PUBLISHED ON : ஜூலை 22, 2011 12:00 AM

'சமையலறையில் கவனம் தேவை!' சமையலறையில் பெண்கள் எச்சரிக்கையாக இருப்பது பற்றி கூறும், சென்னை எழும்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேஷ் கண்ணன்: கிச்சனில், ஒரு சில அஜாக்கிரதையான நடவடிக்கைகளால் தான், பெரும் விபத்து ஏற்படுகிறது.
குறிப்பாக, கரப்பான் பூச்சிக்கான ஸ்பிரே, சென்ட், பாடி ஸ்பிரே, ரூம் ஸ்பிரே, நக பாலீஷ் என்று ஆல்கஹால் கலந்த பொருட்களை, சமையலறைக்குள் பயன்படுத்தக் கூடாது. அனைத்து ஸ்பிரேக்களுமே, 30 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலேயே வெடிக்க கூடியவை தான். ஸ்பிரேக்களை சூரிய வெப்பத்தில் வைப்பதும் ஆபத்தானது. எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் என்று தெரிந்தும், இவற்றை சமையலறைக்குள் அனுமதிப்பது, எமனை வரவழைப்பதற்குச் சமம். சமையல் செய்யும்போது, பருத்தியால் ஆன உடையை அணிய வேண்டும். சமையல் மேடை மேல், ஒரு செல்ப் வைத்து, அதில் பொருட்களை வைத்து, எடுப்பது கூடாது. கையை எட்டி மேலே இருக்கும் பொருட்களை எடுக்கும் போது, அடுப்பு எரிந்து கொண்டிருந்தால், உடையில் தீ பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சிலர், காஸ் சிலிண்டரை, 100 சதவீதம் பயன்படுத்த எண்ணி, படுக்கை வாட்டில் வைத்தெல்லாம் பயன்படுத்துவர்; இது, ஆபத்தானது. லீக்கேஜ் இருந்தால், வெடித்து விடும். அதேபோல், பவர் கட் ஆனதும், மிக்சி, கிரைண்டர் சுவிட்சுகளை உடனே அணைத்து விட வேண்டும். இல்லையெனில், நாம் வெளியில் சென்றிருக்கும் சமயத்தில், கரன்ட் வந்தால், மிக்சி, கிரைண்டர் தானாக, 'ஆன்' ஆகி, ஒரு கட்டத்தில் மோட்டாரின் வெப்பம் அதிகமாகி வெடிக்கும் ஆபத்தும் உள்ளது.