Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ரோடு, போக்குவரத்து வசதிகள் இல்லை: கோவில்பட்டி கிராமமக்கள் பாதிப்பு

ரோடு, போக்குவரத்து வசதிகள் இல்லை: கோவில்பட்டி கிராமமக்கள் பாதிப்பு

ரோடு, போக்குவரத்து வசதிகள் இல்லை: கோவில்பட்டி கிராமமக்கள் பாதிப்பு

ரோடு, போக்குவரத்து வசதிகள் இல்லை: கோவில்பட்டி கிராமமக்கள் பாதிப்பு

ADDED : ஜூலை 29, 2011 11:12 PM


Google News

ஆண்டிபட்டி அருகே உள்ள கோவில்பட்டி ஊராட்சியில் கோவில்பட்டி, முத்தனம்பட்டி, கரட்டுப்பட்டி, க.விலக்கு, மாலைப்பட்டி, கீழமுத்தனம்பட்டி, குரியம்மாள்புரம், சொக்கனூர் ஆகிய கிராமங்கள் உள்ளன.

ஊராட்சியின் தலைக்கிராமமாக கோவில்பட்டி இருந்தாலும் மக்களின் அடிப்படை தேவைகள் பெறுவதில் கடைசி கிராமமாகி விட்டது.



* கோவில்பட்டியில் இருந்து தேனி, ஆண்டிபட்டி பகுதிகளுக்கு செல்ல பஸ் வசதி இல்லை.



* தேனியில் இருந்து கரட்டுப்பட்டி, கோவில்பட்டி, ரங்கசமுத்திரம் வழியாக ஆண்டிபட்டி சென்ற ஒரே டவுன்பஸ்சும் நிறுத்தப்பட்டு விட்டது. ரங்கசமுத்திரத்தில் உள்ள குறுகிய ரோட்டில் திரும்ப முடியாததை காரணம் கூறி நிறுத்தி விட்டனர்.



* சில காலம் இயங்கி வந்த மினி பஸ்சும் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது இப்பகுதி மக்கள் ஆண்டிபட்டி வருவதற்கு ஆட்டோக்களை மட்டுமே நம்பி உள்ளனர்.



*மழை காலங்களில் குடியிருப்புகளில் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தும் மழைநீரை கடத்த முறையான வடிகால் இல்லை. பெண்களுக்கான சுகாதார வளாகங்கள் இல்லாததால் திறந்த வெளிகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதனால் மழைகாலங்களில் நோய் தொற்று ஏற்படுகிறது.



இப்பகுதி மக்கள் கூறியதாவது:ஆர்.நாகம்மாள்: கரட்டுப்பட்டியில் இருந்து கோயில்பட்டி வழியாக குரியம்மாள்புரம் செல்லும் ரோடு போட்டு பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது ரோடுக்கான சுவடே தெரியவில்லை. வடிகால் வசதி இல்லாததால் கழிவு நீர் ரோட்டில் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மழைபெய்தால் ரோட்டின் வழியாக வந்து குடியிருப்பில் புகுந்து விடுகிறது. கொசுக்கள் தொல்லையால் நோய் பரவுகிறது. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற ரங்கசமுத்திரம் அல்லது தேனி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி செல்ல வேண்டும். பஸ் வசதி இல்லாததால் சில கி.மீ.,தூரம் நடந்துதான் செல்ல வேண்டும். விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள இப்குதி மக்களுக்கு நூறு நாள் வேலை கூட தொடர்ந்து கிடைப்பதில்லை.



டி.போஜன்: ரங்கசமுத்திரம் கண்மாயில் குறைந்த அளவே நீர் தேங்குவதால் முழுமையான விவசாயம் செய்ய முடிவதில்லை. விவசாயம் நசிந்து போனாலும் கால்நடை வளர்ப்பில் கவனம் செலுத்துகின்றனர். இப்பகுதியில் கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ள இப்பகுதி மக்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ரங்கசமுத்திரம் செல்ல வேண்டும். கோவில்பட்டியில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும். மழை நீர் வடிந்து செல்ல ரோட்டின் இருபுறமும் கட்டப்பட்ட சாக்கடை சேதம் அடைந்துள்ளது. ரோட்டின் உயரத்தை விட சாக்கடை உயரமாக உள்ளது. இதனால் மழைகாலத்தில் தேங்கும் நீர் சாக்கடையில் கலக்காமல் ரோட்டில் தேங்கி விடுகிறது. மழைகாலத்தில் வீணாகி செல்லும் நீரை சங்கு ஊரணியில் தேக்கினால் நிலத்தடி நீர் பெருகும். சங்கு ஊரணிக்கு செல்லும் வடிகால் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. பராமரிப்பு இல்லை.



ஆர்.சின்னம்மாள்: சாக்கடைகளை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்களை ஊராட்சி நிர்வாகம் அனுப்புவதில்லை. ஊருக்குள் தேங்கும் கழிவு நீர், குப்பைகள் பல மாதங்களாக அள்ளப்படாததால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. மழை காலம் துவங்கும் முன் சாக்கடை அடைப்புகளை சரி செய்து குப்பைகளை அகற்ற வேண்டும். கிலிச்சியம்மன் கோயில் அருகில் சாக்கடை அடைப்புக்கு தீர்வு கிடைக்க புதிய பாலம் கட்ட வேண்டும். விவசாய தொழில் நசிந்ததால் பலரும் வெளியூருக்கு வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டு விட்டது. விவசாய நிலம் இருந்தும் நீர் இல்லாத பலரும் கூலி வேலைக்கு செல்கின்றனர். குன்னூர் ஆற்றில் உபரியாக கலக்கும் நீரை ரங்கசமுத்திரம் கண்மாயில் தேக்கினால் இரு போக சாகுபடி செய்யலாம். இறவை பாசன நிலங்களில் மூன்று போகம் செய்யலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us