Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ அதிக வட்டி கடனை அடைக்க குறைந்த வட்டியில் ரூ.5000 கோடி: மின் பகிர்மான கழகம்

அதிக வட்டி கடனை அடைக்க குறைந்த வட்டியில் ரூ.5000 கோடி: மின் பகிர்மான கழகம்

அதிக வட்டி கடனை அடைக்க குறைந்த வட்டியில் ரூ.5000 கோடி: மின் பகிர்மான கழகம்

அதிக வட்டி கடனை அடைக்க குறைந்த வட்டியில் ரூ.5000 கோடி: மின் பகிர்மான கழகம்

ADDED : ஜூன் 21, 2025 03:47 AM


Google News
Latest Tamil News
சென்னை: அதிக வட்டி செலுத்தும் கடன்களை அடைக்க, குறைந்த வட்டியில் 5000 கோடி ரூபாய் கடன் வாங்க, மின் பகிர்மான கழகம் முடிவு செய்துள்ளது.

மின் பகிர்மான கழகம், மின் உற்பத்தி கழகம், மின் தொடரமைப்பு கழகம், பசுமை எரிசக்தி கழகம் என்ற நிறுவனங்களாக, மின் வாரியம் செயல்படுகிறது. இவற்றின் ஒட்டுமொத்த கடன் 2 லட்சம் கோடி ரூபாய். இதில், மாநிலம் முழுதும் மின் வினியோக பணிகளை மேற்கொள்ளும் முக்கிய நிறுவனமான மின் பகிர்மான கழகத்தின் கடன் மட்டும், 1 லட்சம் கோடி ரூபாய்.

இந்தக்கடன், மத்திய அரசின், 'பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன், ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன்' மற்றும் தமிழக பவர் பைனான்ஸ் நிறுவனம், பல்வேறு வங்கிகள் போன்றவற்றிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடனுக்கும் தனித்தனி வட்டி உள்ளது. அதிகபட்ச வட்டி, 11.25 சதவீதம். 2023 - 24ல் கடன்களுக்கான வட்டிக்கு மட்டும், 16,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

தற்போது, நிதி நெருக்கடியை சரிசெய்யும் நடவடிக்கையில் மின் வாரியம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, அதிக வட்டி செலுத்தும் கடன்களை அடைக்க, குறைந்த வட்டியில், 5,000 கோடி ரூபாய் கடன் வாங்க மின் பகிர்மான கழகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:


நடைமுறை மூலதன செலவுகளை சமாளிக்கவும், அதிக வட்டி செலுத்தும் கடனை அடைக்கவும், வெளிநாடுகளில் இருந்து, 5,000 கோடி ரூபாய் கடன் வாங்க, மாநில மின் பகிர்மான கழகங்களுக்கு, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. கூடுதல் கடன் தேவைப்படும்பட்சத்தில் உரிய அனுமதி பெறப்பட்டு கடன் வாங்கலாம்.

மின் பகிர்மான கழகத்தின் செலவுகளில் வட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, குறைந்த வட்டியில் கடன் வாங்கி, அதிக வட்டி செலுத்தும் கடன்களை அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, உள்நாட்டில் இருந்து யாரிடம் கடன் வாங்குவது அல்லது வெளிநாட்டில் யாரிடம் வாங்குவது; எந்த முறையில் வாங்குவது உள்ளிட்டவை தொடர்பாக, சர்வதேச நிதி ஆலோசனை நிறுவனத்திடம் கருத்து பெறப்பட உள்ளது.

இந்நிறுவனம், கடன் பெறுவதற்கான ஆலோசனை வழங்குவதுடன், கடன் பெற்று தரவும் உதவும். தற்போது, அந்த நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது. அதிக வட்டி கடனை ஒரே சமயத்தில் அடைத்து விட்டால், வட்டி செலவு மிச்சமாகும். அந்த நிதியில், மற்ற கடன்களை அடைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us