Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பில் இயற்கை முறை ஆவியாக்கல்

சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பில் இயற்கை முறை ஆவியாக்கல்

சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பில் இயற்கை முறை ஆவியாக்கல்

சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பில் இயற்கை முறை ஆவியாக்கல்

ADDED : ஜூலை 26, 2011 10:33 PM


Google News

திருப்பூர் : 'நிப்ட்-டீ' கல்லூரியின் பசுமை இயக்கம் உருவாக்கியுள்ள இயற்கை முறையில் ஆவியாக்கல் தொழில்நுட்பம் குறித்த வங்கியாளர்கள் சந்திப்பு கூட்டம், திருப்பூரில் நேற்று நடந்தது.

அத்தொழில்நுட்பத்தை முழுவதுமாக பார்வையிட்ட வங்கியாளர்கள், 'குறைந்த செலவில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பனியன் தொழிலை பாதுகாக்கலாம்,' என, பாராட்டு தெரிவித்தனர். 'நிப்ட்-டீ' கல்லூரியின் ஆராய்ச்சி பிரிவான பசுமை ஜவுளி இயக்கம் சார்பில், ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய, இயற்கை முறையில் ஆவியாக்கும் (நேச்சுரல் எவாப் ரேட்டர்) தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது. இதன் மூலமாக, ஆர்.ஓ., சுத்திகரிப்புக்கு பின், குறைந்த செலவில் சாயக்கழிவு நீரை ஆவியாக்கலாம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியுடன், பெருந்துறை 'சிப்காட்' பகுதியில் உள்ள சாய ஆலை ஒன்றில், 'நேச்சுரல் எவாப்ரேட்டர்' தொழில்நுட்பம் செயல்படுத்தப் பட்டது. இந்திய தொழில்நுட்ப கழக (ஐ.ஐ.டி.,) பேராசிரியர்கள் ஆய்வு செய்து, இயற்கை முறை ஆவியாக்கல் தொழில் நுட்பம் மூலம் சாயக்கழிவு நீரை 'ஜீரோ டிஸ்சார்ஜ்' முறையில் சுத்திகரிக்கலாம் என அங்கீகாரம் அளித்துள்ளனர். இதேபோல், திருப்பூர் தொழில் துறையினரும், சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குழுவும் இத்திட்டத்தை ஏற்றுள்ளனர்.இதையடுத்து வங்கியாளர்களுடனான சந்திப்பு கூட்டம், நிப்ட்-டீ கல்லூரியில் நேற்று நடத்தப்பட்டது. கல்லூரி தலைவர் ராஜா சண்முகம் பேசியதாவது: கடந்த 2003ம் ஆண்டு இதே தொழில்நுட்பத்துக்கு முயற்சித்தபோது, சரியான வழிகாட்டுதல் இல்லாமல் நின்றுபோனது. இயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை ஆவியாக்குவது சாத்தியமா? அதுவும் தினமும் இரண்டு கோடி லிட்டர் கழிவுநீரை வெளியேற்றும் திருப்பூருக்கு ஏற்புடையதாக இருக்குமா என்றெல்லாம் வதந்தி பரப்பப்பட்டது. அதை முறியடிக்கும் விதமாக, ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய, இயற்கை முறையில் ஆவியாக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது. முதன் முறையாக, பெருந்துறை 'சிப்காட்' பகுதியில் சோதனை முறையில் அமைக்கப்பட்டது. கடந்த நான்கு மாதங்களாக, சாயக்கழிவை சுத்திகரிப்பு செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வெப்பக்காற்று வீசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால், சீதோஷ்ண நிலையை பயன்படுத்தி, எளிதாக கழிவுநீரை ஆவியாக்கலாம். கடந்த ஜன., 28 முதல் திருப்பூரில் உள்ள சாய சலவை ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், பின்னலாடை தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழில் துறையினர் மட்டுமின்றி, வங்கிகளுக்கும், வெளிநாட்டு பையர்களுக்கும் நம்பிக்கை இழப்பு ஏற்பட்டு வருகிறது. சாயப்பிரச்னை என்பது தீராத பிரச்னையாக இருந்தாலும், தற்போது இயற்கை முறை ஆவியாக்கலால், நிரந்தர தீர்வு காண முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, வங்கியாளர்களுக்கு நிலையை விளக்கி, பரிவர்த்தனை தொடர்பான சலுகைகளை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதலில், தொழில் துறையினர் மீதான நம்பிக்கையை, வங்கிகள் மத்தியில் அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.