சிறுவன் கடத்தல் தொடர்பாக டிரைவரிடம் போலீஸ் விசாரணை
சிறுவன் கடத்தல் தொடர்பாக டிரைவரிடம் போலீஸ் விசாரணை
சிறுவன் கடத்தல் தொடர்பாக டிரைவரிடம் போலீஸ் விசாரணை
ADDED : ஆக 19, 2011 11:05 PM

தூத்துக்குடி: தூத்துக்குடியில், 5 கோடி ரூபாய் கேட்டு சிறுவன் கட்தப்பட்ட வழக்கில் அவர்களது கார் டிரைவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலில் முக்கிய புள்ளிக்கு தொடர்புண்டா? என விசாரணை நடக்கிறது.தூத்துக்குடி, பிரையண்ட் நகர், ஷிப்பிங் கம்பெனி உரிமையாளர் ராஜ்குமார். இவரது மனைவி பிளவர், மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலரான இவர், சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார். இவர்களது நான்கரை வயது மகன் எல்.கே.ஜி., படிக்கும் விஷால் உமேஷ், கடந்த புதனன்று காலை பள்ளிக்கு இவர்களது காரில் சென்றபோது, டிரைவர் பாலகருப்பசாமியுடன் சேர்ந்து மர்மநபர்களால் கடத்தப்பட்டான்.
சிறுவனை விடுவிக்க, ரூ. 5 கோடி கேட்டு மர்ம நபர்கள் மிரட்டினர். கடத்தல் கும்பலை பல்வேறு இடங்களிலும் தனிப்படை போலீசார் தேடிவந்தனர். எந்த தகவலும் கிடைக்காத நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென டிரைவர் பாலகருப்பசாமியுடன், விஷால் உமேஷ் தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனிற்கு வந்தான். மர்ம நபர்கள் தங்களை தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் இறக்கிவிட்டதாகவும், அங்கிருந்து மற்றொரு வாகனத்தில் ஸ்டேஷன் வந்ததாகவும் டிரைவர் தெரிவித்தார்.
இதுகுறித்து தூத்துக்குடி எஸ்.பி.,நரேந்திரன் நாயர் கூறும்போது,'' காரில் டிரைவருடன் சென்ற சிறுவன் விஷால் உமேஷ் கடத்தப்பட்டான். பின்னர், அந்த காரை திருச்செந்தூரில் நிறுத்தி விட்டு மர்ம நபர்கள் சிறுவனுடன் வேறொரு வாகனத்தில் சென்றுள்ளனர். அங்கு நின்ற காரில் எந்த கைரேகையும் கிடைக்கவில்லை. இக்கடத்தலில் நான்கு பேர் ஈடுபட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.
இதில் டிரைவர் பாலகருப்பசாமிக்கு தொடர்புண்டா? என விசாரணை நடக்கிறது. கடத்தல்காரர்கள் அவரை அடித்துள்ளனர். கயிறால் கட்டி போட்டனரா? எனத்தெரியவில்லை. ஆனால், சிறுவனை அடிக்கவில்லை. இருவரையும் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர். தங்களை போலீசார் சுட்டுப்பிடிக்க முயற்சிக்கின்றனர், என்ற தகவல் பரவியதும் பயத்தில் சிறுவன், டிரைவரை கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளனர். அவர்கள் முகமூடி அணிந்ததாகவோ, ஆயுதம் வைத்திருந்ததாகவே தகவல் இல்லை.
கடத்தலுக்கு காரணம் என்ன: ராஜ்குமாருக்கு தொழில்போட்டி காரணமாக, அவரது மகன் கடத்தப்படவில்லை. பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கடத்தப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது. அதுகுறித்தும் விசாரணை நடக்கிறது. நேற்று(நேற்று முன்தினம்) அவர்கள் விஷால் உமேசுக்கு சரியாக உணவு தரவில்லை. அவன், இரவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டபின், நன்கு சாப்பிட்டுள்ளான்.
மொபைல்போன் மூலம் அவனது பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டி, பலமுறை பேசியது ஒரே நபர் தான். டிரைவரின் அந்த மொபைல் போன் எங்கே என விசாரிக்கப்படுகிறது. சிறுவனை கடத்திய மர்ம நபர்கள் யார், எதற்காக கடத்தினர்? என தொடர் விசாரணை நடந்து வருகிறது. சிறுவன், டிரைவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதைவைத்து, கடத்தல்காரர்களை 7 தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.
அவர்களிடமிருந்து சிறுவனை பத்திரமாக மீட்க வேண்டுமென்ற ஒரே நோக்கில் செயல்பட்டோம். அதை சாதித்துள்ளோம். அதற்காக பணம் எதுவும் தரப்படவில்லை,'' என்றார்.
இக்கடத்தலில், தூத்துக்குடி முக்கிய புள்ளிக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதே எனக்கேட்டதற்கு,'' அதுகுறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது'' என்றார். இதனிடையே சிறுவன், பெற்றோர், டிரைவரிடம் போலீஸ் உயர்அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி-சர்ட் வாங்கித்தந்தனர்: தந்தையின் நண்பர் கூப்பிடுவதாகக் கூறி சிறுவனை கடத்திச்சென்ற மர்மநபர்கள், அவனுக்கு கடையில் புதிய டி.சர்ட் வாங்கித்தந்துள்ளனர். பின், பள்ளி சீருடையை கழற்றச் சொல்லி விட்டு, டி.சர்ட்டை அணிவித்துள்ளனர். அன்றிரவு அவனை ஒரு வீட்டில் தங்க வைத்த மர்ம நபர்கள் இட்லி வாங்கித் தந்துள்ளனர். ஆனால், நேற்று முன்தினம் சரியாக சாப்பாடு தரவில்லை என, விசாரணையில் சிறுவன் தெரிவித்தான்.


