ADDED : செப் 04, 2011 10:59 PM

புதுடில்லி: 'தூக்குத் தண்டனைக் கைதி அப்சல் குருவின் பாதுகாப்புச் செலவுகள் தொடர்பான, கணக்கு விவரங்கள் எதுவும் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை' என, திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2001 டிசம்பர் 13ல் பார்லிமென்ட் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பாக, கைது செய்யப்பட்ட அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 'அப்சல் குருவின் பாதுகாப்புச் செலவுகள் குறித்த கணக்கு விவரங்களை தர வேண்டும்' என, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஆமதாபாத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் கேட்டது. இந்த மனுவைப் பதிவு செய்த மத்திய உள்துறை அமைச்சகம், டில்லி மாநில அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்தது. எனினும், இந்த விவகாரம் உள்துறை அமைச்சகத்துடன் தொடர்புடையது எனக் கூறிய, டில்லி மாநில அரசு, மனுவை திருப்பி அனுப்பியது. இறுதியில், மனுவிற்கான பதில் கேட்டு, திகார் சிறையில் உள்ள சிறைத்துறை இயக்குனரகத்திற்கு, உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது. இதற்கு பதிலளித்துள்ள திகார் சிறை நிர்வாகம், 'அப்சல் குரு உட்பட திகார் சிறையில் உள்ள ஒவ்வொரு கைதிக்கும் செலவிடப்படும் உணவு, பாதுகாப்புச் செலவுகள் தொடர்பாக, தனிப்பட்ட கணக்கு விவரங்கள் எதுவும் பராமரிக்கப்படுவதில்லை' என, கூறியுள்ளது.