விமான வசதி, கப்பல், போதுமான கட்டமைப்பு வசதிகள், தேவைகள் இல்லாமல் திருப்பூர் பின்தங்கி உள்ளது. இருப்பினும், கடந்த 25 ஆண்டுகளில் பின்னலாடை தொழில் அசுரவேகத்தில் வளர்ந்தது. சாயத்தொழில் பிரச்னையை தீர்த்தால், ஒட்டுமொத்த பிரச்னையை தீர்க்கலாம் என்ற நோக்கத்தில், இத்தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.காற்று மாசுபடாது; நிலமும் மாசுபடாது; சுவாச கோளாறும் வராது என்று தொழில்நுட்ப நிபுணர்கள் தெளிவாக கூறியுள்ளனர். இயற்கை முறை ஆவியாக்கலை, முதன் முறையாக ஜவுளித்தொழிலுக்காக பயன்படுத்தி உள்ளதாக நிபுணர்கள் பாராட்டியுள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த, இந்திய தொழில்நுட்ப கழகமும், இத்தொழில்நுட்பத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. வங்கியாளர்கள் இயன்ற வரையிலான உதவிகளை செய்ய வேண்டும், என்றார். அதைத்தொடர்ந்து, பசுமை ஜவுளி இயக்க ஒருங்கிணைப்பாளர் தனஞ்செயன், சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு பிரச்னை குறித்தும், இயற்கை முறையில் ஆவியாக்கும் முயற்சிகள் குறித்தும் விளக்கினார். அப்போது, கட்டமைப்பு செய்தது தொடர்பாகவும், வெற்றிகரமாக செயல்படுத்தி வருவது குறித்தும் விளக்கினார். மேலும், இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்வதால், வெளிநாட்டு பையர்களிடம் நன்மதிப்பு பெறலாம் என்றும், மத்திய அரசு பசுமை பாதுகாப்பு மானியம் வழங்குவதோடு, சர்வதேச அளவில் 'கார்பன் கிரெடிட்' பெறுவது குறித்தும் படக்காட்சிகளுடன் விளக்கினார்.'ப்ளூகம்' மற்றும் 'யூகலிப்டஸ்' மரங்கள், முட்செடிகள் என இயற்கைக்கு எதிர்வினையை உருவாக்கும் மரங்களை அழித்து, இயற்கை முறை ஆவியாக்கல் திட்டத்துக்கு பயன்படுத்துவது குறித்து, பசுமை ஜவுளி இயக்க துணை தலைவர் சீனிவாசன் விளக்கினார்.அவர் மேலும் கூறுகையில், ''இயற்கையை சீரழிப்பதோடு, நிலத்தடி நீரை உறிஞ்சி வறட்சியை தோற்றுவிக்கும் மரவகைகளை கொண்டே, இயற்கை வழியில் சுத்திகரிப்பு செய்வதன் மூலமாக, இயற்கைக்கு எதிரான சிலவற்றை அப்புறப்படுத்துகிறோம். அதற்காக, அரசு தரப்பில் அமோக ஆதரவு கிடைக்கிறது,'' என்றார்.தொடர்ந்து, வங்கியாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். இயற்கை முறையில் ஆவியாக்கும் தொழில்நுட்பம் நடைமுறை சாத்தியமாகி உள்ளது குறித்து வங்கியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், குறைந்த செலவில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து தொழிலை பாதுகாக்கலாம் எனவும் பாராட்டு தெரிவித்தனர். 'இரவு நேரத்தில் ஆவியாக்கலாம்'வங்கியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, பசுமை ஜவுளி இயக்க துணை தலைவர் சீனிவாசன் அளித்த பதில்:எத்தனை லிட்டர் கழிவுநீரை ஆவியாக்க முடியும்?உதாரணமாக, பெருந்துறை 'சிப்காட்' பகுதியில் உள்ள ஆலையில், 80 ஆயிரம் லிட்டர் ஆவியாக்க அனுப்பப்படுகிறது; அதில், ஒரு நாளில் 72 ஆயிரம் லிட்டர் வரை ஆவியாகிறது.இரவு நேரங்களில் எவ்வாறு ஆவியாகும்?பகலில் இருப்பது போன்று, வெப்பம் கிடைக்காவிட்டாலும், காற்றோட்டம் இருப்பதால், பகலில் ஆவியாவதில், 50 சதவீதம் அளவுக்கு இரவில் ஆவியாகிறது.மழைகாலங்களில் என்ன செய்வது? தமிழகத்தில், ஆண்டுக்கு 20 நாட்கள் கூட மழை பெய்வதில்லை; அதுவும் தொடர்ந்து பெய்வது கிடையாது. தற்போது, சனி, ஞாயிறு நாட்களில் சுத்திகரிப்பை நிறுத்தி விடுகிறோம். அதனுடன் ஒப்பிடும்போது, மழை காலங்களில் ஏற்படும் பாதிப்பை எளிதில் சமாளிக்கலாம். சிரபூஞ்சி போன்ற அதிக மழைபெய்யும் இடங்களில் வேண்டுமானால், பிரச்னை ஏற்படும். தமிழகத்தில் எளிதாக ஆவியாக்க முடியும். பராமரிப்பு செலவு எவ்வளவு ஏற்படும்? கட்டமைப்பு செலவு மட்டும் செய்தால் போதும்; இயற்கை முறையில் ஆவியாவதால், பராமரிப்பு செலவு அதிகம் ஏற்படாது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us