சமுதாய வானொலி, கையேடு, காய்கறி விற்பனை மையங்கள்
சமுதாய வானொலி, கையேடு, காய்கறி விற்பனை மையங்கள்
சமுதாய வானொலி, கையேடு, காய்கறி விற்பனை மையங்கள்
ADDED : ஆக 18, 2011 12:09 AM
சென்னை : சட்டசபையில் வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான
விவாதங்களுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துப் பேசும் போது,
''விவசாயிகள் பல்வேறு வல்லுனர்களின் ஆலோசனைகளை தெரிந்து கொள்வதற்காக,
வேளாண் துறை மூலம் தனியாக சமுதாய வானொலி உருவாக்கப்படும்.
பயிர் காப்பீடு
திட்டத்தில், 8 லட்சம் விவசாயிகள் இருந்தனர். தற்போது இத்திட்டத்தில், 16
லட்சம் விவசாயிகளாக உயர்த்தப்பட்டுள்ளனர்'' என்றார். தொடர்ந்து,
சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்: * வேளாண்
விரிவாக்கப் பணிகளுக்கு, 213 புதிய வாகனங்கள். * மத்திய அரசின் அட்மா
திட்டத்தின் கீழ், அயல்பணி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மாநில, மாவட்ட
மற்றும் வட்டார அளவில் 1,300 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம். * 15
கோடி ரூபாய் செலவில், 10 உழவர் மையங்கள். * மாநிலத்திலேயே அதிக உற்பத்தித்
திறன் பெறும் விவசாயிக்கு, 5 லட்ச ரூபாய் அடங்கிய சிறப்பு விருது. இது,
குடியரசு தினத்தன்று வழங்கப்படும். * அரசு விதைப் பண்ணைகள் மூலம்
விவசாயிகளுக்குப் பயிற்சி. * விவசாயிகளுக்கு, கனரக இயந்திரங்கள்
வாடகைக்குக் கிடைக்கும். இதற்கென, 28 கோடியே 59 லட்ச ரூபாய் மதிப்பில்
வேளாண்மைப் பொறியியல் துறை மூலமும், 40 கோடி ரூபாய் மதிப்பில் தொடக்க
வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலமும், இயந்திரங்கள் வாங்கப்படும். *
ஆண்டுதோறும், கிராமங்களில் வாழும் 600 இளைஞர்களுக்கு, வேளாண் இயந்திரங்கள்
மற்றும் கருவிகள் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த ஆறு மாத கால
பயிற்சி. * வேளாண் துறையின் 59 ஆய்வகங்களில், அகண்ட அலைவரிசையுடன் கூடிய
கம்ப்யூட்டர் வசதி. * 10 மாவட்டங்களில் விதை சுத்திகரிப்பு நிலையங்கள்
நவீனமயம். * மண்வளம், உரப் பரிந்துரை, இடுபொருள் வினியோகம், நுண்ணூட்டச்
சத்துக்கள் போன்ற விவரங்களை உள்ளடக்கிய கையேடு, 21 லட்சம் விவசாயிகளுக்கு
கொடுக்க முடிவு. * சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய பெருநகரங்களில்
காய்கறி விற்பனை மையங்கள் துவக்கப்படும். இவற்றில் காய்கறிகள், நியாய
விலையில் கிடைக்கும். * விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சேமித்து,
பாதுகாத்து விற்பனை செய்ய ஒழுங்குமுறை விற்பனைக் கூட சேமிப்புக் கிடங்குகள்
உதவுகின்றன. 50 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நவீன கிடங்குகள். இவ்வாறு
அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளது.


