சியில் உள்ள நவல்பட்டில், 147 ஏக்கரில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவையும் (ஐ.டி., பார்க்), தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் உதயக்குமார், நேற்று நேரில் ஆய்வு செய்தார்.நிருபர்களிடம் அவர் பேசுகையில், 'தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில், 8 இடங்களில் ஐ.டி., பார்க் உள்ளது. எதிலும் முழுமையான உள்கட்டமைப்பு வசதி செய்யவில்லை. கடந்த ஆட்சியில் ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் வந்ததாகக் கூறினர்; வேலைவாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்தனர். அதுபோல எதுவும் நடக்கவில்லை; அறிவிப்பு மட்டுமே வெளியிட்டுள்ளனர்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us